Saturday 19 September 2015

உலகின் முதல் கண் தானம் | அறுபத்து மூவர் வரலாறு பகுதி – 19

ரத்தம் வடிந்துக் கொண்டிருந்த சுடர்விழியனின் அந்த ஒரு கண்ணில் தன் கைகளால் துடைத்து பார்த்தான். ஆனாலும் ரத்தம் வந்துக்கொண்டேதான் இருந்தது. குடுமி சாமியை காயப்படுத்தியது யார் என கோபம் கொண்ட திண்ணன், பிறகு ஏதோ யோசித்தவனாக, வெளியே ஒடி சென்றான். ஒரு சில நிமிடங்களில், வில் அம்பினால் காயம்பட்டால் வனவேடர்கள் வழக்கமாக மருந்தாக பயன்படுத்தும் அரிய வகை மூலிகையை பறிந்துக்கொண்டு ஓடி வந்தான். அதனை தம் இரு கரங்களால் கசக்கி ரத்தம் வடியும் சுடர்க்கண்ணனான ஈசனின் கண்ணில் ஊற்றினான். அவன் முயற்சிக்கு மரியாதை தரும் விதமாக சிவபெருமான் தம் கண்ணில் இரத்தம் வடிவதை ஒரு சில விநாடிகள் மட்டும் திண்ணன் மகிழ்வதற்காக நிறுத்திக்கொண்டார். ஆனால் மீண்டும் இரத்தம் சொட்ட ஆரம்பித்தது. முன்னிலும் அதிகமாக. இரத்தம் நின்றிருந்த அந்த ஒரு சில விநாடிகள் நிம்மதியடைந்த திண்ணன் மீண்டும் இரத்தம் வருவதை கண்டு வேறு வழியை யோசித்தான். முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும் என்று தீர்மானித்து, யவராலும் யூகிக்க முடியாத ஒரு மருந்தை கண்டுபிடித்தான். ஆம். குடுமி சாமியின் கண் நோய்க்கு தம்முடைய கண்ணே மருந்து என உறுதியாக நம்பினான். ஒரு அம்பை எடுத்து தன்னுடைய ஒரு கண்ணை தோண்டி எடுத்து சிவலிங்கத்தின் புண்பட்ட கண்ணில் தன் கண்ணை அப்பினான்.

அடுத்த விநாடியே ஈசனின் கண்ணில் வழிந்துக்கொண்டிருந்த இரத்தம் நின்றது. அவன் செயலை நேரடியாக கண்ட சிவகோச்சாரியார் அதிர்ந்தே போனார். இத்தனை நாள் நாம்தான் சிறந்த சிவபக்தன் என்று நினைத்து, என்னையே நான் ஏமாற்றி வந்தேனே. இதோ… இவன் தான்… இந்த திண்ணன்தான் சிறந்த சிவபக்தன் என்று ஆனந்தம் அடைந்தார். “சரி இன்னும் என்னதான் நடக்கிறது என்று பார்ப்போம்” என்று தன் முன்னால் நடந்துக்கொண்டிருக்ககும் அதிசய காட்சியை தொடர்ந்து மறைந்து நின்றபடியே கவனித்தார் சிவகோச்சாரியார். தன் கண்ணை குத்தி எடுத்து சிவலிங்கத்தின் கண்ணில் பதித்த அடுத்த விநாடியே ஈசனின் கண்ணில் வழிந்துக்கொண்டிருந்த இரத்தம் நின்றதை பார்த்த திண்ணன் மகிழ்ந்தான். ஆனந்த கூத்தாடினான். வாய் விட்டு கம்பீரமாக சிரித்தான். குடுமி சாமிக்கு தன்னுடைய கண்ணை “தானமாக“ வழங்கிய பெரும் மகிழ்ச்சியில் தன் வலியை மறந்தான் திண்ணன். ஆனால் – கயிலைமன்னன் – காளத்திநாதன் மீண்டும் நாம் திருவிளையாடல் புரிந்தால் என்ன? என யோசித்தானோ அல்லது காளத்தி வேடனான திண்ணனின் சிவதொண்டை உலகுக்கு உணர்த்த இந்த புகழ் போதாதே என்று கருதினானோ என்னவோ? குடுமி சாமி இப்போது தமது இடது கண்ணில் இருந்து ரத்தம் வடியும்படி செய்துக்கொண்டார். “குடுமி சாமியின் வலது கண்ணில் ரத்தம் வடிவது நின்றது என்றால், இப்போது இடது கண்ணில் இருந்து ரத்தம் வடிகிறதே“ என்று அதிர்ச்சி அடைந்தான் திண்ணன். மறுகணமே – சற்றும் தாமதிக்காமல், “ஒன்றும் பிரச்னையில்லை.. எனக்குதான் மற்றோரு கண் இருக்கிறதே.. அதையும் தோண்டி குடுமி சாமிக்கு வைத்தால் இரத்தம் நிற்றுவிட போகிறது..

குடுமி சாமி கவலைப்படாதே என்னுடைய இன்னொரு கண்ணையும் உனக்கே தருகிறேன். இப்போது எல்லாம் சரியாகிவிடும்” என்று தன் நண்பனிடம் பேசுவதை போல் பேசிய திண்ணன், தன் இன்னொரு கண்ணையும் தோண்டி எடுத்த பிறகு அதனை குடுமி சாமியின் இடது கண்ணில் சரியாக பொருத்த வேண்டுமே என்பதால், தன் இடது கால் பாதத்தை இரத்தம் வடியும் ஈசனின் கண்ணில் ஊன்றி கொண்டு தன் இன்னொரு கண்ணையும் அம்பால் தோண்டி எடுப்பதற்கு முயன்றான். இதற்கு மேல் திண்ணணை சோதிக்க விரும்பாத சிவபெருமான், “கண்ணப்பா நில், நில் கண்ணப்பா, நில் கண்ணப்பா” என்று மூன்று முறை சொல்லி திண்ணனின் கையை பிடித்துக் கொண்டு தடுத்தான் முக்கண்ணன். இந்த அற்புத நிகழ்வை மறைந்திருந்த பார்த்த சிவகோச்சாரியரின் கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வடிந்தது. “ஒரு வனவேடனுக்கு இருக்கும் அளவுக்கு சிவபக்தி தனக்கு இல்லையே. இவனே உண்மையான சிவபக்தன்.” என்று வனவேடனான திண்ணனை, இல்லையில்லை… சிவபெருமானால் பெயர் சூட்டபட்ட கண்ணப்பரையும் வணங்கினார் சிவகோச்சாரியார். “கண்ணப்பா.. உமது கண் எனது வலது கண்ணில் இருப்பதால், நீ இன்றுமுதல் எமது வலப் பக்கத்தில் நிற்பாயாக.” என்று அருளினார் பிறவாப்பெரியோனான சிவபெருமான்.

இறைவனுக்கே தன் கண்ணை தந்ததால், முதன் முதலில் கண் தானம் செய்த பெருமையும் கண்ணப்ப நாயனாருக்கே உண்டு. திருகாளத்திநாதனை நாம் வணங்கும்போது பெருமானின் வலது பக்கத்தில் கண்ணப்ப நாயனாரும் நமக்கு அருள்பாலிக்கிறார் என்பதையும் நினைத்து மறக்காமல் போற்றுங்கள் – வணங்குங்கள்.

Read More at: bhakthiplanet.com/2015/09/arubathu-moondru-nayanmargal-kannappa-nayanar-part-19/ © BHAKTHIPLANET.COM

No comments:

Post a Comment