Saturday 19 September 2015

தீய சகுனங்களை எதிர்கொண்ட திண்ணன் | அறுபத்து மூவர் வரலாறு – பகுதி 18

மறுநாள் சூரியன் மெல்ல கிழக்கில் எட்டி பார்த்து, பின் பிராகசித்து எழுந்தது. உணவுக்காக வேட்டைக்கு சென்றான் திண்ணன். திண்ணன் சென்ற சில மணி நேரத்தில் சிவகோச்சாரியார் வழக்கம்போல் திருகாளத்தி மலைக்கு வந்தார். சிவலிங்கத்தின் அருகே மாமிசத்தை கண்டார். “எவனோ வனவேடன் மாமிசத்தை படைக்கிறானே? இது என்ன கொடுமை?” என்று மனம் வருந்தினார். பொதுவாக, நம் நாட்டுக்கு என ஒரு பழக்கம் உண்டு, பக்கத்து நாட்டுக்கு என்று ஒரு பழக்க வழக்கம் இருக்கும். இவற்றில் எது சரி – எது தவறு? என்று அந்த நாட்டவர்க்கு பக்கத்து நாட்டவரின் சட்டம் தெரியாது. அதுபோல்தான் திண்ணனை பொறுத்தவரை, தாம் செய்வதே சரி என்று நினைத்தான். ஆனால் சிவகோச்சாரியாரோ, ஆச்சாரத்தை அனுசரித்து வாழ்பவர் அல்லவா? அதனால் மாமிச படையலை அபச்சாரமாக கருதினார். “ஈஸ்வரா.. .தினமும் எவனோ ஒரு வனவேடன் உன் சந்நதியில் மாமிசத்தை வைத்து விட்டு செல்கிறானே.. அவனை தண்டிக்கமாட்டியா?“ என்று கதறினார். மனஅமுத்தத்துடனும், மிகுந்த மனபாரத்துடனும் தன் இல்லத்திற்கு திரும்பினார் சிவகோச்சாரியார்.

அன்றிரவு – கண்களில் நீர் சொரிய உறங்கினார் சிவகோச்சாரியார். அப்போது அவர் கனவில் சிவபெருமானான சோதியன் தோன்றி, “நீ எமக்கு சமர்ப்பிக்கும் மலர்களை தன் கால்களால் நீக்குவது எமது திருகுமரனே. அவன் பாதம் நமக்கு மலர்களை விட மெருதுவனானதே. அவன் வாயிலிருந்து உமிழும் நீர் கங்கை நீரை விட தூய்மையானது. அவன் தன் குடுமியில் வைத்த மலர்களை எமக்கு அனிவிக்கும் போது திருமால், Bhakthi Planetபிரம்மன் அணிவித்த மலர்களும் ஈடாகாது. அவன் சமைத்த இறைச்சியை அவனே அவன் வாயில் சுவை பார்த்த பிறகு எமக்கு படைக்கும் அந்த இறைச்சி வேத விதிப்படி வேள்விகளில் வேதியர்கள் முதலில் கொடுக்கும் அவிர் பாகத்தை விட எமக்கு திருப்தியாக இருக்கிறது. அவன் தூய்மையான அன்புக்கு நிகர் ஏது? அதை நீயே நாளை தெரிந்துக் கொள்வாய். நாளை நீ இந்த உண்மையை மறைந்திருந்து காண்பாயாக” என்று சிவகோசாரியரின் கனவில் சொல்லற்கரியான் சொல்லி மறைந்தார்.

சிவகோச்சாரியாரின் தூக்கம் கலைந்தது. எப்போது விடியுமோ என காத்திருந்தார். பொழுது விடிந்ததும் அவசர அவசரமாக பொன் முகலியாற்றில் நீராடி திருக்காளத்தி நாதரை வணங்கி பூசித்து விழிபட்ட பிறகு ஈசன் கூறியதுபோல சிவலிங்கத்தின் பின்புறமான ஒர் இடத்தில் ஒளிந்துக்கொண்டார். ஆறாம் நாள் திண்ணனின் வாழ்வை மாற்றிய நாள். அன்று ஆறாம் நாள். திண்ணன் வழக்கம்போல் காட்டில் மிருகங்களை வேட்டையாடி, அதை சமைத்து, நீரையும் பூக்களையும் எடுத்துக்கொண்டு வரும்பொது பல தீய சகுனங்கள் எதிர்ப்பட்டதை உணர்ந்தான். “ஏதோ நடக்க போகிறது… குடுமி சாமிக்கு ஏதாவது பிரச்னையோ?“ என பதறி அடித்துக்கொண்டு திருகாளத்தி மலை மேல் வந்தடைந்தான். அங்கே அவன் கண்ட காட்சி அவனுக்கு பெரிய அதிர்ச்சியை தந்தது. சிவலிங்கமான குடுமி சாமியின் ஒரு கண்ணில் இருந்து ரத்தம் வடிந்துக்கொண்டிருந்தது. அதை பார்த்த திண்ணன் செய்வதறியாது திகைத்து நின்றான். அந்த அதிர்ச்சி அவனை மயக்கத்தில் தள்ளியது. தரையில் அப்படியே விழுந்தான். சில மணி துளிகள் கடந்து, மயக்கம் தெளிந்து எழுந்தான். ரத்தம் வடிந்துக் கொண்டிருந்த சுடர்விழியனின் அந்த ஒரு கண்ணில் தன் கைகளால் துடைத்து பார்த்தான். ஆனாலும் ரத்தம் வந்துக்கொண்டேதான் இருந்தது. “எவன் என் குடுமி சாமியை இப்படி காயப்படுத்தியது?“ என்று அந்த வனமும், மலையும், விண்ணும் அதிர ஆத்திரமாக சிங்கமென கர்ஜித்தான். அவன் கோப குரலை கேட்டு காட்டில் கொடிய மிருகங்களும் ஓடி ஒளிந்தது. ஒளிந்திருந்து இக்காட்சியை பார்த்துக்கொண்டிருந்த சிவகோச்சாரியார் திடுக்கிட்டு நடுநடுங்கி போனார். திண்ணனின் கண்களில் அவ்வளவு ஆக்ரோஷம். எந்த ஒரு சாமானிய மனிதர்களிடமும் இவ்வளவு ஆக்ரோஷத்தை சிவகோச்சாரியார் கண்டதில்லை. அப்போது திண்ணன் ஏதோ யோசித்தவனாக வெளியே ஒடினான்.


No comments:

Post a Comment