Friday 25 December 2015

சிதம்பரம் நடராஜர் கோயில் ரகசியம்


சிதம்பரம் நடராஜர் கோயில் ரகசியம் என்று பலரும் பல விசயங் களை கூறிவரும் வேலையில், அந்த கோயிலில் இருக்கும் அறிவியல், பொ றியியல், புவியியல், கணிதவியல், மருத்துவ வியல் குறித்த ஆச்சரியங்க ளின் சில தகவல்கள்.

முன்னோர்கள் செய்த எல்லா செயல் களும் ஒரு தெளிவான சிந் தனையை நோக்கியே பயணித்துள்ளது, சிதம்பர ம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற் புதமான ரகசியங்கள் இவைகள்தான்.”

(1) இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. ( Centre Point of World’s Magnetic Equator ).
(2)பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறி க்கும் தில்லை நட ராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத் தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUTE ) அமைந்துள்ளது, இன்று google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்த துல்லி யம் அன்றை க்கு கணிக்கப்பட்டது ஒரு பொறியியல், புவியியல் மற் றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம்.

(3) மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக் கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உட லில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது.
(4) விமானத்தின்மேல் இருக்கும் பொற்கூரை 21,600 தங்கத்தகடு களை கொண்டு வேயப்பட்டுள் ளது, இது மனிதன் ஒரு நாளை க்கு சராசரியாக 21600 தடவை கள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கி ன்றது (15*60*24 = 21,600).

(5) இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத் தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இரு க்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது. இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்ப வையும் அடங்கும்.

(6) திருமந்திரத்தில் ” திருமூலர்”

மானுடராக்கை வடிவு சிவலிங்கம்
மானுடராக்கை வடிவு சிதம்பரம்
மானுடராக்கை வடிவு சதாசிவம்
மானுடராக்கை வடிவு திருக்கூத்தே

என்று கூறுகிறார், அதாவது ” மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்ப ரம், அதுவே சதாசிவம், அதுவே அவரி ன் நடனம்”. என்ற பொருளைக் குறிகி ன்றது.


(7) “பொன்னம்பலம்” சற்று இடது புற மாக அமைக்கப்பட்டுள்ளது, இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும்.இந்த இடத்தை அடை ய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை “பஞ்சாட்சர படி” என்று அழைக்கப் படுகின்றது, அதாவது “சி,வா,ய,ந,ம” என்ற ஐந்து எழுத் தே அது. “கனகசபை” பிற கோயில் களில் இருப்பதை போன்று நேரான வழி யாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின் றது . இந்த கனக சபை தாங்க 4 தூண்கள் உள்ளன,இது 4 வேதங்களை குறிக் கின்றது,

(8)பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங் களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (BEAM ), இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கி ல் செல்லும் பல பலகைகள் (CROSS BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த நாணங்களை குறிக்கின்றது.

(9) பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது. அர்த்த மண்ட பத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திர ங்களையும், அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கி ன்றது.
(10) சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண் டிருக்கும் ஆனந்த தாண்டம் என்ற கோலம் “cosmic dance” என்று பல வெளிநாட்டு அறிஞர்க ளால் அழைக்கபடுகின்றது.

CERN அராய்ச்சிக் கூடத்தில் நடராஜர்!
சிதம்பரம் கோவிலில் நடனக் கலையின் அரசனான சிவன் ‘நடராஜன்’ என்ற சிலை வடிவில் இருக்கின்றான். அணுவைப் பிளந்து மேற்கொள்ளும் ஆராய்ச்சி உலகிலேயே அங்குதான் நடைபெறுகின்றது. அந்த பரிசோதனைச் சாலையின் வாயிலில் நடராஜரின் சிலைவடிவம் வைக்கப்பட்டிருந்தது. ஏனெனில் அணுக்கூறுகளின் இயக்கங்களை ஒத்திருக்கும் மனித கலாச்சார விஷயத்தில் நடராஜரின் நடன வடிவமே அதற்குப் பொருந்தியுள்ளதாக விஞ்ஞானிகள் கண்டுள்ளனர்.


ஆகாய உருவில் இறைவன்!


சிதம்பர ரகசியம் என்பது, சிதம்பரத்தில் மிக முக்கியமானதாகும். சிற்சபையில், சபாநாயகரின் வலது பக்கத்தில் உள்ளது, ஒரு சிறு வாயில். இதன் திரை அகற்றப்படும்போது, கற்பூர ஆரத்தி காட்டப்படும். இதனுள்ளே, திருவுருவம் ஏதும் இல்லை. தங்கத்தினாலான, வில்வ தள மாலை ஒன்று சுவரில் தொங்கவிடப்பட்டுக் காட்சி அளிக்கும். மூர்த்தி ஏதும் இல்லாமலேயே, வில்வ தள மாலை தொங்கும். இதன் ரகசியம், இங்கு இறைவன் ஆகாய உருவில் இருக்கிறார் என்பதை உணர்த்துவதே! அகண்ட பெருவெளியில் நிறைந்திருக்கும் இறைவனை, வெறும் வெளியையே காட்டி, இங்கு வழிபட வகை செய்யப்பட்டுள்ளது. இது தான், 'சிதம்பர ரகசியம்' என, அனைவராலும் போற்றி வழிபாடு செய்யப்படுகிறது.

Saturday 19 September 2015

உலகின் முதல் கண் தானம் | அறுபத்து மூவர் வரலாறு பகுதி – 19

ரத்தம் வடிந்துக் கொண்டிருந்த சுடர்விழியனின் அந்த ஒரு கண்ணில் தன் கைகளால் துடைத்து பார்த்தான். ஆனாலும் ரத்தம் வந்துக்கொண்டேதான் இருந்தது. குடுமி சாமியை காயப்படுத்தியது யார் என கோபம் கொண்ட திண்ணன், பிறகு ஏதோ யோசித்தவனாக, வெளியே ஒடி சென்றான். ஒரு சில நிமிடங்களில், வில் அம்பினால் காயம்பட்டால் வனவேடர்கள் வழக்கமாக மருந்தாக பயன்படுத்தும் அரிய வகை மூலிகையை பறிந்துக்கொண்டு ஓடி வந்தான். அதனை தம் இரு கரங்களால் கசக்கி ரத்தம் வடியும் சுடர்க்கண்ணனான ஈசனின் கண்ணில் ஊற்றினான். அவன் முயற்சிக்கு மரியாதை தரும் விதமாக சிவபெருமான் தம் கண்ணில் இரத்தம் வடிவதை ஒரு சில விநாடிகள் மட்டும் திண்ணன் மகிழ்வதற்காக நிறுத்திக்கொண்டார். ஆனால் மீண்டும் இரத்தம் சொட்ட ஆரம்பித்தது. முன்னிலும் அதிகமாக. இரத்தம் நின்றிருந்த அந்த ஒரு சில விநாடிகள் நிம்மதியடைந்த திண்ணன் மீண்டும் இரத்தம் வருவதை கண்டு வேறு வழியை யோசித்தான். முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும் என்று தீர்மானித்து, யவராலும் யூகிக்க முடியாத ஒரு மருந்தை கண்டுபிடித்தான். ஆம். குடுமி சாமியின் கண் நோய்க்கு தம்முடைய கண்ணே மருந்து என உறுதியாக நம்பினான். ஒரு அம்பை எடுத்து தன்னுடைய ஒரு கண்ணை தோண்டி எடுத்து சிவலிங்கத்தின் புண்பட்ட கண்ணில் தன் கண்ணை அப்பினான்.

அடுத்த விநாடியே ஈசனின் கண்ணில் வழிந்துக்கொண்டிருந்த இரத்தம் நின்றது. அவன் செயலை நேரடியாக கண்ட சிவகோச்சாரியார் அதிர்ந்தே போனார். இத்தனை நாள் நாம்தான் சிறந்த சிவபக்தன் என்று நினைத்து, என்னையே நான் ஏமாற்றி வந்தேனே. இதோ… இவன் தான்… இந்த திண்ணன்தான் சிறந்த சிவபக்தன் என்று ஆனந்தம் அடைந்தார். “சரி இன்னும் என்னதான் நடக்கிறது என்று பார்ப்போம்” என்று தன் முன்னால் நடந்துக்கொண்டிருக்ககும் அதிசய காட்சியை தொடர்ந்து மறைந்து நின்றபடியே கவனித்தார் சிவகோச்சாரியார். தன் கண்ணை குத்தி எடுத்து சிவலிங்கத்தின் கண்ணில் பதித்த அடுத்த விநாடியே ஈசனின் கண்ணில் வழிந்துக்கொண்டிருந்த இரத்தம் நின்றதை பார்த்த திண்ணன் மகிழ்ந்தான். ஆனந்த கூத்தாடினான். வாய் விட்டு கம்பீரமாக சிரித்தான். குடுமி சாமிக்கு தன்னுடைய கண்ணை “தானமாக“ வழங்கிய பெரும் மகிழ்ச்சியில் தன் வலியை மறந்தான் திண்ணன். ஆனால் – கயிலைமன்னன் – காளத்திநாதன் மீண்டும் நாம் திருவிளையாடல் புரிந்தால் என்ன? என யோசித்தானோ அல்லது காளத்தி வேடனான திண்ணனின் சிவதொண்டை உலகுக்கு உணர்த்த இந்த புகழ் போதாதே என்று கருதினானோ என்னவோ? குடுமி சாமி இப்போது தமது இடது கண்ணில் இருந்து ரத்தம் வடியும்படி செய்துக்கொண்டார். “குடுமி சாமியின் வலது கண்ணில் ரத்தம் வடிவது நின்றது என்றால், இப்போது இடது கண்ணில் இருந்து ரத்தம் வடிகிறதே“ என்று அதிர்ச்சி அடைந்தான் திண்ணன். மறுகணமே – சற்றும் தாமதிக்காமல், “ஒன்றும் பிரச்னையில்லை.. எனக்குதான் மற்றோரு கண் இருக்கிறதே.. அதையும் தோண்டி குடுமி சாமிக்கு வைத்தால் இரத்தம் நிற்றுவிட போகிறது..

குடுமி சாமி கவலைப்படாதே என்னுடைய இன்னொரு கண்ணையும் உனக்கே தருகிறேன். இப்போது எல்லாம் சரியாகிவிடும்” என்று தன் நண்பனிடம் பேசுவதை போல் பேசிய திண்ணன், தன் இன்னொரு கண்ணையும் தோண்டி எடுத்த பிறகு அதனை குடுமி சாமியின் இடது கண்ணில் சரியாக பொருத்த வேண்டுமே என்பதால், தன் இடது கால் பாதத்தை இரத்தம் வடியும் ஈசனின் கண்ணில் ஊன்றி கொண்டு தன் இன்னொரு கண்ணையும் அம்பால் தோண்டி எடுப்பதற்கு முயன்றான். இதற்கு மேல் திண்ணணை சோதிக்க விரும்பாத சிவபெருமான், “கண்ணப்பா நில், நில் கண்ணப்பா, நில் கண்ணப்பா” என்று மூன்று முறை சொல்லி திண்ணனின் கையை பிடித்துக் கொண்டு தடுத்தான் முக்கண்ணன். இந்த அற்புத நிகழ்வை மறைந்திருந்த பார்த்த சிவகோச்சாரியரின் கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வடிந்தது. “ஒரு வனவேடனுக்கு இருக்கும் அளவுக்கு சிவபக்தி தனக்கு இல்லையே. இவனே உண்மையான சிவபக்தன்.” என்று வனவேடனான திண்ணனை, இல்லையில்லை… சிவபெருமானால் பெயர் சூட்டபட்ட கண்ணப்பரையும் வணங்கினார் சிவகோச்சாரியார். “கண்ணப்பா.. உமது கண் எனது வலது கண்ணில் இருப்பதால், நீ இன்றுமுதல் எமது வலப் பக்கத்தில் நிற்பாயாக.” என்று அருளினார் பிறவாப்பெரியோனான சிவபெருமான்.

இறைவனுக்கே தன் கண்ணை தந்ததால், முதன் முதலில் கண் தானம் செய்த பெருமையும் கண்ணப்ப நாயனாருக்கே உண்டு. திருகாளத்திநாதனை நாம் வணங்கும்போது பெருமானின் வலது பக்கத்தில் கண்ணப்ப நாயனாரும் நமக்கு அருள்பாலிக்கிறார் என்பதையும் நினைத்து மறக்காமல் போற்றுங்கள் – வணங்குங்கள்.

Read More at: bhakthiplanet.com/2015/09/arubathu-moondru-nayanmargal-kannappa-nayanar-part-19/ © BHAKTHIPLANET.COM

தீய சகுனங்களை எதிர்கொண்ட திண்ணன் | அறுபத்து மூவர் வரலாறு – பகுதி 18

மறுநாள் சூரியன் மெல்ல கிழக்கில் எட்டி பார்த்து, பின் பிராகசித்து எழுந்தது. உணவுக்காக வேட்டைக்கு சென்றான் திண்ணன். திண்ணன் சென்ற சில மணி நேரத்தில் சிவகோச்சாரியார் வழக்கம்போல் திருகாளத்தி மலைக்கு வந்தார். சிவலிங்கத்தின் அருகே மாமிசத்தை கண்டார். “எவனோ வனவேடன் மாமிசத்தை படைக்கிறானே? இது என்ன கொடுமை?” என்று மனம் வருந்தினார். பொதுவாக, நம் நாட்டுக்கு என ஒரு பழக்கம் உண்டு, பக்கத்து நாட்டுக்கு என்று ஒரு பழக்க வழக்கம் இருக்கும். இவற்றில் எது சரி – எது தவறு? என்று அந்த நாட்டவர்க்கு பக்கத்து நாட்டவரின் சட்டம் தெரியாது. அதுபோல்தான் திண்ணனை பொறுத்தவரை, தாம் செய்வதே சரி என்று நினைத்தான். ஆனால் சிவகோச்சாரியாரோ, ஆச்சாரத்தை அனுசரித்து வாழ்பவர் அல்லவா? அதனால் மாமிச படையலை அபச்சாரமாக கருதினார். “ஈஸ்வரா.. .தினமும் எவனோ ஒரு வனவேடன் உன் சந்நதியில் மாமிசத்தை வைத்து விட்டு செல்கிறானே.. அவனை தண்டிக்கமாட்டியா?“ என்று கதறினார். மனஅமுத்தத்துடனும், மிகுந்த மனபாரத்துடனும் தன் இல்லத்திற்கு திரும்பினார் சிவகோச்சாரியார்.

அன்றிரவு – கண்களில் நீர் சொரிய உறங்கினார் சிவகோச்சாரியார். அப்போது அவர் கனவில் சிவபெருமானான சோதியன் தோன்றி, “நீ எமக்கு சமர்ப்பிக்கும் மலர்களை தன் கால்களால் நீக்குவது எமது திருகுமரனே. அவன் பாதம் நமக்கு மலர்களை விட மெருதுவனானதே. அவன் வாயிலிருந்து உமிழும் நீர் கங்கை நீரை விட தூய்மையானது. அவன் தன் குடுமியில் வைத்த மலர்களை எமக்கு அனிவிக்கும் போது திருமால், Bhakthi Planetபிரம்மன் அணிவித்த மலர்களும் ஈடாகாது. அவன் சமைத்த இறைச்சியை அவனே அவன் வாயில் சுவை பார்த்த பிறகு எமக்கு படைக்கும் அந்த இறைச்சி வேத விதிப்படி வேள்விகளில் வேதியர்கள் முதலில் கொடுக்கும் அவிர் பாகத்தை விட எமக்கு திருப்தியாக இருக்கிறது. அவன் தூய்மையான அன்புக்கு நிகர் ஏது? அதை நீயே நாளை தெரிந்துக் கொள்வாய். நாளை நீ இந்த உண்மையை மறைந்திருந்து காண்பாயாக” என்று சிவகோசாரியரின் கனவில் சொல்லற்கரியான் சொல்லி மறைந்தார்.

சிவகோச்சாரியாரின் தூக்கம் கலைந்தது. எப்போது விடியுமோ என காத்திருந்தார். பொழுது விடிந்ததும் அவசர அவசரமாக பொன் முகலியாற்றில் நீராடி திருக்காளத்தி நாதரை வணங்கி பூசித்து விழிபட்ட பிறகு ஈசன் கூறியதுபோல சிவலிங்கத்தின் பின்புறமான ஒர் இடத்தில் ஒளிந்துக்கொண்டார். ஆறாம் நாள் திண்ணனின் வாழ்வை மாற்றிய நாள். அன்று ஆறாம் நாள். திண்ணன் வழக்கம்போல் காட்டில் மிருகங்களை வேட்டையாடி, அதை சமைத்து, நீரையும் பூக்களையும் எடுத்துக்கொண்டு வரும்பொது பல தீய சகுனங்கள் எதிர்ப்பட்டதை உணர்ந்தான். “ஏதோ நடக்க போகிறது… குடுமி சாமிக்கு ஏதாவது பிரச்னையோ?“ என பதறி அடித்துக்கொண்டு திருகாளத்தி மலை மேல் வந்தடைந்தான். அங்கே அவன் கண்ட காட்சி அவனுக்கு பெரிய அதிர்ச்சியை தந்தது. சிவலிங்கமான குடுமி சாமியின் ஒரு கண்ணில் இருந்து ரத்தம் வடிந்துக்கொண்டிருந்தது. அதை பார்த்த திண்ணன் செய்வதறியாது திகைத்து நின்றான். அந்த அதிர்ச்சி அவனை மயக்கத்தில் தள்ளியது. தரையில் அப்படியே விழுந்தான். சில மணி துளிகள் கடந்து, மயக்கம் தெளிந்து எழுந்தான். ரத்தம் வடிந்துக் கொண்டிருந்த சுடர்விழியனின் அந்த ஒரு கண்ணில் தன் கைகளால் துடைத்து பார்த்தான். ஆனாலும் ரத்தம் வந்துக்கொண்டேதான் இருந்தது. “எவன் என் குடுமி சாமியை இப்படி காயப்படுத்தியது?“ என்று அந்த வனமும், மலையும், விண்ணும் அதிர ஆத்திரமாக சிங்கமென கர்ஜித்தான். அவன் கோப குரலை கேட்டு காட்டில் கொடிய மிருகங்களும் ஓடி ஒளிந்தது. ஒளிந்திருந்து இக்காட்சியை பார்த்துக்கொண்டிருந்த சிவகோச்சாரியார் திடுக்கிட்டு நடுநடுங்கி போனார். திண்ணனின் கண்களில் அவ்வளவு ஆக்ரோஷம். எந்த ஒரு சாமானிய மனிதர்களிடமும் இவ்வளவு ஆக்ரோஷத்தை சிவகோச்சாரியார் கண்டதில்லை. அப்போது திண்ணன் ஏதோ யோசித்தவனாக வெளியே ஒடினான்.


திண்ணனின் வாழ்வை மாற்றிய ஆறாம் நாள் அறுபத்து மூவர் வரலாறு பகுதி – 17

திண்ணன் மலை மேல் இருக்கும் குடுமி சாமி மேல் பக்தி வைக்கவில்லை, ஒரு பிள்ளை மீது பெற்றோர் பாசம் வைப்பதை விடவும் மேலான பாசத்தை கொண்டான் திண்ணன். இரவு முழுவதும் உறங்காமல் கண் விழித்து சிவபெருமானை காத்தான் திண்ணன். உலகத்தையே காக்கும் சிவன். ஆனால் திண்ணனை பொறுத்தவரை எந்நாட்டவருக்கும் இறைவனான ஈசனை திண்ணன்தான் பத்திரமாக காக்கிறான். ஒரு சிறு எறும்பு கூட சிவலிங்கத்தின் அருகில் செல்லாதவாறு காத்து வந்தான். Bhakthi Planetஸ்ரீராமர் காட்டில் இருக்கும் போது, ஒரு விநாடி கூட உறங்காமல் லட்சுமணன் கண்ணும் கருத்துமாக துணை இருந்ததை போலவே இருந்தான் திண்ணன். பொழுது விடிந்தது. தனக்காகவும் தன் குஞ்சுகளுக்காகவும் பறவைகள் உணவுக்காக தமது கூடுகளை விட்டு பறந்தது. ஆனால் திண்ணனோ தனக்காக இல்லாமல் குடுமி சாமிக்காக வேட்டைக்கு சென்றான். அத்திருகாளாத்தியின் பக்கத்திலுள்ள காட்டில் வேட்டைக்கு சென்றான்.

அங்கே பன்றியை வேட்டையாடி கொன்றான். மான்களையும் வேட்டையாடி கொன்றான். நம் வீட்டுக்கு விருந்தினர் வந்தால் பல வகையான பதார்த்தங்களை செய்து வைப்போமே அதுபோல, குடுமி சாமிக்கு பலவிதமாக இறைச்சிகளை தீ மூட்டி அம்பின் நுணியில் மிருகங்களின் கொழுப்பு மிகுந்த பகுதிகளை தீயில் இட்டு பக்கவமாக நெருப்பில் பன்றியிறைச்சியையும், மான் இறைச்சியையும் சமைத்தான். அந்த இறைச்சியில் சுவைக்காக தேனையும் கலந்தான் திண்ணன். இறைவனுக்கு பூஜைக்குரிய மலர்களை தன் குடுமியில் வைத்துக்கொண்டு, அபிஷேகத்திற்கான நீரை தன் வாயில் வைத்து, சமைத்த இறைச்சிகளை தன் கைகளில் வைத்து கொண்டு குடுமி சாமி இருக்கும் இடத்திற்கு வந்தான். சற்று நேரத்திற்கு முன்னதாக சிவகோசாரியார் பூஜித்து சென்ற மலர்களை முன்பு போல் பாதுகை அணிந்திருநத தமது கால்களால் அகற்றினான். தனக்கு தெரிந்தவரை குடுமி சாமிக்கு பூஜை செய்து, தான் சமைத்த இறைச்சியை லிங்கத்தின் முன் வைத்து, “இந்த தடவை பன்றி, மான் இறைச்சியில் தேனை ஊற்றி சமைத்து இருக்கிறேன் சாப்பிடு சாமி ருசியா இருக்கும்“ என்று கூறினான் திண்ணன். வேட்டைக்கு சென்ற மகன் வீடு திரும்பாமல் மலைமேல் இருக்கும் குடுமி சாமியே கதி என்று இருக்கிறானே என்று மனம் வருந்தினார்


திண்ணனின் தந்தையும், திண்ணனின் நண்பர்கள் நானனும் – காடனும். அதனால் திண்ணனை காட்டில் இருந்து அழைத்து வரவேண்டும் என்ற எண்ணத்தில் தேவராட்டியையும் மற்றவர்களையும் அழைத்துக்கொண்டு திண்ணனின் இருப்பிடத்திற்கு வந்தார் திண்ணனுடைய தந்தை. திண்ணனை பார்த்ததும் அழுது விட்டார். “நீ எப்படி வாழ வேண்டியவன் பைத்தியம் பிடித்ததுபோல் இந்த குடுமி சாமியே கதி என்று இருக்கிறாயே? வேடவர்களுக்கு தலைவனாக வர வேண்டிய நீ, இப்படி யாரும் இல்லாத காட்டில் தனியாக இருக்கிறாயே? இத்தனை நாட்களாக இங்கிருந்தாய் ஒரு நாளாவது உன் எதிரில் இந்த குடுமி சாமி வந்தாரா? ஏன் இப்படி நடந்துக்கொள்கிறாய்?“ என்று திண்ணனை பார்த்து அழுதும் கொஞ்சியும் பார்த்தார். கடைசியில் கோபமாக திட்டியும் பார்த்துவிட்டார். ஆனால் திண்ணன் எதற்கும் மசியவில்லை. நெருப்பில் இரும்பை போட்டால் இரும்பு கூட உருகிவிடும். ஆனால் திண்ணனின் மனமோ இரும்பை விட கடினமாக இருந்தது. அந்த அளவுக்கு குடுமி சாமி மேல் இருந்த அன்பு காரணமாக இருந்த்து. அதனால், “குடுமி சாமியை விட்டு நான் வர மாட்டேன்” என்று ஆவேசமாக கத்தினான். இனி இவனிடம் பேசி எந்த பயனுமில்லை என்ற முடிவில் காட்டை விட்டு திண்ணனின் தந்தையும் உடன் சென்றவர்களும் திரும்பினார்கள்.


குடுமி சாமியும் பசியாக இருப்பாரா?அறுபத்து மூவர் வரலாறு பகுதி – 16

திண்ணன் சிவலிங்கத்தை பார்த்ததும் காணாமல் போன தாய் -தந்தையை பார்த்தது போல கட்டிபிடித்துகொண்டான். அப்படியே பல மணிநேரம் கண்ணீருடன் இருந்தான். திண்ணனுடன் வந்த நாணனுக்கு ஒன்றுமே புரியாமல் இருந்தது. பசி வேறு அவன் வயிற்றை கிள்ளிக்கொண்டிருந்தது. “திண்ணா வா போகலாம்” என்றான் நாணன். “நாம் சென்றுவிட்டால் இந்த குடுமிசாமி எப்படி தனியாக இருப்பார்.? குடுமி சாமியும் பசியாக இருப்பாரா? அவருக்கும் நாம் உணவு தரலாம்“ என்று கூறி கொண்டே, “சாமி உங்களுக்கு உணவு கொண்டு வருகிறேன். நான் வரும்வரை நீங்கள் பத்திரமாக இருங்கள். போன வேகத்திலேயே வந்து விடுவேன்” என்று சிவலிங்கத்திடம் கூறியபடி பிரிய மனம் இல்லாமல் பிரிந்து சென்றான் திண்ணன். பொன்முகலி ஆற்றங்கரைக்கு வந்து சேர்ந்தார்கள் திண்ணனும் நாணனும். அங்கு திண்ணனின் நண்பரான காடனிடம் திண்ணன் முன்பே சொல்லி வைத்தது போல சமைப்பதற்கு காடன் தீ மூட்டி வைத்திருந்தான். இதை கண்ட திண்ணன், “சமைப்பதற்கு நெருப்பு தயாராக இருக்கிறதா?” என்று கூறிக்கொண்டே அந்த நெருப்பின் அருகில் சென்றான். அங்கு வேட்டையாடி வைத்திருந்த பன்றியை பக்குவமாக அறுத்து அதை சுத்தமாக தண்ணீரில் கழுவி சமைப்பதற்காக தயார் செய்தான் திண்ணன். திண்ணணின் சமைக்கும் அவசரத்தை பார்த்த நாணனும், காடனும் மகிழ்ச்சியடைந்தார்கள். “நமக்காக என்னமா சமைக்கிறான். நம் பசியை புரிந்துக்கொண்டான் திண்ணன்.” என்று நாணனிடம் காடன் சொன்னான்..

திண்ணன் பன்றி இறைச்சியை பக்குவமாக நெருப்பில் வதக்கி சமைத்தான். இராமாயணத்தில் சபரி என்ற மூதாட்டி ருசி பார்த்து ருசிபார்த்து ஸ்ரீராமருக்கு சாப்பிட பழங்கள் தந்தாலே அதுபோல திண்ணன், பன்றியின் தசைபகுதியை சமைத்து தன் வாயில் போட்டு பல்லால் மட்டும் கடித்து பார்த்து ருசியாக இருப்பதை மட்டும் ஒரு இலையில் வைத்தான். இதை கண்ட திண்ணனின் நண்பர்கள், “இவன் என்ன சாப்பிடாமல் வாயில் வைத்து ருசி பார்த்துவிட்டு இலையில் வைக்கிறானே” என்று காடன், நாணனிடம் கேட்டான். மலைமேல் இருக்கும் குடுமிசாமியை பார்த்ததில் இருந்தே திண்ணனின் போக்கே சரியில்லை. நான் நினைக்கிறேன் திண்ணனுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது” என்றான் நாணன். அவர்களின் பேச்சு திண்ணனின் காதில் விழவில்லை. அந்த அளவுக்கு தன் வேலையில் மும்முரமாக இருந்தான். அவசர அவசரமாக பன்றிகறியை சமைத்து ஒரு இலையில் வைத்துக்கொண்டான். இத்துடன் கொஞ்சம் பூக்களையும் பறித்துக்கொண்டான். ஒரு கையில் பன்றிகறி, மறு கையில் பூக்கள். பிறகு தன் வாயில் கொஞ்சம் தண்ணீரை நிரப்பி வைத்துக்கொண்டு திருகாளத்தி மலையை நோக்கி நடந்தான். “அடடா. இவன் இத்தனை நேரம் சமைத்தது நமக்காக இல்லையா. மலை மீது உள்ள குடுமி சாமிக்குதானா” என்று புரிந்துக்கொண்டார்கள் நண்பர்கள். மலைமேல் வேகமாக ஏறினான் திண்ணன். இதையெல்லாம் பார்த்த திண்ணனின் இரண்டு நண்பர்கள், இனி நாம் இவன் பின்னால் போனால் நம்மையும் பைத்தியகாரர்களாக்கிவிடுவான்.

முதலில் நாம் ஊருக்கு திரும்பி சென்று, திண்ணனின் தந்தையையும் மற்றவர்களையும் அழைத்து வருவோம்.” என்று கூறி அவர்கள் ஊருக்கு திரும்பி சென்றார்கள். காளாத்தி மலைமேல் இருக்கும் சிவலிங்கத்தின் அருகில் வந்தான் திண்ணன். தன் வாயில் இருந்த தண்ணீரால் சிவலிங்கத்தின் மேல் குட்டி அருவியைபோல் தண்ணீரால் அபிஷேகித்தான். இடது கையில் இருந்த மலர்களால் சிவலிங்கத்திற்கு பூக்களை சமர்பித்தான். வலது கையில் இருந்த பன்றி இறைச்சியை சிவலிங்கத்தின் அருகில் வைத்து, “சாப்பிடு சாமி.. நானே பக்குவமாக சமைத்து வந்திருக்கிறேன். நீ சாப்பிடு” என்று குழந்தையிடம் “சாப்பிடு சாப்பிடு என்று கெஞ்சுவது போல கெஞ்சினார் திண்ணன். சிவலிங்கத்தின் அருகிலேயே அமர்ந்தான். “இனி உனக்கு காவல் நான்.” என்று கூறி, அந்த மலையிலேயே உட்கார்ந்திருந்தான். இரவுபொழுது வந்தது. காட்டில் தனியாக இருக்கிறோமோ என்று சிறிதும் பயம் இல்லாமல் தைரியமாக இருந்தான் திண்ணன். அந்த தைரியத்தை யார் கொடுத்தது.? நிசசயம் இறைவன்தான். ஆம். மன தைரியம் என்று முரடனுக்கு இருக்கும். ஆனால் மன உறுதி – மன தெளிவு என்பது இறை நம்பிக்கை உள்ளவர்களுக்குதான் அமையும். அத்துடன் தன்னை சார்ந்தவர்களை காப்பாற்ற வேண்டும் என்று நினைக்கும்போது மரண படுக்கையில் இருந்தவன் கூட, தன் குடும்பத்திற்காக வாழ வேண்டும் என்று எண்ணி தன் உயிரை எமனிடம் இருந்து காப்பாற்ற போராடி பிழைத்தவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அதுபோல்தான், தனக்கு பிடித்த சிவபெருமான் தனியாக இருக்கறார்.

அவருக்கு பாதுகாப்பு வேண்டும் என்ற நோக்கத்தில் புலியும்,சிங்கமும் விஷபாம்பும் இருக்கும் மலைகாட்டில், வெறும் வில் அம்புடன் திண்ணன் மனஉறுதியுடன் தூங்காமல் இருந்தான். மறுநாள் விடிந்தது. வானத்தில் சூரியனை கண்டதும் குயில் கூவியது. பறவைகள் பறந்தது. விடிந்துவிட்டது, சிவபெருமானுக்கு சாப்பிட ஏதாவது தரவேண்டும். அதற்கு நாம் வேட்டைக்கு போக வேண்டும்.” என்று வில்லையும், அம்பையும் எடுத்துக்கொண்டு வேட்டைக்கு சென்றான் திண்ணன். திண்ணன் சென்ற சில நிமிடத்திலேயே திருகாளாத்தி மலையில் இருக்கும் சிவலிங்கத்திற்கு வழக்கமாக தினசரி பூஜை செய்யும் சிவகோசாரியார். அந்த இடத்திற்கு வந்தார் சிவலிங்கத்தின் அருகில் பன்றி இறைச்சி இருப்பதை கண்டு திடுகிட்டு, கடும் கோபமாக, “யார் இந்த அபசாரம் செய்தது.?” என்று திட்டிக்கொண்டே அந்த ஆலயத்தின் ஓரத்தில் இருந்த துடைப்பத்தால் சிவலிங்கத்தின் அருகில் இருந்த பன்றிகறியை பெறுக்கி தள்ளி தண்ணீர் ஊற்றி அந்த இடத்தை கழுவினார். பிறகு சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து, பூக்களை அணிவித்து தீபராதனை செய்து வணங்கி சென்றார் சிவகோச்சாரியார். சிவகோச்சாரியார் புறப்பட்டு சென்ற சில மணிநேரத்தில் திண்ணன் மீண்டும் தன் வாயில் தண்ணீரை வைத்துக்கொண்டு, கையில் இறைச்சியையும், இன்னொரு கையில் பூக்களையும் கொண்டு வந்தான். இங்கே சிவலிங்கத்திற்கு புத்தம் புதிய மலர்கள் அணிந்திருப்பதை கண்டு கோபத்தோடு, “எவன் என் குடுமி சாமிக்கு இப்படி அலங்கோலம் செய்தது. நான் இருக்கும் வரை உன்னை நான்தான் பார்த்துக்கொள்வேன்.” என்று கூறி தன் கால்களால் சிவலிங்கத்தின் மேல் இருந்த பூக்களை எல்லாம் நீக்கினார். இப்படி சிவலிங்கத்தின் மேல் கால் வைப்பது தவறு என்று திண்ணனுக்கு தெரியாது. தாயின் அரவனைப்பில் இருக்கும் குழந்தை தாயை எட்டி உதைத்தால் அது தவறு என்று தாய் நினைப்பாளா? அதுபோல்தான் சிவபெருமானும் நினைத்திருப்பார் போல. பழைய பூக்களை எடுத்துவிட்டு தன் வாயில் இருந்த தண்ணீரால் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்துவிட்டு, மறு கையில் இருந்த பூக்களை சிவலிங்கத்தின் மேல் அணிவித்து, இன்னொரு கையில் தயாராக சமைத்து வைத்திருந்த பன்றி கறியை சிவலிங்கத்தின் அருகில் வைத்தான். இப்படியே காலங்கள் ஒடியது. திண்ணனுக்காக சிவகோச்சாரியாரிடம் வாதாடிய சிவபெருமான்.


திண்ணன் வாழ்வை மாற்றிய நண்பன் அறுபத்து மூவர் வரலாறு பகுதி – 15

வேடனான திண்ணன், தனது வாழ்நாளின் முதல் வேட்டைக்கு புறப்பட தயாரானான். அவனுடன் மற்றவர்களும் வேட்டைக்கு புறப்பட தயாரானார்கள். திண்ணன் வில்லை எடுக்கும் போது, “திண்ணா.. உன்னை வாழ வைக்க போகும் தெய்வம்தான் நீ கையில் எடுக்கும் வில். அதனால் முதலில் செய்யும் தொழிலை தெய்வமாக மதிக்க வேண்டும். தொழிலுக்கான மரியாதையும் தர வேண்டும். அதனால் வில்லை எடுக்கும் முன்னதாக நம் குலதெய்வத்தையும், இஷ்டதெய்வத்தையும் வணங்கி எடு. எல்லாம் வெற்றியாக அமையும்.” என்றார் திண்ணணின் தந்தை. தந்தை சொல்லே மந்திரம் என்று உணர்ந்து, திண்ணன் தன் தந்தையை வணங்கி, “எனக்கு இஷ்டதெய்வம் நீதான்“ என்று கூறி வில்லை எடுக்கும்போது ஒரு சுப ஒலி ஒலித்தது. இதை கேட்ட திண்ணனின் தந்தை மகிழ்ச்சியடைந்தார். காட்டிற்கு வேட்டையாட திண்ணன் சென்றான். யானை, புலி போன்ற மிருகங்களை வேட்டையாடினார்கள் திண்ணனும் மற்ற வேடர்களும். இப்படி பரபரப்பாக வேட்டையாடும் போது, யானைகுட்டிகளும் கருவுற்ற மிருகங்களும் அந்த காட்டில் எதுவும் நடக்காதது போல சென்றது. அதன் காரணம் என்ன? அவற்றுக்கு வேடர்கள் என்றால் பயம் இல்லையா.? இருக்கிறது! இருந்தாலும், எதையும் உணரமுடியாத குட்டி ஜீவராசிகளையும், கருவுற்ற மிருகங்களையும் கொல்லும் வழக்கம் வேடர்களுக்கு இல்லை. வேடர்களுக்கும் தர்மம் இருக்கிறது அல்லவா.

புலி போல் பாய்ந்த திண்ணன்

அப்போது, ஒரு காட்டுபன்றி, யானையே மிரண்டு ஓடும் படியாக வேகமாக ஓடியது. இதை கண்ட திண்ணன், அந்த காட்டு பன்றியை வேட்டையாட அதன் பின்னே ஓடினான். ஆனால் அந்த காட்டுபன்றி வெகுதூரம் ஓடியது. நீண்ட மலைச்சாரல் வழியே சென்றது. திண்ணம் அந்த பன்றியை விடாமல் துரத்திக்கொண்டு ஒடினான். பாயும் புலியை போல திண்ணனின் ஓட்டத்தில் வேகம் இருந்தது. “இனி நம்மால் ஓட முடியாது” என்று அந்த காட்டு பன்றி நினைத்து, களைத்துப்போய் ஒரு இடத்தில் நின்றது. ஆனால் திண்ணனுக்கு எந்த களைப்பும் இல்லை. இவ்வளவு தூரம் தன்னை ஓட விட்ட பன்றிமேல் கோபம் கொண்டு, தன் இடுப்பில் இருந்த உடைவாளை எடுத்து, அந்த பன்றியை ஒரே வெட்டாக வெட்டினான் திண்ணன். ஒரே வெட்டில் அந்த பன்றி இரண்டு துண்டுகளாக விழுந்தது. அவனை தேடி வந்த மற்ற வேடர்கள், திண்ணனின் வேகத்தையும் வேட்டையாடும் திறனையும் நேரில் பார்த்து வியந்து பாராட்டினார்கள். இப்படி கடும் முரடனாக இருக்கும் திண்ணனின் மனதை மென்மையாக்கும் ஒரு சம்பவம் நடக்க இருக்கிறது. அதை திண்ணன் மட்டுமல்ல யாரும் எதிர்பாராத சம்பவம். அதை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன், திண்ணனுடன் நாமும் கொஞ்ச நேரம் பயணிக்க வேண்டும். திண்ணன் ஒரே வெட்டில் காட்டு பன்றியை இரண்டாக பிளந்ததை கண்ட திண்ணனின் தோழர்கள் மகிழ்ச்சியடைந்தார்கள். திண்ணனின் வீரத்தையும், விடாமுயற்சியையும் பாராட்டினார்கள். வெகு தூரம் ஓடி வந்ததால் பசி எடுத்தது திண்ணனுக்கு. “பசிக்கிறது“ என்றான் திண்ணன். “காட்டுக்குள் வந்து ரொம்ப நேரம் ஆகிவிட்டது. எங்களுக்கும் பசிக்கிறது” என்றார்கள் நாணனும் உடன் வந்த இன்னொரு நண்பனும். “முதலில் நமக்கு தேவை தண்ணீர். தண்ணீருக்கு எங்கே போவது?“ என்றான் திண்ணன். “அதோ தெரிகிறது பார் தேக்கு மரம். அதன் அப்பால் சென்றால் நீண்ட குன்று ஒன்று இருக்கிறது. அந்த உயர்ந்த மலைக்கு பக்கத்தில் “பொன்முகலி” என்ற ஆறு இருக்கிறது. வா திண்ணா” என்று அழைத்தான் திண்ணனின் நண்பன் நாணன். உடன் இருந்த தோழனிடம், “நீ இந்த பன்றியை அந்த இடத்திற்கு எடுத்து வா. நாங்கள் முன்னே செல்கிறோம்.” என்றான் திண்ணன். நண்பன் பன்றியை சுமந்து வர, அவனுடன் பொன்முகலி ஆற்று பகுதிக்கு வந்தார்கள் திண்ணனும் நாணனும். “பன்றியை சமைக்க தீக்கடைக் கோலால் தீயை உண்டாக்கு. நான் வந்து சமைத்து தருகிறேன்“ என்றான் நண்பனிடம் நாணன். “சரி” என்ற அந்த நண்பனும் தீயை உண்டாக்கும் முயற்சியை செய்தான். “நாம் அதுவரை அந்த மலை அடிவாரத்திற்கு சென்று வருவோம் வா.” என்று நாணனிடம் சொன்னான் திண்ணன். பொன்முகலி ஆற்றில் இறங்கி அவ்வாற்றைக் கடந்து திருகாளத்தி மலை அடிவாரத்தை அடைந்தார்கள். திருகாளத்தி மலை ஏறினார்கள். மலை ஏற ஏற திண்ணனின் மனதில் பரவசம் உண்டானது. பசி மறைந்தது. மனம் அமைதி அடைந்தது. ஏதோ ஒரு சக்தி மலை மேல் இருந்தபடி தன்னை அழைப்பது போல உள்ளுணர்வு சொன்னது. மகிழந்தான் திண்ணன். “நாணா.. எனக்குள் ஏதோ ஒரு மாற்றம் ஏற்படுகிறது. அதை எப்படி சொல்வது? என்று தெரியவில்லை.” என்றான் திண்ணன். திருகாளத்தி மலை உச்சியை அடைந்தார்கள். “இது என்ன மலை? இவ்வளவு பெரியதாக இருக்கிறது.” என்று வியந்தபடி கேட்டான் நாணனிடம் திண்ணன். “இந்த மலை மேல் குடுமி தேவர் என்பவர் இருக்கிறார் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்.” என்றான் நாணன். “குடுமி தேவரா? யார் அவர்.?” என்று கேட்டான் திண்ணன். “அது வந்து….. அது ஏதோ ஒரு சாமீ” என்றான் நாணன் “அந்த சாமீயை வணங்கி விட்டு வருவோம் வா“ என்று நாணனை அழைத்துக்கொண்டு மேலும் மலையில் முன்னேறினான் திண்ணன்.

மாற்றம் தெய்வ இரகசியம்

ஒருவனின் வாழ்க்கை எப்படி மாறும்? எப்போது மாறும் என்பது யாருக்கும் தெரியாது. எடுக்கும் முயற்சி நன்றாக இருந்தால் அதன் முடிவு வேறு மாதிரி இருந்தாலும் அதுவும் சரியாகவே இருக்கும். நினைப்பதெல்லாம் நினைத்த மாதிரி நடக்க நம் செயலில் எதுவும் இல்லை. எல்லாம் இறைவன் செயல். இது திண்ணனின் வாழ்விலும் பொருந்தியது. வேடர்களுக்கு தலைவனாக தமக்கு அடுத்ததாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார் திண்ணனின் தந்தை. ஆனால் இறைவனின் விருப்பமோ வேறு விதமாக இருக்கிறது. இறைவனின் விருப்பம்தான் இறுதி முடிவு. குடுமி தேவரை பார்க்க ஆர்வமாக வந்த திண்ணன், அங்கே ஒரு சிவலிங்கம் இருப்பதை கண்டான். “நாணா…நீ சொன்ன குடுமி தேவர் இவர்தானே” என்று சொன்னப்படி சிவலிங்கத்தை கட்டி அனைத்துக்கொண்டான் திண்ணன். தன் தாய்-தந்தையை பார்த்தவுடன் ஓடி வந்து கட்டி அனைத்துக்கொள்ளும் ஒரு குழந்தையை போல மாறினான் திண்ணன். திண்ணனின் கண்களில் தாரை தாரையாக கண்ணீர். திண்ணனின் கண்களில் இருந்து இதுவரை கண்ணீர் வந்து பார்த்ததில்லை நாணன. அதை கண்ட நாணன் திண்ணனுக்கு என்ன ஆனது? ஏன் இப்படி செய்கிறான்? என்று ஒன்றும் புரியாமல் விழித்தான். மனிதர்களின் வாழ்வில் புரியாத புதிர்கள் ஏராளம். இறைவனின் அடுத்த திருவிளையாடலை இறைவனின் அடியார்களே யூகிக்க முடியாத போது, நடப்பது என்ன என்று இந்த நாணனால் எப்படி புரிந்துக்கொள்ள முடியும்.? திண்ணனின் சிவதொண்டை கண்டு திகைத்த இன்னொரு சிவதொண்டர். யார் அவர்.? சொல்கிறேன்.

கண்ணப்ப நாயனார் -அறுபத்து மூவர் வரலாறு பகுதி – 14

குண்டக்கல் அரக்கோணம் ரயில் பாதையில் உள்ள இராசம் பேட்டைக்கு அருகில் உள்ளது உடுக்கூர். இது முன்னொரு காலத்தில் உடுப்பூர் என்று அழைக்கப்பட்டது. இந்த ஊரில் பிறந்தவர் நாகன். இவர் வேடவர்களுக்கு தலைவர். இவருடைய மனைவி பெயர் தத்தை. வேடவர் குலத்தில் பிறந்தவளான இவளிடத்தில் தைரியம் அதிகமாகவே திகழ்ந்தது. தத்தை நடந்து வந்தால் சிங்கம் நடந்து வருவது போல் இருக்குமாம். அந்த அளவில் வீர நடையில் வருவாள். கணவருக்கு ஏற்ற மனைவி என்று காண்போர் அனைவரும் போற்றும்படியான நல்ல குணமும் கொண்டவள் தத்தை. நாகன் – தத்தையின் ஒற்றுமையை கண்டு, சிவ-சக்தி என்றும் ஊர்மக்கள் புகழ்வதும் உண்டு. நாகன் வேடவர்களுக்கு அரசராக இருந்தார்.

பல வசதிகள் இருந்தும் குழந்தை செல்வம் இல்லையே என்று வருந்தினார்கள் இந்த தம்பதியினர். “வயதும் கூடி கொண்டே போகிறது. இனி உங்களுக்கு பிள்ளை பிறக்காது. அதனால் ஒரு குழந்தையை தத்து எடுத்துக்கொள்ளுங்கள் என்றார்கள் உறவினர்கள். “தத்து எடுப்பது பற்றி எங்களுக்கு பிரச்னையில்லை. ஆனால் அந்த குழந்தை வளர்ந்து பெரியவனான பிறகு, நீங்கள் என்னை பெற்றவர்கள் இல்லை என்கிறார்களே என்று அந்த பிள்ளை கூறிவிட்டால், அந்த துன்பம் தரும் சொல்லை எங்களால் தாங்க முடியாது. பாசத்தை கொட்டி வளர்த்து கவலையை பெறுவதை விட, பிள்ளை இல்லா குறையோடு இறந்து போவது நல்லது.” என்றாள் தத்தை. இதை கேட்ட பெரியவர் ஒருவர், “நீங்கள் முருகப் பெருமானை வணங்குங்கள். உங்களுக்கு பிள்ளை பிறப்பான். சஷ்டியில் விரதம் இருந்தால், நிச்சயம் உன் வயிற்றில் பிள்ளை பிறப்பான். அத்துடன் முருகப்பெருமான் நம் வேடவர் குலத்தில் பிறந்த பெண்ணைதான் மணந்தார். அதனால் முருகனும் நமது உறவினர்தான். நம் உறவினரான முருகன், நமக்கு உதவாமல் வேறு யாருக்கு உதவ போகிறார்.?” என்றார் தத்தையிடம் அந்த பெரியவர். பெரியவர் சொன்னதை இறைவனின் அருள்வாக்காக எண்ணி, “உடனே முருகப்பெருமானை வழிபட ஏற்பாடு செய்யுங்கள்.” என்றாள் தன் கணவரிடம் தத்தை. நாகனும், தத்தையும் முருகப்பெருமானின் கோவிலுக்கு சென்று முருகனை வணங்கி, சேவல் – மயிலை கோவிலுக்கு காணிக்கையாக தந்தார்கள்.

கோவிலை மலர்களால் அலங்கரித்தார்கள். மிகபெரிய திருவிழாவே நடத்தினார்கள். என்னென்ன அபிஷேகங்கள் உள்ளனவோ அவ்வனைத்தையும் விடிய விடிய முருகப்பெருமானுக்கு செய்தார்கள். தாயானாள் தத்தை முருகப்பெருமானின் கருணை கிடைத்தது. தத்தை சில நாட்களிலேயே கருவுற்றாள். பத்தாவது மாதத்தில் அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தாள். கருப்பு நிறத்தை விரும்பாதவர் கூட கண்ணன் பிறந்ததும் அவன் கருப்பு முகமும் தெய்வீக அழகு என்று போற்றியது போல, தத்தை பெற்ற குழந்தையும் கருப்பாக இருந்தாலும் கலையாக இருந்தான். நம் நாட்டுக்கு இளவரசன் பிறந்துவிட்டான் என்று மக்கள் கொண்டாடினார்கள். தனக்கு வாரிசு பிறந்துவிட்டான் என்று தந்தையான நாகன் மகிழ்ந்தார். தங்கள் குழந்தைக்கு “திண்ணன்” என்று பெயர் சூட்டினார்கள். குழந்தை பிறக்காதா என்று ஏங்கிய தம்பதிகளுக்கு வாரிசு பிறந்ததால் கோலகலமாக விழா எடுத்தார்கள். திண்ணனின், குறும்பும் சுறுசுறுப்பும் அனைவரையும் கவர்ந்தது. தனக்கு பிறகு நாட்டை ஆளப்போகும் திண்ணன், வேட்டையாடும் கலையை கற்கவேண்டும் என்று விரும்பினார் நாகன். திண்ணன் நாட்டை ஆள பிறந்தவன் இல்லை. உலகை ஆளப் பிறந்தவன். எந்நாட்டவருக்கும் இறைவனான ஈசனுக்கு பிரியமானவன் என்று உலகமே போற்றி வணங்கும் நாயன்மார்களில் ஒருவராக திகழ போகிறார் என்பதை அறியாமல், வேட்டையாடும் கலையை கற்று கொள் என்றார் நாகன். அப்படி கற்று கொண்டால்தான் எனக்கு பிறகு நீ சிம்மாசனத்தில் அமர்ந்து ராஜ்யத்தை ஆள முடியும் என்றார் நாகன். மிருகத்தை வேட்டையாட சென்ற இடத்தில், திண்ணனின் மனதை வேட்டையாடினார் ஒருவர்.



அகோரி கேட்ட உணவு நம்மால் தரமுடியுமா?அறுபத்து மூவர் வரலாறு பகுதி – 13

“நம் இல்லத்திற்கு உங்களை தேடி ஒரு வடதேச சிவதொண்டர் வந்தார். அவர் காசியில் இருந்து வந்த அகோரி போல தெரிகிறது. கணபதீஸ்வர ஆலயத்தில் இப்போது இருக்கிறார். நீங்கள் சென்று அழைத்தால் வருவதாக சொல்லி இருக்கிறார்.” என்றாள் சிறுத்தொண்டரின் மனைவி திருவெண்காட்டு நங்கையார். மனைவி கூறியதை கேட்டு மகிழ்ச்சியடைந்த சிறுத்தொண்டர், உடனே அந்த சிவதொண்டரை தன் இல்லத்திற்கு அழைத்து விருந்து கொடுக்க எண்ணி, கணபதீஸ்வர ஆலயத்திற்கு விரைந்தார். திருக்கோயிலில் இருந்த அத்திமரத்தின் கீழே அந்த அகோரி உட்கார்ந்திருந்தார். அவர் அருகில் சென்று தம்மை அறிமுகப்படுத்திக்கொண்ட சிறுத்தொண்டர், தம் இல்லம் வந்து உணவு சாப்பிட அழைத்தார். “நான் வருவது இருக்கட்டும், நீதான் சிறந்த சிவதொண்டரா.? அதனால்தான் உன்னை சிறுத்தொண்டர் என்று மக்கள் அழைக்கிறார்களா.?” என்றார் அகோரி. “அப்படியெல்லாம் இல்லை சுவாமி. சிவதொண்டர்களுக்கு விருந்து தந்து உபசரித்து அவர்கள் சாப்பிட்ட பிறகே நான் சாப்பிடும் வழக்கம். ஆதனால் என்னை சிறுத்தொண்டர் என்று அழைக்கிறார்கள்.” என்றார் பவ்யமாக. “நான் வடதேசத்தில் இருந்து வந்திருக்கிறேன்.

நான் சாப்பிடுவதை உன்னால் தரமுடியாது. அதனால் இங்கிருந்து நீ போய்விடு. வேறு யாராவது ஒரு பிச்சைக்காரன் நீ தரும் உணவை சாப்பிட வருவான். அவனை அழைத்து போ.” என்று அலட்சியமாக சிறுத்தொண்டரிடம் பேசினார் அகோரி். “நீங்கள் இவ்வாறு சொல்ல கூடாது சுவாமி. உங்களுக்கு எந்த வகை உணவு வேண்டும் என்று சொல்லுங்கள். அதற்கு நான் ஏற்பாடு செய்கிறேன்.” என்றார் சிறுத்தொண்டர். “நான் பசுமாமிசம் சாப்பிடுவேன். உன்னால் அதை சமைத்து தரமுடியுமா.? என்றார் அகோரி. “இவ்வளவுதானே. என்னிடம் பசு, எருமை, ஆடு போன்றவை இருக்கிறது. உங்களுக்கு எந்த வகை பசுவின் மாமிசம் வேண்டும் என்று சொன்னால் அதற்கு ஏற்பாடு செய்கிறேன்.“ என்றார் சிறுத்தொண்டர். பலமாக சிரித்தார் அகோரி. “நான் கூறும் பசுமாமிசம் என்பது, பசுமாடு மாமிசம் அல்ல. நரமாமிசம். அதுவும் ஐந்து வயது பாலகனாக இருக்க வேண்டும். குடும்பத்தின் மூத்த மகனாக இருக்க வேண்டும். அவன் உடலில் எந்த ஊனமும் இருந்திருக்கக் கூடாது. அத்துடன் அந்த பாலகன் உயர்ந்த குலத்தில் பிறந்தவனாக இருக்க வேண்டும். அவனை பெற்ற தாயே அவனை பிடித்துக்கொண்டு, அந்த பிள்ளையின் தகப்பன் அந்த பாலகனை வெட்ட வேண்டும். அப்படி வெட்டபட்ட பாலகனின் மாமிசத்தை அவனை பெற்றவளே சமைக்க வேண்டும். அப்படி சமைக்கும் போது, அழுது கொண்டே சமைத்தால் நான் சாப்பிடமாட்டேன்.” என்றார் அகோரி. சிறுதொண்டர் எதுவும் பேச முடியாமல் நின்றார். “என்ன யோசிக்கிறாய். உன்னால் எனக்கு உணவு தர முடியாதல்லவா. அதனால்தான் சொல்கிறேன். இங்கிருந்து போய்விடு.” என்றார் அகோரி. “அப்படியில்லை சுவாமி. உங்கள் உணவுக்கு ஏற்பாடு செய்கிறேன்.”

“அப்படியென்றால் நான் இங்கேயே இருக்கிறேன். நான் கேட்ட உணவுக்கு ஏற்பாடு செய்த பிறகு வந்து கூப்பிடு. நான் உனக்காக இங்கேயே காத்திருக்கிறேன்.” என்றார் அகோரி. யோசனையோடு கோயிலில் இருந்து வீட்டுக்கு வந்தார் சிறுத்தொண்டர். அகோரி கூறியதை அனைத்தும் ஒன்றுவிடாமல் தன் மனைவியிடம் சொன்னார். “அகோரி கேட்ட உணவு நம்மால் தரமுடியுமா.? உன் மகனை கொடு நான் சமைக்க வேண்டும் என்று எந்த பெற்றோர்களிடமும் நாம் கேட்கமுடியும்.? அப்படியே கேட்டாலும் அது பெரும் பாவத்தை அல்லவா நமக்கு சேர்க்கும். அகோரி ஏன் நம் வீட்டிற்கு உங்களை தேடி வந்தார்?. வந்தவர் எதற்காக இப்படியெல்லாம் கேட்கிறார்?. உங்கள் சிவதொண்டில் பாதகம் விளைவிக்க விதி விளையாடுகிறதோ?. இனி என்ன செய்ய போகிறீர்கள்?.” என்றாள் திருவெண்காட்டு நங்கையார். “நீ சம்மதித்தால் என் சிவதொண்டுக்கு எந்த பங்கமும் வராது“ என்ற சிறுத்தொண்டர், “நம் பிள்ளையை அந்த அகோரிக்கு உணவாக படைக்கலாம். நீ இதற்கு சம்மதிப்பாயா?.“ என்றார். “உங்கள் கேள்விக்கு நம் பிள்ளைதான் பதில் சொல்ல வேண்டும்.” என்றாள் திருவெண்காட்டு நங்கையார்.


பள்ளிக்கு சென்றிருந்த மகன் சீராள தேவனை அழைத்து வந்தார்கள். அவனிடம் விஷயத்தை சொன்னார்கள். “உங்கள் விரும்பமே எனது விருப்பம்” என்றான் தயக்கம் இல்லாமல். சிறுதொண்டரின் வாரிசு, சிவபக்தியில் தன் தந்தைக்கு குறைந்தவனில்லை என்பதை நிரூப்பித்தான். மகன் வெட்டப்பட்டான். பிள்ளைகறியை நன்றாக கழுவி சமைக்க ஆரம்பித்தாள். தலை கறியை அகோரி சாப்பிட மாட்டார் என்ற எண்ணத்தில் தலைகறியை சமைக்காமல் தனியாக எடுத்து வைத்தாள். சமையல் தயாராகிவிட்டது. நீங்கள் சிவதொண்டரை அழைத்து வாருங்கள் என்றாள் தன் கணவரிடம் திருவெண்காட்டு நங்கையர். கணபதீஸ்வரர் திருக்கோயிலுக்கு விரைந்தோடி வந்தார் சிறுத்தொண்டர். அகோரியை வணங்கி வீட்டுக்கு அழைத்து வந்தார். மகன் எங்கே? வாழையிலையின் முன்பு அமர்ந்தார் அகோரி. இலையில் பிள்ளைகறி இருப்பதை கண்டார். அவர் முகம் மாறியது. “சிறுத்தொண்டனே. என்னை ஏமாற்றுகிறாயா. எங்கே தலைகறி.? பசியில் எனக்கு முன்னதாகவே சாப்பிட்டு விட்டீர்களா?” என்றார் கோபமாக அகோரி. “சிவசிவா.. அப்படியில்லை சுவாமி. தலைகறி நீங்கள் சாப்பிட மாட்டீர்கள் என்று நினைத்து தனியாக வைத்திருக்கிறோம்.” என்றார் சிறுத்தொண்டர். “நாம் அதையும் சாப்பிடுவோம். கொண்டு வா.” என்றார் அகோரி. பணி பெண்ணான சந்தன நங்கையார், சமையலறைக்கு சென்று உடனடியாக தலைகறியை சமைத்து எடுத்துவந்து இலையில் பரிமாறினாள். அகோரி சாப்பிடாமல் இருந்தார். “சுவாமி. ஏதேனும் குறையா.? ஏன் சாப்பிடாமல் இருக்கிறீர்கள்.” என்றார்

சிறுத்தொண்டர். “எனக்கும் உன்னை போல் ஒரு பழக்கம் இருக்கிறது. நான் சாப்பிடும் போது என் அருகில் ஒரு சிவதொண்டரையும் அமர வைத்து அவருடன் சாப்பிடுவது என் வழக்கம். நீ போய் ஒரு சிவதொண்டரை அழைத்து வா.” என்றார் அகோரி. “சுவாமி. ஏனோ தெரியவில்லை இன்று ஒரு சிவதொண்டரையும் காண முடியவில்லை. இறைவன் அருளால் நான் சிவதொண்டரான தங்களை மட்டும்தான் இன்று தரிசித்தேன்.” என்றார் சிறுதொண்டர். “ஓ அப்படியா. பரவாயில்லை. நீயும் சிவதொண்டன்தானே. வா. வந்து அமரு. நீயும் என்னுடன் சாப்பிடு.” என்றார் அகோரி. அகோரியின் அருகில் அமர்ந்தார் சிறுத்தொண்டர். அவருக்கு வாழையிலையில் உணவு பரிமாறினாள் திருவெண்காட்டு நங்கையார். சிறுத்தொண்டர் உணவில் கை வைக்கும் போது, அவரின் கையை பிடித்து தடுத்தார் அகோரி. “ஆமாம். உனக்கு ஒரு மகன் இருப்பதாக கேள்விப்பட்டேனே… எங்கே அவன். அவனையும் அழைத்து வா. ஒன்றாக சாப்பிடுவோம்.” என்றார் அகோரி. “சுவாமி..அவன் வர மாட்டான்.” என்றார் சிறுத்தொண்டர். “ஏன் வர மாட்டான். போய் கூப்பிடு வருவான்.” என்றார் அகோரி. தங்கள் துக்கத்தை மறைத்துக்கொண்டு வீட்டுக்குள் இருந்து வெளியே வந்தார்கள் சிறுத்தொண்டரும் அவர் மனைவி திருவெண்காட்டு நங்கையாரும், பணிப் பெண் சந்தன நங்கையாரும். “வெளியே நின்று வாயை மூடிக்கொண்டிருந்தால் எப்படி?. வாய் திறந்து உன் மகனை கூப்பிடு வருவான்.“ என்று வீட்டுக்குள் இருந்தபடி அதட்டினார் அகோரி.


சிறுத்தொண்டரும், அவருடைய மனைவியும், “மகனே சீராள தேவா.. ஓடிவா. சிவதொண்டர் உன்னை காண அழைக்கிறார்.” என்று கதறினார்கள் சிறுத்தொணடரும் அவர் மனைவியும். அப்போது, “இதோ வந்துவிட்டேன் அம்மா.” என்று குரல் கேட்டது. குரல் வந்த திசையை நோக்கி திரும்பினார்கள். மகன் சீராள தேவன் எங்கிருந்தோ ஓடிவந்தான். தன் தாய்-தந்தையை கட்டி அணைத்துக்கொண்டான். சிறுத்தொண்டருக்கும் அவர் மனைவிக்கும், பணிபெண்ணுக்கும் தாங்கள் காண்பது கனவா நிஜமா என்றே நம்ப முடியவில்லை. வெட்டி கறியாக சமைக்கப்பட்ட மகன், உயிருடன் வந்து நிற்பதை கண்டு ஆனந்தம் அடைந்தார்கள். அவர்களின் துக்க கண்ணீர், ஆனந்த கண்ணீராக மாறியது. மகனை தூக்கிக் கொண்டு வீட்டுக்குள் ஓடி வந்தார்கள். வீட்டுக்குள் அகோரி இல்லை. அவருக்கு சமைக்கப்பட்ட பிள்ளைகறியும் இல்லை. மீண்டும் வெளியே வந்து அகோரியை தேடினார்கள். சிவதரிசனம் அப்போது வானத்தில் சிவபெருமானும் அன்னை பார்வதிதேவியும் ரிஷப வாகனத்தில் தோன்றினார்கள். “சிறுத்தொண்டனே. அகோரியாக வந்தது நாமே, உன் சிவதொண்டு உலகறியவே இச்சோதனை தந்தோம். நம் தொண்டர்களில் சிறந்தவன் நீ என்பதை அனைவரும் தெரிந்துக் கொள்வார்கள். உனக்கும் உன் மனைவி திருவெண்காட்டு நங்கையாருக்கும், மகன் சீராள தேவனுக்கும், பணிப்பெண்ணான சந்தன நங்கையாருக்கும் நாம் அருள் புரிந்தோம். எல்லா வளங்களையும் பெறுவீர்களாக” என்று ஆசி கூறினார்.” இறைவனை நம்பினால் சோதனைகள் யாவும் கடந்து வந்துவிடலாம். இறைவன் தரும் சோதனைகளை அனுபவங்களாக தாங்கினால், ஒருநாள் உலகபுகழும் கிடைக்கும். பொறுமை என்ற வரத்தை எல்லோருக்கும் தந்தே இருக்கிறார் இறைவன். அந்த வரத்தை நாம்தான் பயன்படுத்த வேண்டும். இன்னல்களை கண்டு மனம் கலங்காமல் பொறுமை என்கிற வரத்தை பயன்படுத்தினால், நீங்காத பெருமை சேரும் என்ற உண்மையை நமக்கெல்லாம் உணர்த்தினார் பரஞ்சோதியார் என்கிற சிறுத்தொண்ட நாயனார். அடுத்து நாம் தெரிந்து கொள்ள இருப்பது கண்ணப்பர் நாயனார் சிறப்பு.

சிறுத்தொண்டரை தேடி வந்த காசி அகோரி அறுபத்து மூவர் வரலாறு பகுதி – 12

சிறுத்தொண்டரும் வெண்காட்டு நங்கையாரான இவரது மனைவியும் சிவத்தொண்டு புரிவதில் மற்றற்ற மகிழ்ச்சியடைந்தார்கள். ஒரு சிவன்னடியாராவது உணவு உட்கொண்ட பிறகுதான் தாம் உணவே உட்கொள்ள வேண்டும் என்ற கொள்கையில் உறுதியாக நின்றார்கள் இந்த தம்பதியினர். கணபதீஸ்வரர் என்ற சிவ திருதலத்திற்கு சென்று அங்கு வரும் சிவன் அடியார்களை தம் வீட்டிற்கு அழைத்துவந்து உணவு பரிமாறுவார்கள். இப்படி தினமும் செய்து வந்தார் சிறுத்தாண்டர். இவருடைய மகன் சீராளதேவர். அவனும் தாய்-தந்தை வழியில் அச்சிறு வயதிலேயே சிவபக்தியுடன் திகழ்ந்தான். தாம் பெற்ற செல்வத்தினுள் சிறந்த செல்வமான சீராளதேவனை தமக்கு வாரிசாக தந்த இறைவனுக்கு தம்மால் இயன்ற சிறப்புகளையும் செய்து வந்தார் சிறுத்தொண்டர். இப்படி மகிழ்ச்சியாக குடும்பம் நகர்ந்து கொண்டு இருந்தது. ஒருநாள் திருஞானசம்பந்தர் திருச்செங்காட்டங்குடிக்கு வந்திருப்பதாக கேள்விப்பட்ட சிறுத்தொண்டர், திருஞானசம்பந்தரை தன் வீட்டிற்கு விருந்தினராக அழைத்து வர விரும்பினார். சிறுத்தொண்டரின் இந்த விருப்பமும், திருஞானசம்பந்தரின் வருகையும்தான் சிறுத்தொண்டர் வாழ்வில் எதிர்பாரத ஓர் நிகழ்வு நடைபெற காரணமாக இருக்க போகிறது என்பதை யாரும் அறியவில்லை. ஞான பிள்ளையான திருஞானசம்பந்தர், சிறுத்தொண்டரின் அன்பு கட்டளைக்கு பணிந்து, உணவு உட்கொள்ள சிறுத்தொண்டர் வீட்டிற்கு வருகை தந்தார். வெண்காட்டுநங்கையார், திருஞானசம்பந்தருக்கு உணவு பரிமாறினாள். விருந்து சிறப்பாக நிறைவு பெற்றது. மகிழ்ந்து போனார் திருஞானசம்பந்தர். சிறுத்தொண்டரின் பெருமைகளை ஏற்கனவே அறிந்த திருஞானசம்பந்தர், அவரின் சிவதொண்டையும் தனக்கு வழங்கிய மரியாதையையும் நினைத்து மகிழ்ந்து சிறுதொண்டருக்காக ஒரு பதிகம் பாடி அங்கிருந்து விடைப்பெற்றார்.

பொதுவாக திருஞானசம்பந்தர், சிவாலயங்களில் இறைவன் முன் பதிகம் பாடுவது வழக்கம். ஆனால் இன்றோ ஒரு சிவதொண்டரான சிறுத்தொண்டர் வீட்டிற்கு நேரடியாக வந்து உணவு உட்கொண்டு, சிறுத்தொண்டரின் வீட்டினுள் ஒரு பதிகம் பாடி அருளியதை கண்டு பலர் அற்புத நிகழ்ச்சியாக நினைத்தாலும் சிலர் சிறுத்தொண்டர் அவ்வளவு பெரிய சிவதொண்டரா என்று பொறாமை கொண்டனர். அவர்களுக்கு சிறுத்தொண்டரின் பெருமையை யார் சொன்னாலும் ஏற்க மாட்டார்கள் என்பதால் இறைவனான சிவபெருமானே சிறுத்தொண்டரின் பெருமையை உலகம் அறிய செய்ய தீர்மானித்தார். இறைவனின் தீர்மானம்-திருவிளையாடல் என்பதெல்லாம் சிவன் அடியார்களுக்கு சோதனையானதாகத்தான் இருக்கும். வைரத்தை பட்டை தீட்டுவதும், தங்கத்தை நெருப்பில் இடுவதும் அதனை அழிப்பதற்காக அல்ல. அவற்றின் மதிப்பை கூட்டுவதற்காகதான். அதுபோல சிவன்னடியார்களுக்கு இறைவன் தருகிற சோதனைகளும் அவ்வாறானதே. பக்குவப்பட்ட மனம், சக்தியாக மாறி ஏற்றத்தை தருகிறது. பக்குவம் அடையாத மனமோ சகதியாக மாறி குட்டையில் விழுந்த தவளையை போல் வாழ்க்கை திசைமாறி, தன் வாயாலேயே இழப்பை அடைகிறார்கள். 63 நாயன்மார்களின் வாழ்க்கை வரலாறு என்பது வெறும் வழிபாடு-பக்தி என்று இருப்பதை விட இறைவனை தம் குடும்பத்தில் ஒருவராக நினைத்து உண்மையான அன்பு கொண்ட பக்தியாக இருப்பதே நிஜவழிபாடாகும் என்பதை நமக்கெல்லாம் சொல்லும் வரலாறு. அன்பே சிவம் என்பது மட்டுமல்ல, இறைவனை நம்புகிறவர்களுக்கும் அதே அன்பு இருக்க வேண்டும் என்று சொல்வதே 63 நாயன்மார்களின் வரலாறு. அதிலே சிறுத்தொண்டரின் வாழ்க்கை வரலாறு அன்பு கலந்த பக்தியின் உச்சக்கட்ட எடுத்துக்காட்டு. ஒருநாள் வழக்கம் போல ஒரு சிவன்னடியாரை உணவுக்கு அழைத்துவர சிறுத்தொண்டர் வெளியே புறப்பட்டு சென்றார். அப்போது சிறுத்தொண்டரின் வீடு தேடி வடதேசத்தில் இருந்து ஒரு அகோரி வந்து வாசலில் நின்றார்.


அவர் கையில் சூலம், மற்றோரு கையில் கபாலத்துடன் பார்க்கவே பிறர் அதிரும் உருவத்தில் உயர்ந்த உடல் பருமனுடன் உடல் யானை தோலால் செய்த உடை அணிந்து இருந்தார். சிறுத்தொண்டரின் வீட்டு வாசலில் நின்றுகொண்டு குரல் கொடுத்தார். “யார் வீட்டுக்குள்.? சிறுத்தொண்டர் இருக்கிறாரா?” என்று குரல் கொடுத்தார். இதைகேட்டு வெளியே வந்தாள் சிறுத்தொண்டர் வீட்டின் பணிப்பெண்ணான சந்தன நங்கையர். “ஐயா வெளியே சென்று இருக்கிறார். வரும் நேரம்தான். நீங்கள் சற்று காத்திருந்தால் வந்து விடுவார். உள்ளே வந்து உட்காருங்கள்” என்றாள். “உலகத்தை காக்கும் அந்த பரமேஸ்வரனையே நான் காக்க வைப்பேன். அப்படி இருக்கும் போது சாதாரண மானிட பிறவியான சிறுத்தொண்டருக்கா நான் காத்திருப்பது.? கேவலம். நான் வருகிறேன்” என்றார் அகோரி. அந்த வடதேசத்து அகோரியின் குரலை உள்ளிருந்து கேட்ட சிறுத்தொண்டரின் மனைவி நங்கையார் ஒடிவந்து, “சுவாமி,தயவு செய்து தவறாக நினைக்க வேண்டாம். அவர் சிவன்னடியார்களுக்கு உணவு பரிமாறிய பிறகுதான் சாப்பிடுவார். அதனால்தான் ஒரு சிவதொண்டரையாவது அழைத்துவர கோயிலுக்கு சென்று இருக்கிறார். நீங்கள் தவறாக நினைக்க வேண்டாம். உள்ளே வந்து அமருங்கள். அவர் இப்போது வந்து விடுவார்.” என்றாள் சிறுத்தொண்டரின் மனைவி. “ஆண்கள் இல்லாத வீட்டினுள் யாம் நுழைவதில்லை.

உன் கணவன் வந்த பிறகு வருகிறேன். அதுவரையில் கணபதீஸ்வர ஆலயத்தில் இருப்பேன். சிறுத்தொண்டன் வந்து என்னை அழைக்கட்டும்” என்று கூறி சென்றார் அகோரி. சிலமணி நேரம் கழித்து மதிய உணவு சாப்பிட ஒரு சிவன் அடியார்களும் இல்லாத கவலையில் மிக சோர்வாக தன் வீட்டிற்கு வந்தார் சிறுத்தொண்டர். “பல மணிநேரம் தேடியும் எந்த சிவன்னடியார்களையும் காணமுடியவில்லை. இன்று நான் எதுவும் சாப்பிடுவதாக இல்லை” என்றார். “நம் இல்லத்திற்கு உங்களை தேடி ஒரு வடதேச சிவதொண்டர் வந்தார். அவர் காசியில் இருந்த வந்த அகோரி போல தெரிகிறது. கணபதீஸ்வர ஆலயத்தில் இப்போது இருக்கிறார். நீங்கள் சென்று அழைத்தால் வருவதாக சொல்லி இருக்கிறார்.” என்றாள் சிறுத்தொண்டரின் மனைவி. மனைவியான வெண்காட்டுநங்கையார் சொன்னதை கேட்டு மகிழ்ச்சியடைந்த சிறுத்தொண்டர் வரும் விபரீதத்தை அறியாமல் மகிழ்ச்சியோடு அவசர அவசரமாக கணபதீஸ்வரர் கோயிலுக்கு ஓடி வந்தார். சிறுத்தொண்டர் சந்திக்க போகும் துன்பத்தை படித்தால் நம் மனம் துடித்து போகும். அந்த சம்பவத்தை என்னவென்று நாம் அறிந்துக் கொள்ள இறைவனே நம் மனதிற்கு தைரியத்தையும் தரவேண்டும். அந்த சம்பவம் என்ன என்பதை அடுத்த பகுதியில் சொல்கிறேன்.


எதிரியை நடுங்கச் செய்த சிறுத்தொண்டர் அறுபத்து மூவர் வரலாறு பகுதி – 11

சோழநாட்டில் சிறு நகரம் திருச்செங்காட்டங்குடி. இவ்வூரில் மாமாத்திரர் குலத்தில் பிறந்தவர் பரஞ்சோதியார். இவர் சோழமன்னரிடம் சேனாதிபதியாக இருந்தவர். பரஞ்சோதியார் போர்களத்தில் நின்றாலே எதிரிகள் அஞ்சுவர். எதிர்த்து வரும் எதிரியின் தலைகளை வெட்டி பந்தாடுவார். சோழமன்னரின் ஆட்சிக்கு பெரும் காவலாக இருந்து வந்தார் பரஞ்சோதியார். இதனால் சோழ மன்னர், பரஞ்சோதியார் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் அதிகமாகவே வைத்திருந்தார். ஒருநாள் வாதாபி என்ற நகருக்கு சென்று போர் செய்து யானைபடை, குதிரைபடை என்றும் மணிகள், விலை மதிப்பற்ற பொருட்கள் என பல பொக்கிஷங்களை திரட்டி கொண்டு வந்தார். இதை கண்ட சோழ மன்னர் மட்டற்ற மகிழ்ச்சியடைந்தார். “வாதாபி நகரத்தையே வீழ்த்திய நீ மாவீரன்.” என்றும், “உனக்கு நீகர் யாரும் இல்லை.” என்றும் மனமார பரஞ்சோதியாரை புகழ்ந்தார். அருகில் இருந்த அமைச்சர் ஒருவர், “அரசே நம் பரஞ்சோதியர் வீரர் மட்டுமல்ல… சிறந்த சிவபக்தர். பக்தர் என்று சொல்வதை விட சிவதொண்டர் என்று கூறுவது மிகையாகாது” என்று பரஞ்சோதியாரை பற்றி புகழ்ந்தார். இதை கேட்ட சோழமன்னர், “என்ன சிவதொண்டரையா நான் வேலை வாங்கினேன். பரசோதியாரே.. எம்மை மன்னியுங்கள். பல யுத்த களத்தில் ஒரு சிவதொண்டரையே உயிர்களை கொல்ல அனுப்பினேனே… இப்பாவம் எத்தனை பிறவி எடுத்தாலும் நீங்காதே.” எனக்கு என்று மனம்வருந்தி பேசினார் அரசர். “அரசே.. கவலைவேண்டாம். சிவபக்தி என்பது என் தொண்டு.

சேனாதிபதி என்பது என் கடமை. செய்யும் தொழிலும் தெய்வம் என்பதே என் நிலை. இதில் எந்த தவறும் சிவ தொண்டுக்கு பங்கமும் நடக்கவில்லை. ஓர் சிவதொண்டனுக்கு நாட்டை பாதுகாக்கும் பணியை தந்த தங்களுக்கு புண்ணியமே சேரும்.” என்றார் பரஞ்சோதியார். “நீங்கள் என்ன சமாதானம் சொன்னாலும் என் மனம் கேட்கவில்லை. உங்கள் ஆயுள் முழுவதும் அரசு பணி செய்தால் எவ்வளவு சன்மானமோ அனைத்தையும் இன்றே தருகிறேன். மேலும் உங்கள் சிவதொண்டுக்கு தேவையான பொன்னும் பொருளும் தருகிறேன். அவை என் அன்பு பரிசு. மறுக்காமல் ஏற்றுக்கொள்ளுங்கள்.” என்ற அரசர், பரஞ்சோதியாருக்கு சிறப்புகள் செய்து அனுப்பினார். பரஞ்சசோதியார் சிவதொண்டை தொடர்ந்து செய்தார். சிவாலயங்களுக்கு திருப்பணியை சிறப்பாக செய்து வந்தார். திருச்செங்காட்டாங்குடியிலுள்ள கணபதீஸ்வரர் பெருமானை தினமும் வழிபட்டு சிவனடியாருக்கு உணவு கொடுத்து உபசரித்த பிறகே, தான் உணவு உண்ணும் வழக்கத்தை வைத்திருந்தார். அவரின் அன்பு மனைவி திருவெண்காட்டு நங்கையும், கணவரை போல் சிவபக்தியில் சிறந்து விளங்கினாள்.

தன் கணவர் அழைத்து வரும் அடியார்களுக்கு அருசுவை உணவும் பழங்களும் தந்து உபசரித்தாள். நம் நாட்டின் சேனாதிபதியாக திகழ்ந்தவர், எவ்வித ஏற்று தாழ்வு பாராமல் அனைவருக்கும் அன்னதானம் அளித்து குறிப்பாக சிவனடியார்களுக்கு உணவு படைத்த பிறகே சாப்பிடுவது என்கிற கொள்கையில் உறுதியாக இருப்பதை மக்கள் போற்றினார்கள். பரசோதியாரின் சிவதொண்டை பாராட்டி சிறுதொண்டர் பெயர் தந்து என்று புகழ்ந்தனர். சிறுத்தொணடரின் மனைவி திருவெண்காட்டு நங்கை கருத்தரித்தாள். ஆனாலும் கணவர் அழைத்து வரும் சிவன்னடியார்களுக்கு உணவு படைத்தபிறகு தன் கணவர் உணவு உண்டயபிறகுதான் தானும் உணவும் உண்ணும் பழக்கத்தை வைத்திருந்தாள். இந்த தம்பதிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தனக்கு வாரிசு பிறந்தது என்ற மகிழ்ச்சியை விட சிவபெருமானுக்கும் சிவதொண்டர்களுக்கும் தொண்டு புரிய நமக்கு ஓர் வாரிசு பிறந்து இருக்கிறானே என்ற மகிழ்ச்சித்தான் சிறுதொண்டருக்கு அதிகமாக இருந்தது. குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவையே ஓர் திருவிழா போல சிறப்பாக நடத்தினார். சிவன்னடியார்களுக்கு சிறப்புகள் செய்தும், சிவலாயங்களுக்கு அபிஷேகங்களை ஆராதனைகளை திருப்பணிகளை செய்தும், தன் குழந்தைக்கு “சீராளதேவர்” என பெயர் சூட்டினார். இப்படி மகிழ்ச்சியாக இருந்த சிறுத்தொண்டர் வாழ்க்கையில் வடதேசத்தில் இருந்து வந்த ஓர் அகோரியால் மிக பெரிய பிரச்சினை ஏற்பட்டது. அது என்ன..?


தொண்டனுக்காக தலைநிமிர்ந்த இறைவன் அறுபத்து மூவர் வரலாறு பகுதி – 10

கும்பகோணத்துக்கு வடமேற்கு பதினான்கு மைல் தொலைவில் இருக்கிறது திருப்பனந்தாள் தாடகேச்சுரம் திருக்கோயில். பனைமரத்தின அடியில் இறைவன் தோன்றியதால் திருப்பனந்தாள் என்ற பெயர் ஏற்பட்டது. தாடகை என்னும் சிவபக்தைக்காக இறைவன் தன் கோயிலுக்கு தாடகேச்சுரம் என்கிற பெயரை கொண்டார். அந்த சம்பவத்தை அறிந்துக்கொள்வோம். இந்த திருப்பனந்தாள் ஆலயத்திற்கு தினமும் தாடகை என்கிற சிவபக்தை இறைவனுக்கு பூமாலை சாத்துவதை வழிபாடாக வைத்திருந்தாள். ஒருநாள் அவள் லிங்கத்திற்கு மாலை சாத்தும் போது அவள் முந்தானை நழுவியது. புடவையை சரி செய்ய பூமாலையை தரையில் வைத்தால் தோஷமாகிவிடுமோ என்ற கவலையில் இறைவனுக்கு மாலை சூட முடியாமல் தவித்தாள். அந்த பெண்ணின் சங்கடத்தை புரிந்து கொண்ட இறைவன், அவள் மாலை போடுவதற்கு ஏதுவாக தன் தலையை குனிந்துக் கொண்டு மலர் மாலையை ஏற்றுக்கொண்டார். இந்த சம்பவத்திற்கு பிறகு அந்த ஸ்தலத்தில் சாய்ந்த லிங்கம் நிமிரவே இல்லை.

பல வருடங்கள் கழித்து சோழ மன்னர், இந்த கோயிலில் சாய்ந்த சிவலிங்கத்தை நேராக நிறுத்தி வழிபட விரும்பி பலவிதமாக போராடினார். இரும்பு சங்கலியால் லிங்கத்தை கட்டி மறுமுனை யானையின் உடலில் இணைத்தும் இழுத்து பார்த்தார். யானைதான் சோர்வுற்று மயங்கி விழுந்ததே தவிர சிவலிங்கம் தலை நிமிரவில்லை. இதனால் மிகவும் மனவருத்தத்திற்கு ஆளானார் அரசர். இந்த செய்தியை குங்குலியக்கலய நாயனார் அறிந்து, மன்னரின் மனகவலையை தீர்க்க முதலில் திருக்கடவூர் ஈசனை வணங்கி, திருப்பனந்தாளுக்கு வந்து மன்னரை சந்தித்து, “நான் என் அப்பனான ஈசனின் லிங்கத்தை நிமிர்த்த முயற்சிக்கிறேன்.” என்றார். “யானையால் கூட இந்த லிங்கத்தை நிமிர்த்த முடியாமல் போராடி தோற்றது. உங்களால் எப்படி இயலும்.? முயற்சிப்பது வீண் வேலை. இந்த முயற்சியில் உங்களுக்கே ஏதேனும் விபரீதம் நடந்தால் என்ன செய்வது.? சாய்ந்த லிங்கம் சாய்ந்தே இருக்கட்டும்” என்றார் சோழ மன்னர். “எந்த விபரீதமும் நடக்காது அரசே. அப்படியே நடந்தாலும் எனக்கு அது இறைவன் கொடுத்த பரிசாகவே எண்ணுவேன்.” என்ற குங்குலியகலய நாயனார்,


கயிற்றால் ஒரு முனையை லிங்கத்தில் கட்டி மறுமுனையை தன் கையில் வைத்து இழுத்து பார்த்தார். லிங்கத்தில் எந்த அசைவும் இல்லை. சுற்றி இருந்த மக்களும், அரசரும் “ அய்யா…வேண்டாம் விட்டு விடுங்கள்” என்றார்கள். ஆனால் குங்குலியகலய நாயனார் கடைசி முயற்சியாக யாரும் எதிர்பாராத செயலை செய்தார். இதுவரை தன் கையால் லிங்கத்தை இழுத்த கயிற்றை தன் கழுத்தில் கட்டிக் கொண்டு லிங்கத்தை இழுத்தார். வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தவர்கள் பதறினார்கள். உயிர் போனாலும் பரவாயில்லை என துணிந்த கலயநாயனாருக்காக சிவலிங்கமாக சாய்ந்திருந்த இறைவன் தலை நிமிர்ந்தான். சோழ மன்னரும் பக்தர்களும் குங்குலியகலய நாயனாரை போற்றி புகழ்ந்தார்கள். சில நாட்கள் திருப்பனந்தாள் ஆலயத்தில் இருந்து இறைவனுக்கு சேவை செய்துவிட்டு தன் சொந்த ஊரான திருக்கடவூருக்கு திரும்பி வந்து இறைவனை தரிசனம் செய்து தன் வீட்டுக்கு சென்றார் நாயனார். அப்போது கலயனாருக்காக திருபனந்தாள் தாடகேச்சுரம் இறைவன் மனம் இறங்கியதை கேள்விப்பட்டு திருஞானசம்பந்த சுவாமிகளும், திருநாவுக்கரசு சுவாமிகளும் குங்குலியகலயனார் வீட்டுக்கு வந்து வாழ்த்தினார்கள். குங்குலியகலய நாயனார் பல ஆண்டுகள் சிவ ஸ்தலங்களுக்கும் சிவனடியார்களுக்கும் தன் சிவதொண்டை சிறப்பாக செய்து சிவபெருமானின் திருவடியில் முக்தியடைந்தார். நாம் அடுத்த பகுதியில் காண இருப்பது “சிறுத்தொண்ட நாயனார்” என்று சிறப்பாக அழைக்கப்படும் பரஞ்சோதியார் வரலாறு.


வறுமை வழிந்த வீட்டில் குபேரன் குடிபுகுந்தான்: குங்குலியக்கலய நாயனார் வரலாறு-அறுபத்து மூவர் வரலாறு பகுதி – 9

சென்ற பகுதியை படிக்க திருக்கடவூரில் கலயனார் என்பவர் இருந்தார். அவர் ஒரு சிறந்த சிவபக்தர். அதனாலேயே தினமும் சிவபெருமான் ஆலயத்தில் நாள் தவறாமல் குங்குலிய தூபம் போடுவதை சிவபணியாக கடைபிடித்து வந்தார். கலயனாராக இருந்தவரை ஊர் மக்கள் குங்குலியக்கலயனார் என்று அழைத்தார்கள். தன்னிடம் அன்பாக இருப்பவரிடம் வம்பாக திருவிளையாடல் புரிந்து பக்தியை சோதிப்பது அய்யன் சிவபெருமானுக்கு பிடித்தமான ஒன்று. இதில் குங்குலியக்கலயனார் மட்டும் விதிவிலக்கா என்ன.? அதனால் ஈசன், கலயனாரை சோதிக்க ஆரம்பித்தார். குடும்பஸ்தர்களுக்கு சோதனை பணத்தால்தான் ஏற்படும் என்பதால் பண பிரச்சினையை கொடுத்தார் கலயனாருக்கு ஈசன். திடீர் பணப் பிரச்சினை ஏற்பட்டதால் என்ன செய்வது? – ஏது செய்வது? என்று சிந்தித்தார். அந்த சிந்தனை குடும்பத்தை எப்படி காப்பாற்றுவது என்பதில் அல்ல அச்சிந்தனை, அப்பன் சிவனுக்கு இனி எவ்வாறு தினமும் குங்குலியச் சேவை செய்வது? என்பதே அவர் கவலை. அதனால் தன் பெயரில் இருந்த நிலத்தை விற்று அந்த பணத்தில் தினமும் சிவலாயத்திற்கு குங்குலியத்தால் வாசனை புகையை பரவச்செய்தார். நிலம் விற்ற பணத்தில் இருந்து ஒரு பைசா கூட தன் குடும்பத்திற்காக என்று செலவு செய்யவில்லை. சில மாதங்களில் அத்தனை பணமும் சிவசேவைக்கே குங்குலிய புகையாக கரைந்தது.

கலயனாரின் மனைவியும் குழந்தைகளும் பசியால் வாடினார்கள். தன் குழந்தை பசி மயக்கத்தில் துவண்டு கிடப்பதை பொருக்க முடியாமல் கலயனாரின் மனைவி, தன்னுடைய திருமாங்கல்யத்தை கழற்றி, “இதை விற்று நெல் வாங்கி வாருங்கள்” என்றாள். திருமாங்கல்யத்தை பெற்று கொண்டு சாலையில் நடந்து வந்து கொண்டு இருந்தார் கலயனார். அப்போது அவர் கண்களில் சிவாலயம் தெரிந்தது. “இன்று சோமவாரம் ஆயிற்றே… பணம் இல்லாமல் குங்குலிய சேவையை எப்படி செய்வது?” என்ற சிந்தனையில் இருந்த போது அவர் எதிரில் குங்குலிய வியபாரி வந்து கொண்டு இருந்தார். குங்குலிய வியபாரியை கண்ட கலயனார் மகிழ்ச்சியடைந்தார். அந்த குங்குலிய வியபாரியிடம், “அய்யா…உங்களிடம் இருக்கும் குங்குலியம் முழுவதையும் என்னிடம் தாருங்கள். அதற்கு ஈடாக எம்மிடம் பொன் நகை ஒன்று இருக்கிறது.” என்றார் கலயனார். அதன்படி திருமாங்கல்யத்தை கொடுத்து வியபாரியிடம் இருந்து குங்குலிய மூட்டையை வாங்கி மகிழ்ச்சியுடன் திருக்கோயில் சென்றார்.

குங்குலிய மூட்டையை ஒர் இடத்தில் பத்திரமாக வைத்துவிட்டு, அதில் இருந்து நிறைய குங்குலியத்தை எடுத்து கோயில் முழுவதும் வாசனையை புகையால் பரவச் செய்தார். அங்கு இருந்த ஒருவர், “என்ன கலயனாரே.. சாம்பிராணி புகை போடுவது போல் குங்குலியத்தை இப்படியா போடுவது” என்றார். “சிவதொண்டு செய்வதில் கணக்கு பார்க்க கூடாதய்யா” என்ற கலயனார், தன் சிவதொண்டில் மெய் மறந்து இருந்தார். சிவ தொண்டு செய்து முடிந்ததும் தன் வீட்டின் நினைவு வந்தது. “இரவாகிவிட்டதே.. அய்யோ நெல் வாங்க மனைவி கொடுத்த திருமாங்கல்யத்தை விற்று குங்குலியம் வாங்கி விட்டேனே.. வீட்டுக்கு சென்றால் மனைவி திட்டுவாளே” என்ற கவலையால் சிவன் கோயிலிலேயே உறங்கிவிட்டார் கலயனார் அதே சமயம் கலயனாரின் வீட்டில்…. கலயனாரின் மனைவி, தன் கணவர் இன்னும் வீடு வந்து சேரததால் கவலை அடைந்தாள். இதுவரை இப்படி அவர் இரவு நேரத்தில் வெளியே எங்கும் தங்கியதில்லையே… அவருக்கு என்ன ஆனதோ என்று பயந்து போனாள். கவலை ஒரு பக்கம் பசி மறுபக்கம் வாட்டி வதைத்து உறங்கிவிட்டாள். அது உறக்கமா மயக்கமா என்று வறுமையை அனுபவித்தோர் அறிவர். அப்போது அவளுக்கு ஒரு கனவு. கனவில் வந்தது கணவன். அவன் அருகில் இறைவன். “பெண்ணே கலங்காதே. உன் கணவனுக்கு எந்த தீங்கும் இல்லை. இதோ பார் நம் கோயிலில்தான் உறங்கிக்கொண்டிருக்கிறான். நம் ஆலயத்தில் உன் கணவன் குங்குலிய திருப்பணி இன்று செய்தான். வறுமையை துச்சமாக மதித்து எம் மீது கொண்ட பக்தியே பெரிது என நிருபித்தான். இனி இவன் குங்குலியக்கலய நாயனார் என அழைக்ப்படுவான். அவன் சேவைக்கு எமது அன்பு பரிசு. கண் திறந்து பார்.” என்று இறைவன், கலயனாரின் மனைவியின் கனவில் கூறி மறைந்தார். திடுக்கிட்டு விழித்து பார்த்த கலயனாரின் மனைவி நம்ப முடியாமல் திகைத்தாள். அவள் வீட்டில் நெல் மூட்டைகளும், பொன் நகைகளும் குவிந்துக் கிடந்தது. வறுமை வீடு – வசந்த மாளிகையாக ஜொலித்தது.


திருக்கோயிலில்… உறங்கிக் கொண்டிருந்த குங்குலியக்கலய நாயனாரை யாரோ பலமாக தட்டி எழுப்பி சென்றது போல உணர்ந்து, கண் விழித்து பார்த்தார். தட்டி எழுப்பியவர் யார் என்று தெரியவில்லை. ஆனால் மனைவியின் நினைவு வந்தது. “சரி அவள் என்ன திட்டினாலும் பரவாயில்லை. என் அன்புக்குரியவள் தானே திட்டுகிறாள். அதனால் என்ன குறைந்துவிடப் போகிறோம். இறைவன் இருக்கிறான். பொறுமையாக இருக்கலாம்.“ என்ற எண்ணத்தில் வீட்டை நோக்கி நடந்தார். தன்னுடைய தெருவில் வீட்டை தேடினார். இது என்ன மாயம்.? நம் தெருதானே இது.? ஆனால் நம் வீட்டை காணவில்லையே. நாம் உறக்கத்தில் நடக்கிறோமா? என்று யோசித்தபடி திரும்பி நடந்தார். அப்போது ஒரு மாளிகையில் இருந்து குங்குலியகலய நாயனாரின் குழந்தையும் – மனைவியும் உறவினர்களும் ஓடி வந்தார்கள். “நில்லுங்கள். எங்கே போகிறீர்கள். வீட்டுக்குள் வாருங்கள்.” என்று மனைவி அழைத்தாள். “நம் வீடு எங்கே.?” என்றார் குழப்பத்துடன் நாயனார். “இதோ இதுதான் அப்பா” என்று தன் குழந்தை காட்டிய வீட்டை பார்த்து பிரமித்தார். நேற்றுவரை வறுமை வழிந்த வீட்டில் இன்று குபேரன் குடிபுகுந்தான். எப்படி இது சாத்தியம் – என்ன நடந்தது? என்று யோசித்தார். நடந்ததை மனைவியும் உறவினர்களும் விவரித்தார்கள். வசதிகள் வந்தாலும் உறவுகள் கிடைத்தாலும் தன் சிவ தொண்டில் தொடர்ந்து வந்தார் குங்குலியக்கலய நாயனார்.

இது எப்படி சாத்தியம் என்று சிலருக்கு கேள்வி எழலாம். மாயாஜாலவித்தை தெரிந்தவர் மா கொட்டையை வைத்து ஒரு நிமிடத்திலேயெ மாமரத்தை வளர்த்து காட்டுகிறார். தாஜ்மகாலையே மறைத்து காட்டுகிறேன் என்று ஒரு மேஜிக் நிபுணர் சொல்கிறார். ரெயிலேயே ஒரு நிமிடத்தில் மறைத்துகாட்டி அதிசயிக்க வைக்கிறார்கள்.

இப்படி இறைவனால் படைக்கப்பட்ட மனிதர்களே அதிசயங்களை வித்தைகளை செய்து காட்டும்போது இறைவன் ஏன் குங்குலியக்கலய நாயனார் வாழ்க்கையில் இப்படி ஒரு அதிசயத்தை செய்திருக்க மாட்டார் என்று என்னதான் தோன்றுகிறது நமக்கு. குங்குலியக்கலய நாயனாரின் புகழ் ஊர் முழுவதும் தெரிந்தது. அப்போது திருப்பனந்தாள் என்ற ஊரில் ஒரு பெண்மணிக்காக சிவலிங்கம் கொஞ்சம் சாய்ந்திருந்தது. அந்த லிங்கத்தை நிமிர்த்த நினைத்தார் சோழ மன்னர். ஆனால் முடியவில்லை. மன்னருக்கு உதவினார் குங்குலியக்கலய நாயனார். அது எப்படி?

சிவபெருமானையே தூது அனுப்பி தெருவில் நடக்க வைத்தானா? -அறுபத்து மூவர் வரலாறு பகுதி – 8

நம்பியாரூரரை கண்டதும் அவரை உள்ளே அனுமதிக்காமல் கதவை சாத்தினாள் பரவை. நம்பியாரூரர் மனம் கலங்கி கோயிலுக்கு சென்று தன் நண்பரான சிவபெருமானிடம் முறையிட்டார். “நீ சங்கிலியை திருமணம் செய்து இருக்கக்கூடாது. செய்துவிட்டாய். இனி இதை பற்றி பேசியும் எந்த பயனும் இல்லை. சரி உனக்கு நான் என்ன செய்ய வேண்டும்?”. என்றார் இறைவன். “எனக்காக பரவையிடம் சமாதானம் பேச வேண்டும்” என்றார் சுந்தரர். தன் நண்பனுக்காக மகேஸ்வரனே பரவையை சந்திக்க அவள் வீட்டுக்கு கோயில் அர்ச்சகர் உருவில் சென்றார். கதவை தட்டினார் அர்ச்சகர். “யாரது” என்றபடி கதவை திறந்தாள் பரவை. அர்ச்சகரை பார்த்து, “என்ன விஷயம்?” என்றாள். “சுந்தரர் விஷயமாக பேச வந்துள்ளேன்.” என்றார் இறைவன். பரவையாரின் முகம் கோபத்தில் சிவந்தது. வாயில் கதவை படார் என்று சாத்திவிட்டாள். நடந்த சம்பவத்தை சுந்தரரிடம் சொன்னார் சிவபெருமான். நம்பியாரூரர் விடுவதாக இல்லை.

“எனக்காக மறுபடியும் பேசுங்கள்.” என்றார். “காலையில் பார்க்கலாம் இப்போது அமைதியாக சென்று உறங்கு. எல்லாம் நல்லபடியாக நடக்கும்.” என்று சுந்தரரை சமாதானம் செய்தார் ஈசன். மறுநாள் காலை சிவபெருமான் பரவையார் வீட்டின் கதவை தட்டினார். கதவை திறந்து பார்த்த பரவை அதிர்ந்தாள். அவள் எதிரே சிவபெருமான். பரவை ஆனந்த கண்ணீருடன் இறைவனின் காலில் விழுந்து ஆசிப்பெற்றாள். பரவையாரின் முன் ஜென்ம சம்பவங்களை விவரித்தார் இறைவன். அனைத்தையும் உணர்ந்து சமாதானம் கொண்டாள். நேற்றும் வந்தது இறைவன் என்று அிறயாமல் பிழை செய்தேன். மன்னிக்க வேண்டும் என்று வேண்டினாள். மன்னித்தார் இறைவன். பரவையார் மனம் மாறி சுந்தரருடன் இணைந்தார். இந்த அற்புத செய்தி ஊர் முழுவதும் தெரிந்தது. அப்போது ஏயர்கோன் கலிகாமன் என்பவருக்கும் இந்த செய்தி கிடைத்தது. எல்லோரும் அற்புதம் என்று போற்றிய சம்பவம் பெரும் சிவபக்தரான அவருக்கு மட்டும் ஆத்திரத்தை உண்டாக்கியது. சுந்தரனுக்காக சிவபெருமானையே தூது அனுப்பி தெருவில் நடக்க வைத்தானா? அய்யோ… என்ன கொடுமை இது? எவன் அவன் சுந்தரன்.? என்று ஆத்திரத்துடன் கூறிவந்தார். அவரின் கோபம் சுந்தரருக்கு தெரிவிக்கப்பட்டது. நம்பியாரூரர் மிக வருந்தினார். ஏயர்கோன் கலிகாமரை சந்திக்க விரும்பினார். அதற்கு ஒருவழியை சிவபெருமானே உண்டாக்கினார். ஏயர்கோன் கலிகாமருக்கு கடுமையான வயிற்று வலியை ஏற்படுத்தினார். துடித்து போனார் ஏயர்கோன்.

மருத்துவ மேதைகள் பலர் மருத்துவம் பார்த்தும் வயிற்று வலி தீரவில்லை. சிவபெருமானே இது என்ன சோதனை? என்று இறைவனின் முன்பாக கதறினார் ஏயர்கோன் கலிகாமர். அப்போது சிவபெருமான், அசரீரியாக “உனக்கு மருத்துவன் நம்பியாரூரன். அவன் மருந்து தந்தால் உன் நோய் தீரும்.” என்றார். அதற்கு ஏயர்கோன், “அய்யனே… தங்களை தூது அனுப்பி அவமானப்பட வைத்த சுந்தரனால் என் நோய் தீரும் என்றால் அப்படிபட்ட உயிர் இந்த உடலுக்கு தேவையில்லை.” என்றவாறு கத்தியால் தன்னை தானே குத்தி இறந்தார் ஏயர்கோன் கலிகாமர்.ஏயர்கோனின் பக்தியை எண்ணி மகிழ்ந்தார் சிவபெருமான். அச்சமயம் நம்பியாரூரர் ஏயர்கோனை சந்திக்க வந்திருந்தார். ஏயர்கோன் இறந்து போனார் என்று செய்தி கேட்டு கதறிய சுந்தரர் அவரின் உடலை தூக்கி தன் மடியில் வைத்து அழுதார். “ஒரு சிவபக்தன் உயிர் பிரிய நானே பெரும் காரணமானேனே… இனி நானும் உயிரோடிருந்து பயன் ஏது?“ என்றவாறு ஏயர்கோன் குத்தி இறந்த அதே கத்தியை எடுத்து தம் உயிரையும் மாய்த்துக்கொள்ள எண்ணினார் சுந்தரர். உடனே சிவபெருமான் அங்கு தோன்றி, சுந்தரரை தடுத்தார். ஏயர்கோன் கலிகாமருக்கும் உயிர் தந்தார். நம்பியாரூரரின் பெருமையை உணர்ந்தார் ஏயர்கோன். “என் உயிர் பிரிந்ததை கண்டு துடித்து உன் உயிரையும் இழக்க துணிந்தாயே…உனக்காக இறைவன் தூது சென்றது நியாயமே” என்று நம்பியாரூரரை போற்றி மகிழந்தார். சிறந்த சிவபக்தர்களான நம்பியாரூரரையும் ஏயர்கோன் கலிகாமரையும் பெரிய புராணம் சுந்தரமூர்த்தி நாயனார் எனவும் ஏயர்கோன் கலிகாம நாயனார் எனுவும் புகழ்ந்துரைக்கிறது.



சுந்தரருக்கு கண் பார்வை தந்த அன்னை காமாட்சி அறுபத்து மூவர் வரலாறு பகுதி – 7

பல மாதங்கள் இல்லறத்தை மகிழ்ச்சியோடு நடத்தினார் நம்பியாரூரர். ஒருநாள் சுந்தரருக்கு தன் சொந்த ஊரான திருவாரூருக்கு செல்ல வேண்டும், முதல் மனைவி பரவையாரை பார்க்க வேண்டும் என்கிற ஆவல் உண்டானது. தன் விருப்பத்திற்கு சங்கிலி தடையாக இருப்பாள் என்பதால் அவளிடம் சொல்லாமல் புறப்பட்டார். சங்கிலியாருக்கு தெரியாமல் போனாலும் இறைவனுக்கு தெரியாமல் போகுமா. திருவொற்றியூர் எல்லையை விட்டு வெளியேறியதும் சுந்தரரின் கண்பார்வை பறிபோனது. “அய்யோ குருடன் ஆனேனே…“ என்று கதறி அழுதார். அத்துடன் வயதானவர் போல் அவர் உருவம் மாறிப் போனது. சத்தியத்தை மீறியதால் இந்த தண்டனை என்பதை உணர்ந்தார். “இறைவா… என்னை மன்னிக்க வேண்டும்.“ என்று அழுது, “அழுக்கு மெய்கொடு“ என தொடங்கும் பதிகத்தை பாடினார் சுந்தரர் செய்வது தவறு என்று தெரிந்தும் அந்த தவறை துணிச்சலுடன் செய்வோர்க்கு மன்னிப்பு கிடையாது என்பதில் சிவபெருமான் உறுதியாக நின்றார். அதுவும் “திருவொற்றியூர் எல்லையை விட்டே தாண்ட மாட்டேன்… கடைசிவரை சங்கிலியாருடன்தான் வாழ்வேன்” என்று தன் முன்னே செய்த சத்தியத்தை மீறியதால் கடும் கோபத்தில் இருந்தார் சிவன். அதனால் தன்னுடைய நண்பராக இருந்தாலும் கருணை காட்டாமல் சுந்தரருக்கு திரும்ப கண் பார்வையை தரவில்லை இறைவன். இனி நடப்பது நடக்கட்டும்.

இறைவன் மனம் ஒருநாள் கருணையால் விடிவு காலம் பிறக்கும். அதுவரை பொறுமையாக இருப்போம் என்ற எண்ணத்தில், கால் போன போக்கில் சென்று எப்படியும் திருவாரூரை அடைய முடிவெடுத்தார் சுந்தரர். சுந்தரருக்கு கண்பார்வை போனதால் வழியில் உள்ள ஊர்மக்கள் அவர் மேல் பரிதாபம் அடைந்தார்கள். இதனால் ஆங்காங்கே சிலர் ஆரூராரின் கையை பிடித்து அழைத்து சென்று வழி காட்டினார்கள். திருவடமுல்லை வாயிலை அடைந்து (சென்னை – திருமுல்லைவாயில்) அங்கு அருள் செய்யும் திருமுல்லைநாதரை வணங்கி தன் தவறுக்கு மன்னிப்பு கேட்டு ஒரு பதிகம் பாடினார். ஆனால் இறைவன் கண்டுகொள்ளவில்லை. இதனால் திருவெண்பாக்கம் சென்றார். இறைவனை வேண்டி ஒரு பதிகம் பாடினார். ஆனால் சிவபெருமான் இங்கும் சுந்தரரை மன்னிக்கவில்லை. இதனால் பெரிதும் வருந்திய சுந்தரர், “சிவபெருமானே இத்திருக்கோயிலில் நீ இருக்கிறாயா இல்லையா?“ என்றார். அதற்கு இறைவன் சுந்தரருக்கு ஓரு ஊன்றுகோல் தந்து, “நாம் இங்கேதான் இருக்கிறோம். நீ இங்கிருந்து போ.“ என்று சுந்தரரின் மீது கோபம் தணியாமல் சொன்னார். சிவனிடம் மன்னிப்பு கேட்டு மீண்டும் ஒரு பதிகம் பாடிவிட்டு அங்கிருந்து கிளம்பினார். இறைவன் தந்த ஊன்றுகோலை துணையாக கொண்டு, பழயனூர் சென்று இறைவனை மகிழந்து “முத்தா முத்திரவல்ல…“ என தொடங்கும் பதிகம் பாடி அங்கிருந்து காஞ்சிபுரம் வந்தடைந்தார்.


ஸ்ரீகாஞ்சி காமாட்சி அம்மனை முதலில் தரிசித்துவிட்டு, “திருக்கச்சி ஏகம்பனே” என்று மகிழ்ந்து பாடியபடி ஏகம்பரஸ்வரரை வீழ்ந்து வணங்கி, காமாட்சி அம்மனையும் வேண்டினார். வன்தொண்டரான சுந்தரரின் துன்பம் கண்டு சிவபெருமானிடம் சுந்தரருக்கு கருணைகாட்ட வேண்டினார் காஞ்சி காமாட்சி அன்னை. காமாட்சி அம்மையின் விருப்பத்தை ஏற்று நம்பியாரூரரின் இடது கண் பார்வையை இறைவன் தந்தார். அன்னையின் கருணையால் இறைவன் ஒரு பார்வையாவது தந்தாரே என்ற மகிழ்ச்சியில் “ஆலந்தானுகந்து அமுது செய்தானை” என்ற திருபதிகத்தை பாடினார் சுந்தரர். சில மாதங்கள் காஞ்சியில் தங்கினார். பிறகு திருவாரூர் தியாகராஜப் பெருமான் நினைவு வரவே மீண்டும் பயணத்தை தொடங்கினார். அங்கிருந்து வழியில் உள்ள பல ஊர்களுக்கு சென்று அங்கு இருக்கும் பல சிவாலயங்களுக்கு சென்று வணங்கி பதிகம் பாடினார். இடது கண் பார்வை கிடைத்த மகிழச்சி இருந்தாலும், தன் உடல் நோய் தீர்க்க இறைவன் எப்போது அருள் செய்வாரோ என நினைத்து ஏங்கினார் ஆருரர். திருத்துருத்தி என்கிற ஊரில் உள்ள சிவபெருமானை தரிசி்த்தார். தன் உடல்நோய் என்று தீருமோ என்றார். அதற்கு இறைவன், “நீ இந்தக் கோயிலின் வடபக்கத்தில் உள்ள குளத்தில் நீராடி வா உன் உடற்பிணி தீரும்.“ என்றார் இறைவன். அவ்வாறு குளத்தில் சுந்தரர் முழ்கி கரை சேர்ந்த போது, சுந்தரரின் உடல்பிணி மறைந்து சுந்தரர் எனும் பெயருக்கேற்ப சுந்தர உடலை பெற்றார். அங்கிருந்து தம் சொந்த ஊரான திருவாரூர் வந்தடைந்த சுந்தரருக்கு வலது கண் பார்வையும் தந்தருளினார் சிவபெருமான். சுந்தரர் திருவாரூர் கோயிலில் தங்கியிருந்தார். அதற்குள் சிலர், சுந்தரர் திருவொற்றியூரில் சங்கிலியாரை இரண்டாவது திருமணம் செய்த விஷயம் பரவையாருக்கு சொல்லிவிட்டார்கள். பரவையார் பெரும் ஆத்திரம் கொண்டார்.

Read More at: bhakthiplanet.com/2011/05/%e0%ae%9a%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%88/ © BHAKTHIPLANET.COM

இறைவனுக்கே வேடிக்கை காட்டிய சுந்தரர் அறுபத்து மூவர் வரலாறு பகுதி – 6

“நீங்கள் திருவெற்றியூர் சென்று ஈசனை வணங்கி வாருங்கள். இறைவன் அருளால் நல்ல திருப்பம் ஏற்படும்“ என்றார். மனித உருவத்தில் தெய்வமே நேரில் வந்து சொல்வது போல் இருந்தது சங்கிலியாரின் தந்தைக்கு. தன் மகளின் எதிர்கால வாழ்க்கைக்கு ஓர் ஓளி தெரிகிறது என மகிழ்ந்தார்.மகளை அழைத்து கொண்டு திருவெற்றியூர் வந்தார். ஒரு கன்னிமடம் அமைத்து சகல வசதியோடும் சகல பாதுகாப்புடனும் தங்க வைத்துவிட்டு, “நீ இங்கேயே தங்கி சிவபெருமானை வணங்கி வா. உனக்கு நல்ல நேரம் பிறக்கும்.“ எனச் சொல்லி, தன் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றார் ஞாயிறு கிழார். சங்கிலியார் ஏதோ கடமைக்கென்று சிவனுக்கு சேவை செய்யாமல் உண்மையான பக்தியோடு சேவை செய்தார். தினமும் மலர்களை பறித்து பூமாலையாக்கி அதை திருவெற்றியூர் தியாகராஜப்பெருமானுக்கு சமர்பிக்கும் வழக்கத்தை வைத்திருந்தார். அத்துடன் திருக்கோயிலை சுத்தம் செய்வது என்று பல திருப்பணிகளையும் மகிழ்ச்சியுடன் சிவனை நினைத்து சேவை செய்து கொண்டு இருந்தார். ஒருநாள் – திருவெற்றியூர் வந்த சுந்தரர், இறைவனை தரிசிப்பதற்காக கோவிலுக்குள் சென்றார். சிவனை வணங்கி பதிகம் பாடினார். அந்த நேரத்தில் சங்கிலியார் இறைவனுக்கு பூமாலையை எடுத்து வந்தார்.

சங்கிலியாரை கண்டதும் நம்பியாரூரர் காதல் கொண்டார். இது முன்ஜென்ம தொடர்போ என மகிழ்ந்தார். சங்கிலியாரை திருமணம் செய்ய வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார். இதனால் சங்கிலியை பற்றி விசாரித்து தெரிந்துக்கொண்ட சுந்தரர், ஒரு நண்பனிடம் சொல்வதை போன்று திருவெற்றியூர் இறைவனிடம் தன் காதல் எண்ணத்தை சொல்லி வேண்டினார். சிவபெருமானும் தன் நண்பனுக்காக சங்கிலியார் கனவில் தோன்றி சுந்தரரின் விருப்பத்தை சொன்னார். அதற்கு சங்கிலியார் சுந்தரரை திருமணம் செய்ய சங்கிலியார் சம்மதித்தார். ஆனால் தன்னைவிட்டு எப்போதும் சுந்தரர் பிரியக்கூடாது என்றும் திருவெற்றியூரைவிட்டு அவர் போக கூடாது என்றும் சிவபெருமானிடம் கனவில் வேண்டினார். “அப்படியே ஆகட்டும்“ என்றார் சிவபெருமான். கனவில் இருந்து விழித்த சங்கிலியார், இறைவனே தன் தந்தையாக இருந்து தன்னுடைய திருமண விஷயத்தை கவனிப்பதை எண்ணி ஆனந்தம் அடைந்தார். சுந்தரரின் கனவில் தோன்றிய இறைவன், சங்கிலியின் சம்மதத்தையும், திருவெற்றியூரைவிட்டு சுந்தரர் செல்லக் கூடாது என்கிற நிபந்தனையையும் சொன்னார்.

சங்கிலி, தனக்கு மனைவியாக கிடைத்தால் போதும் என்ற காதல் மயக்கத்தில் இருந்த சுந்தரர், யோசிக்காமல் இறைவனின் நிபந்தனையை ஏற்றார். அதற்கு இறைவன் – “நீ அவளின் நிபந்தனைக்கு சரி என்று வார்த்தையில் சொன்னால் நம்ப மாட்டாள். அவளுக்கு சத்தியம் செய்து தா“ என்றார் இறைவன். “சரி… சத்தியம் செய்து தருகிறேன். ஆனால் எனக்கு நீங்கள் ஒரு உதவியை செய்ய வேண்டும். நான் சத்தியம் செய்ய சங்கிலி என்னை திருக்கோயில் கருவறைக்கு அழைத்துச் செல்வாள். ஆனால் அந்த நேரம் நீங்கள் கருவறையில் இருக்காமல் கோயிலுக்குள் இருக்கும் மகிழமரத்தில் இருக்க வேண்டும்.“ என்றார் சுந்தரர். “இவன் நம்மிடமே விளையாடுகிறான்.“ என்று கோபப்பட்ட இறைவன், இவன் வழிக்கே சென்று இவனுக்கு நாம் வேடிக்கை காட்டுவோம்“ என்று முடிவுடன், “உன் விருப்பப்படியே செய்கிறேன்” என்றார் திருவெற்றியூர் தியாகராஜப் பெருமான். உடனே சங்கிலியின் கனவில் தோன்றி,“உன் நிபந்தனையை சுந்தரர் ஏற்றான். நாளை அவன் உன்னிடம் பேசும் போது உன் நிபந்தனைக்கு சத்தியம் செய்து தரச்சொல். அவன் அதற்கு சம்மதித்து எம் கருவறைக்கு உன்னை அழைத்து சென்று சத்தியம் செய்து தர சம்மதிப்பான். ஆனால் நீ அவனை நம் கோயிலில் இருக்கும் மகிழமரத்தின் அருகில் அழைத்து வந்து , இந்த மகிழமர சாட்சியாக உன் நிபந்தனைக்கு சத்தியம் கேள். அவன் அப்படியே செய்வான்.“ என்றார் இறைவன்.

மறுநாள் சங்கிலியார் பூமாலை தொடுத்து இறைவனுக்கு சமர்பிக்கச் சென்றாள். அவளை சந்தித்த சுந்தரர் தன் காதலை சொல்லி அவள் சம்மதத்தை கேட்டார். சங்கிலி சம்மதி்தாள். தன் நிபந்தனையை சொன்னாள். அதனை ஏற்று சத்தியம் செய்து தந்தால் திருமணத்திற்கு சம்மதிப்பதாக சொன்னாள். ஒப்புக்கொண்ட சுந்தரர், “இறைவன் முன்னபாகவே உனக்கு சத்தியம் செய்து தருகிறேன் போதுமா.“ என்றார். “அந்த சிரமம் உங்களுக்கு வேண்டாம். நான் இந்த திருக்கோயிலில் இருக்கும் மகிழமரத்தின் மீது அன்பு வைத்திருக்கிறேன். எனக்கு அந்த மரமும் இறைவன்தான். நீங்கள் அந்த மகிழமரத்தின் முன்பாக சத்தியம் செய்தால் எனக்கு அதுவே போதும். அதுதான் என் ஒரே விருப்பம்.“ என்றாள். “அதிர்ச்சி அடைந்த சுந்தரர், வேறு வழி இல்லாமல் சங்கிலியுடன் சென்று மகிழமரத்தின் முன்பாக சத்தியம் செய்து தந்தார். பிறகு மிக நன்றாக உறவினர்கள் நண்பர்கள் ஆசியுடன் சுந்தரர் – சங்கிலி திருமணம் இனிதாக நடந்து முடிந்தது. மகிழ்ச்சியாக குடும்ப வாழக்கை சென்றுக் கொண்டிருந்தது. இறைவன் தன் திருவிளையாட்டை தொடங்கினார். சுந்தரருக்கு தன் முதல் மனைவியின் ஞாபகம் வந்தது. அதனால் அவர் செய்த ஒரு செயலால் சுந்தரரின் கண் பார்வை பறிபோனது. அப்படி என்ன செய்தார் சுந்தரர்? – ஏன் அவர் கண் பார்வை பறிபோனது…?


ஆற்றில் தொலைத்த தங்கம் குளத்தில் கிடைத்த அதிசயம் அறுபத்து மூவர் வரலாறு பகுதி – 5

நம்பியாரூரர் விழித்து பார்த்த போது தலைக்கு வைத்து படுத்திருந்த செங்கல் தங்ககல்லாக மாறி ஜொலித்தது. இதை கண்டு, “எம் இன்னலை தீர்த்த இறைவனே..!“ என்று போற்றி மகிழ்ந்தார். திருப்புகலூர் ஈசனால் கிடைத்தது இது. “தம்மையே புகழ்ந்து“ என்று தொடங்கும் திருபதிகத்தை பாடினார். தன் ஊரான திருவாரூர் சென்று அங்கு இருக்கும் சிவனை வணங்கி தன் இல்லத்திற்கு சென்றார். திருவிழாவை சிறப்பாக செய்து முடித்தார். சில நாட்கள் கழித்து திருநன்னிலத்தில் உள்ள திருகோவிலுக்கு சென்று “தண்ணியல் வெம்மையினன்“ என்ற சிவனை நினைத்து பதிகம் பாடிவிட்டு சென்றார். இப்படியே பல திருதலங்களுக்கு சென்று பல பதிகங்களை பாடினார். சில மாதங்களுக்கு பிறகு தன் மனைவியை பார்க்க வேண்டும் என்ற ஆவலில் திருவாரூக்கு திரும்பினார். தன் கணவர் பல மாதம் கழித்து வந்திருக்கிறார் என்பதை கண்டு மகிழ்ச்சியடைந்தாள் பரவையார். எண்ணற்ற திருக்கோயில்களுக்கு சென்று வந்த அனுபவத்தை தன் மனைவி பரவையாரிடம் பகிர்ந்து கொண்டார் சுந்தரர். அப்போது பரவை தன் கணவரிடம், “திருமுதுகுன்றப் பெருமான் கொடுத்த பொன்னை திருமணிமுத்தாற்றில் குளிக்கும் போது தவறவிட்டேன்“ என்றாள். “அதனால் என்ன…? திருமணிமுத்தாற்றில் தவறவிட்டதை நம் ஊரில் இருக்கும் கமலாயத்திருக்குளத்திலேயே எடுத்து விடலாம்.“ என்றார் சுந்தரர். “உங்களுக்கு என்ன ஆனது…? எங்கோ தொலைத்ததை இங்கே தேடினால் எப்படி கிடைக்கும்.?“ என்றாள் பரவை. “ஏன் கிடைக்காது.? இறைவன் மனம் வைத்தால் எந்த இடத்திலும் கிடைக்கும் வா என்னுடன்“ என்று கூறி குளத்தின் அருகே சென்று சிவபெருமானை வணங்கி குளத்தில் இறங்கினார் சுந்தரர். குளத்தில் தொலைந்து போன பொன்னை தேடினார். ஆனால் எதுவும் கிடைக்கவில்லை சுந்தரருக்கு. “எங்கோ விட்டதை இங்கே தேடினால் எப்படி கிடைக்கும்.? ஆற்றில் விட்டதை குளத்தில் தேடினால் கிடைக்குமா.?“ என்று நகைத்தாள் பரவை.

“சிவபெருமானே…நீயே கதி என்று இருக்கும் எம்மை இந்த அவமானத்தில் இருந்து காப்பாற்று.“ என்று வேண்டி, “பொன் செய்த மேனியினீர்” என்ற பதிகத்தை பாடினார் சுந்தரர். இந்த குளத்தில்தான் தொலைந்த பொன் கிடைக்கும் என்று முன்பை விட தீவிர நம்பிக்கையை கொண்டார் சுந்தரர். “ஏத்தா திருத்தளியேன்“ என்ற பதிகத்தையும் பாடியவுடன் பல மணிநேரம் போராடி கிடைக்காத பொன்னகை, ஆச்சரியமாக எங்கோ இருந்து, பந்து தணணீர் மேல் மிதந்து வருவது போல் ஒரு பொன்னகையும் மிதந்து வந்து சுந்தரரின் அருகே வந்து நின்றது. ஆனால், “இந்த நகை என்னுடையதில்லை.“ என்று மறுத்தாள் பரவை. அதனால் மேலும் சில பதிகங்களை பாடினார் நம்பியாரூரர். பிறகு பரவைக்கு சொந்தமான நகை திரும்ப கிடைத்தது. பழைய நகையுடன் இறைவன் அருளால் புதிய நகையும் கிடைத்தது என்ற இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்தாள் பரவை. ஒரு பொன் நகைக்காக ஏன் இத்தனை பதிகம் பாட வேண்டும்.? ஒரு பதிகத்திலேயே சிவபெருமான் ஏன் அருளவில்லை? என கேள்வி எழலாம். ஆனால் சிவபெருமான் தமிழ்மொழியின் இனிமையை விரும்புகிறவர். சுந்தரர் மற்றும் சிவஅடியார்களின் – தொண்டர்களின் தமிழ் புலமையை மேலும் மேலும் கேட்டு மகிழவே இவ்வாறு நேரம் எடுத்துக்கொள்வார் என்பதே உண்மை. ஒருவேளை நம்மை போல பதிகம் பாட தெரியாமல் பாடினால், “போதுமடா சாமீ“ என்று முதல் வரியை தொடங்கும் முன்பே நமக்கு உடனடியாக பலன் கிடைக்கலாம். ஒருசமயம், பாதயாத்திரையாக சிவதலங்களுக்கு சென்று வர வேண்டும் என்று சுந்தரரின் மனம் விரும்பியது. தன் விருப்பத்தின்படி பாதயாத்திரை புறப்பட்டு ஒவ்வொரு சிவதலங்களாக சென்றுகொண்டிருந்தார்.

ஒருநாள் அவ்வாறு யாத்திரையில் இருக்கும்போது, பசி கண்களை மறைத்தது. இன்னும் சில நிமிடத்தில் ஏதேனும் உணவு கிடைத்து சாப்பிடாவிட்டால் உயிர் போய்விடும் என்ற நிலைக்கே வந்துவிட்டார் நம்பியாரூரர் என்கிற சுந்தரர். சுந்தரர் சற்று மயக்கத்துடன் நடக்க முடியாமல் நடந்தார். தன் பிள்ளை படும் கஷ்டத்தை கண்டு எந்த தாய் – தந்தைதான் பொறுப்பார்கள்?. நல்ல நண்பனின் துயர் கண்டு யார்தான் கலங்காமல் இருப்பார்கள்?. நம் சிவபெருமான், சுந்தரின் நிலைகண்டு வருந்தினார். தாயுமானவர் எனும் தாய் உள்ளம் படைத்த சிவன், தண்ணீர் பந்தலை உடனே அமைத்து தன் நண்பன் சுந்தரர் வரும் வழியில் காத்து கொண்டு நின்றார். “நடக்க பாதை கூட சரியாக இல்லாத காடு போன்ற இப்பகுதியில், யாரோ ஒருவர் – புண்ணிய ஆத்மா தண்ணீர் பந்தல் அமைத்து இருக்கிறார்.“ என்ற மகிழ்ச்சியில் அவர் அருகே சென்று, “இது எம் ஈசனின் கருனையே.“ என்று கூறி கொண்டே தணணீரை குடித்தார் நம்பியாரூரர். “என்னப்பா… நெடும் பயணமோ?. உன் பசி உன் கண்களில் தெரிகிறது. என்னிடம் உணவு இருக்கிறது. இந்தா சாப்பிடு.“ என்று தன் அருகில் இருந்த உணவு பொட்டலத்தை சுந்தரரிடம் தந்தார், யாரோ ஒரு புண்ணியவன் வடிவில் நிற்கும் சிவபெருமான். “அய்யா… இருப்பதை எனக்கு தந்துவிட்டால் உங்களுக்கு உணவு.?“ என்றார் சுந்தரர். “அடேங்கப்பா… நீயாவது கேட்டாயே. என் பணியாளர்கள் என்ன செய்வார்கள் தெரியுமா?. நான் குளித்து தயாராக இருப்பேன். பெரிய பாத்திரத்தில் எதையோ மூடிக்கொண்டு வந்து, “உங்களுக்கு இன்று இதுதான் உணவு“ என்று சரியாக திறந்துகூட காட்டாமல் உடனே வேகமாக ஓடிவிடுவார்கள். பாவம் அவர்களுக்கு என்ன பசியோ? என்று நானும் கண்டுகொள்வதில்லை. நீயாவது கேட்டாயே பரவாயில்லை.“ சுந்தரர் சாப்பிட்டார். “அய்யா உணவு அற்புதம்.

நீங்களும் கொஞ்சம் சாப்பிட்டு பாருங்கள்“ என்றார் சுந்தரர். “இருக்காதா என்ன? என் மனைவி பெரிய சமையல்காரி. எத்தனை பேர் வந்தாலும் அத்தனை பேருக்கும் ருசியாக சமைத்து போட்டு எனக்கும் வைத்திருப்பாள். நான் அவள் கையால் சாப்பிட்டால்தான் அவளுக்கும் பிடிக்கும். அதனால் நீ இதை சாப்பிடு பரவாயில்லை.” என்றார் இறைவன். உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டு என்பது போல சுந்தரர், சாப்பிட்ட பிறகு ஒரமாக சற்று ஓய்வு எடுத்து உறங்கினார். சுந்தரர் ஆனந்தமாக தூங்கி விழித்தார். தனக்கு உணவும் தண்ணீரும் தந்தவரை தேடினார். சுற்றி சுற்றி பார்த்தார். பார்க்கும் இடமெல்லாம் செடிகொடிகளும் மரங்களும் புதருமாகத்தான் காட்சி தந்தது. தான் இருக்கும் இடம் ஒரு காடு என்பதை உணர்ந்தார். குடிதண்ணீர் பந்தலோ அந்த மனிதரோ அங்கு இல்லை. பிறகுதான் உணர்ந்தார். தனக்கு தணணீரும் உணவும் கொடுத்து உபசரித்தது சிவபெருமானே என்று மகிழ்ந்து போனார். சிவபெருமானின் கருணையை எண்ணி ஆனந்தத்தில் திளைத்தார். தன் பயணத்தை தொடர்ந்தார். திருக்குருகாவூர் வெள்ளடை என்ற சிவன் கோவிலுக்கு சென்று வணங்கிய பிறகு பல ஊர்களில் இருக்கும் சிவதலங்களுக்கு சென்றார்.

கற்றவர்களுக்கு செல்லும் இடமெல்லாம் சிறப்பு என்பது போல், சிவதொண்டரான நம்பியாரூரர் செல்லும் ஊர்களில் எல்லாம் நல்ல வரவேற்பை பெற்றார். இப்படியே பல ஊர்களில் இருக்கும் சிவன் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார். முன்னொரு சமயம், கயிலாயமலையில் ஸ்ரீபார்வதி தேவிக்கு தோழியாக இருந்தவர்கள் கமலினி, அனிந்ததை என்ற இருவர். அதில் கமலினி பூலோகத்தில் பிறந்து சுந்தரருக்கு மனைவியாக வாழ்ந்து கொண்டு இருக்கிறாள். அனிந்ததை, சங்கிலியார் என்ற பெயரில் பூலோகத்தில் ஞாயிறு என்ற ஊரில் ஞாயிறுகிழார் என்பவருக்கு மகளாக பிறந்து வளர்ந்து பருவ வயதை அடைந்தாள். “நல் அறிவு, பொறுமை, திறமை இப்படி எல்லாம் நம் மகளிடம் இருக்கிறது. அவளை திருமணம் செய்பவன் பாக்கியம பெற்றவனாக இருக்க வேண்டும்.“ என்று தன் மகளை பற்றி உயர்வாக தன் மனைவியிடம் சொல்லி வருவார் ஞாயிறுகிழார். சங்கிலியாருக்கு ஏற்ற நல்ல மணமகனை தேட வேண்டும் என்ற தீவிர முயற்சி எடுத்தார் தந்தை. சங்கிலியாரை பெண் பார்த்து விட்டு சென்றாலே மாப்பிள்ளை வீட்டாருக்கு ஏதாவது ஒரு பிரச்சனை ஏற்படும். சில சமயத்தில் உயிர் பலி கூட நடந்துவிடும். இதனால் சங்கிலியார் இராசியில்லாதவள் என்று ஊர் மக்கள் பேச ஆரம்பித்தார்கள். “எல்லாம் நல்லதுக்குதான். இந்த நிலையும் மாறும்” என்ற ஒரே நம்பிக்கையுடன் சிவபெருமானின் மேல் பாரத்தை போட்டு வாழ்ந்தார் ஞாயிறுகிழார். ஒருநாள், உறவினர்களின் ஒருவர் ஞாயிறு கிழாரை சந்தித்தார்.

Read More at: bhakthiplanet.com/2011/04/%e0%ae%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b2%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95/ © BHAKTHIPLANET.COM

சிவ பக்தர்களுக்கு குபேரன் துணை – அறுபத்து மூவர் வரலாறு பகுதி – 4

கமலினி திருவாரூரில் வந்து அவதரித்தார். பதியிலார் குலத்தில் பிறந்தார். அதாவது சிவனை தவிர வேறு யாரையும் நினைக்காமல் சிவதொண்டே உயர்ந்த தொண்டு என்று நினைக்கும் குலத்தில் பிறந்தாள். கமலினி பிறந்து சில நாட்கள் ஆனது. குழந்தைக்கு பெயர் வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் திருவாதிரை என்ற நல்ல நாளில் பரவையார் என்று திருநாமம் சூட்டினார்கள். பார்க்கும் போதே தூக்கி கொஞ்ச வேண்டும் போல் இருக்கும் தோற்றமளிக்கும் கலையான முகத்துடன் துருதுருவென இருந்தாள். காலம் நகர்ந்தது. குழந்தை பருவத்தை விட்டு பருவ வயதை அடைந்தாள். சிவசக்தியை நினைத்து தினமும் கோயிலில் பாடுவதை வழக்கமாக கொண்டிருந்தாள். அறிவு, திறமை, அழகு, நிதானம், குரல் இனிமை இத்தனையும் கொண்டவள்தான் பரவையார் என்று பெண்களே பரவையாரின் திறமையையும் அழகையும் புகழ்ந்தார்கள். நம்பியாரூரர் ஈசனை தரிசித்துவிட்டு ஆலயத்தை விட்டு வெளியேறி வந்து கொண்டு இருக்கையில் அப்போது பரவையார் கோயிலுக்குள் சென்று கொண்டு இருந்தாள்.

நம்பியாரூரரும் பரவையாரும் எதிர்எதிரே சந்தித்து கொண்டார்கள். “இவள் தேவலோக கன்னியா..? அப்பப்பா என்ன அழகு“ என்று தன் மனதினுள் வர்ணித்தார் நம்பியாரூரர். நம்பியாரூரரை கண்டவுடன் அவளுக்கும் அதே உணர்வு. தன்னையே மறந்தாள் பரவையார். இருந்தாலும் சிவனை வணங்கி அவன் நினைவாகவே வாழ பிறந்தவர்கள் நாம் என்ற உணர்வு மனதில் எழுந்தது. அதனால் சட்டென்று சுயநினைவுக்கு திரும்பி, தான் வந்த நோக்கத்தை புரிந்து கொண்டு கோயிலுக்குள் சென்றாள். இரும்பை காந்தம் இழுப்பது போல் பரவையரரை பின் தொடர்ந்தார் சுந்தரர். சுந்தரர் திருக்கோயிலுக்குள் வரும் முன்பே பரவையார் இறைவனை தரிசித்துவிட்டு பின் வாசல் வழியாக சென்றுவிட்டாள். பரவையாரும் சுந்தரரும் வார்த்தைகளால் காதலை சொல்லாமலே ஒருவருக்கு ஒருவர் மனதளவில் காதலை வளர்த்தார்கள். ஒருநாள் சிவபெருமானே தன் அடியார்களின் கனவில் தோன்றி, “சுந்தரருக்கும் பரவையாருக்கு திருமணம் செய்து வையுங்கள்.“ என்றார். அதேபோல் சுந்தரரின் கனவிலும் பரவையார் கனவிலும் ஈசன் தோன்றி, “நீங்கள் இருவம் திருமணம் செய்து கொண்டு வாழ்வீர்கள்.“ என்று கூறி ஆசி வழங்கினார் இறைவன்.. பரவையாருக்கும் சுந்தரருக்கும் திருமணம் நடந்தது.

திருமணத்திற்கு பிறகும் இறைவனின் மேல் உள்ள பக்தியும் பற்றும் போகாமல் இருவரும் இருந்தார்கள். ஒருநாள் வழக்கம் போல் சிவபெருமானை தரிசிக்க கோயிலுக்கு சென்றார் சுந்தரர். ஈசனை போற்றி வணங்கினார். அப்போது அவர் முன் தாயுமானவர் தோன்றி, “சுந்தர… நீ என் சிவதொண்டர்களின் வரிசையில் சேர்ந்துள்ளாய். நீயும் பிறப்பு இறப்பு என்பதை கடந்து வாழ்வாய். என் அடியார்களை பற்றி செந்தமிழில் ஒரு பாமாலையை இயற்றி பாடு.“ என்றார் இறைவன். “அய்யனே..அடியார்களின் வரலாறுகள் யாம் அறியாதது. அவ்வாரு இருக்க, யாம் எப்படி பாடல் இயற்றுவது.?“ என வினவினார் சுந்தரர். “தில்லை வாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்” என்பதையே உன் பாடலின் முதல்அடியென கொண்டு இயற்று.“ என்ற பாமாலையின் முதல் வரியை சொல்லி தந்து மறைந்தார் சிவன். பெரும் மகிழ்ச்சியுடன் இறைவன் அருளிச் செய்த முதல் வரியை இயற்றி திருப்பதிகத்தை பாடினார் சுந்தரர். குண்டையூர் என்ற ஊரில் வேளாள மரபை சேர்ந்தவர் குண்டையூர்க் கிழார். இவர் சுந்தர நாயனார் மீது அதிகமான அன்பு கொண்டவர். அதனால் சுந்தரர் குடும்பத்திற்கு மாத மாதம் மளிகை பொருட்களை அனுப்பி கொண்டு இருந்தார். சில மாதங்களாக ஊருக்கு போதிய மழை வராததால் அந்த ஊரில் நெல் விளைச்சல் அடியோடு பாதிப்படைந்தது. இதனால் வியபாரத்தில் நஷ்டமும் பண கஷ்டமும் ஏற்பட்டது. தனக்கு ஏற்பட்ட கஷ்டத்தை விட நம்மை நம்பி கொண்டு இருக்கும் சுந்தரரின் குடும்பத்திற்கு எவ்வாறு விளைச்சல் இன்றி நெல் அனுப்புவது?“ என்ற கவலையில் இருந்தார் குண்டையூர்க் கிழார். உயர்ந்த உள்ளம் படைத்தவர்கள் எப்போதும் அவர்கள்படும் இன்னல்களை விட அடுத்தவர்கள் படும் சிரமத்திற்குதான் கவலையும் வேதனையும் அடைவர். குண்டயூர் கிழாரும் அவ்வாரே எண்ணி நொந்தார். சிவ பெருமான் குண்டயூர் கிழாரின் கனவில் தோன்றி, “கவலைப்படாதே நான் இப்போதே குபேரனை அனுப்புகிறேன்.

குபேரர் உனக்கு போதிய நெல்மணிகளை கொடுப்பார்.“ என்று கூறினார். திடுக்கிட்டு எழுந்தார் கிழார். எழுந்து பார்த்தவுடன் அதிர்ச்சியடைந்தார். வானம் தொடும் அளவு நெல்லை குவித்து வைத்திருக்கிறார் குபேரர். மறுநாள், சுந்தரரை சென்று கண்டு இந்த செய்தியை கூற வேண்டும் என்ற ஆவலில் திருவாரூருக்கு சென்றார். “உன்னை காண எம் அடியேன் குண்டையூர் கிழார் வந்து கொண்டு இருக்கிறார். நீ அவரை வரவேற்று அழைத்து வா.“ என்று இறைவன் சுந்தரரின் கனவில் தோன்றி சொன்னார். கிழாரும் சுந்தரரும் எதிர்எதிரே சந்தித்து கொண்டார்கள். இருவரும் குண்டையூர் சென்றார்கள். குண்டையூரை அடைந்ததும் சுந்தரர் அதிர்ச்சியடைந்தார். அந்த அளவுக்கு நெல்மணி வானத்தை தொடும் அளவில் குவிந்து கிடந்தது. “நண்பரே… தங்களுக்காக ஈசன் கொடுத்தது இவை. நீங்கள்தான் இந்த அனைத்து நெல்லையும் எடுத்து செல்ல வேண்டும். இது உமக்கே உரியவை.“ குண்டையூர் கிழார். “இந்த நெல்மணிகளை மூட்டை கட்டுவதற்கே பல மாதங்கள் ஆகும் போல இருக்கிறதே.? இதை எவ்வாறு எடுத்து கொண்டு செல்வது.? இறைவன் ஒருவனுக்கு கஷ்டத்தை தர வேண்டும் என்றால் தாங்க இயலாதபடி தருகிறார். அதுவே நல்லவற்றை கொடுக்க ஆரம்பித்தால் நம் நிம்மதி இழுந்து விடும் அளவு அள்ளி அள்ளி தருகிறார்.“ என்றார் சுந்தரர். பிறகு தாயுமானவரை வணங்கினார் சுந்தரர். ஆகாயத்தில் சிவபெருமான் தோன்றி, “கவலை வேண்டாம். எமது பூதகணங்கள் நெல்மணிகளை உன் ஊரில் சேர்த்து விடுவார்கள்.“ என்றார். சிவன் அருளியது போல் சுந்தரர் தம் ஊருக்க வருவதற்கு முன்பே, நெல்மணிகள் சுந்தரரின் இல்லத்தையே முடிய அளவுக்கு நெல்குவிந்து இருந்தது. இதை கண்ட பரவையாரும் ஊர்மக்களும் அதிர்ச்சியடைந்தார்கள். “இந்த நெல்குவியலை நீங்களும் உங்கள் வீட்டுக்கு தேவையான அளவு அள்ளி செல்லுங்கள்.“ என்றார் ஊர் மக்களிடம் சுந்தரர். மக்களும் மகிழ்ச்சியுடன் தங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு நெல்லை அவரவர் வீட்டுக்கு அள்ளி சென்றார்கள். அப்படி இருந்தும் அப்படியேதான் இருந்தது. சுந்தரர் இறைவனின் திருவிளையாட்டை எண்ணி மகிழ்ந்தார்.

கோட்புலியார் என்பவர் சுந்தரரை தன் ஊரான திருநாட்டியத்தான்குடிக்கு வர வேண்டும் என்று அன்பு கட்டளை இட்டார். சுந்தரரும் அவர் அன்புகட்டளைக்கு இணங்கி திருநாட்டியத்தான்குடிக்கு சென்றார். சுந்தரர் தன் ஊருக்கு வருவதை கேட்டு மகிழ்ச்சியடைந்து, தன்னுடைய சேனாதிபதி பதவியை பயன்படுத்தி ஊரையே திருவிழா போல் செய்தார் கோட்புலியார். அரூரருக்கு அரசருக்கு இணையான கௌரவத்தை கொடுத்தார். தன் இல்லத்திற்கு அழைத்து சென்றார். தன் மகள்களை சுந்தரருக்கு அறிமுகம் செய்து வைத்தார். “இரு பெண்களையும் என் புத்திரிகளாக பார்க்கிறேன்.“ என்று கூறி அந்த இரு மங்கைகளுக்கும் ஆசி வழங்கினார் சுந்தரர். பிறகு திருநாட்டியத்தான்குடியைவிட்டு பறப்பட்டு, திருவலிவலம் சென்று சிவனை தரிசித்து, ஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரின் புகழை பாடல்களாக பாடி மீண்டும் தன் ஊரான திருவாரூக்கு திரும்பினார். திருவாரூரில் திருப்பங்குனி உத்திரத் திருவிழா வந்தது. அந்த விழாவிற்கு சிவதொண்டர்களுக்கு திருத்தொண்டு செய்ய பொருள் தேவைப்பட்டது. இதனால் தன் கணவரான சுந்தரரிடம் வேண்டினாள் பரவையார். திருப்புகழுருக்கு சென்று சிவபெருமானை வணங்கி திருப்பதிகம் பாடி, தன் வேண்டுதலை கூறினார் சுந்தரர். இரவு ஜாமம். இனி ஊருக்கு செல்ல முடியாது என்ற எண்ணத்தில் அந்த கோயில் அருகே இருந்த செங்கல்லையே தலையனையாக அடுக்கி வைத்து உறங்கினார். விடிந்தது. இருள் மறைந்து வெளிச்சத்தை கொடுத்தது. தூக்கம் கலைந்து எழுந்து பார்த்த சுந்தரர் வியந்து நின்றார். காரணம் –


“நண்பனோடு விளையாடிய சிவன்“ – அறுபத்து மூவர் வரலாறு – பகுதி 3

நீதி சபை முன் நடக்க போவதை எதிர்பார்த்து மௌனமாக நின்றிருந்தார் நம்பியாரூரர். “நம்பியாரூரரே எங்களை மன்னிக்கவும். இந்த ஒலையில் இருக்கும் கையெழுத்தும் உங்கள் பாட்டன் கையெழுத்தும் ஒன்றாகவே இருக்கிறது. சொல்வதற்கு வருத்தமாக இருந்தாலும் நியாயப்படி இந்த பெரியவர் பேச்சை நீங்கள் கேட்டு நடக்க வேண்டும். அதுதான் தர்மம்.“ என்றார்கள் சபையோர்கள். “சரி… நான் இந்த கிழவனுடன் செல்கிறேன். ஆனால் இந்த திருவெண்ணெய் நல்லூரில் என் முன்னோர் வாழ்ந்ததாக சொல்லும் இடங்களை காட்டட்டும். பிறகு பார்க்கலாம்.“ என்றார். நம்பியாரூரர். “அதற்கென்ன தாராளமாக…. என் வீட்டையும் உன் பரம்பரையினர் வீட்டையும் காட்டுகிறேன் வா என் பின்னே.“ என்று கூறி திருவருட்டுறை என்ற திருவெண்ணெய் நல்லூர் கோவிலுக்கு சென்றார்கள். அந்த திருக்கோயிலை சுற்றி நம்பியாரூரரும் மற்றவர்களும் கூடினார்கள். கருவறைக்குள் அந்த கிழவன் சென்றதும் அங்கேயே மறைந்தார். நம்பியாரூரரும் மற்றவர்களும் அதிர்ச்சியடைந்தார்கள். கிழவன் வேடத்தில் வந்தது இறைவன் சிவபெருமானே என்று நம்பியாரூரர் உணர்ந்து திகைத்தார். அடுத்த நிமிடம் கண்களை கூசும் ஒளி மின்னியது. அந்த ஒளியில் ரிஷப வாகனத்தில் சிவ – சக்தி சொரூபமாக காட்சி தந்தார் இறைவன்.

“நம்பியாரூரரே… நீ நமது கைலாய மலையில் எனக்கு நண்பனாக இருந்தாய். அப்போது மங்கையரை பார்த்தவுடன் உன் மனம் சஞ்சலப்பட்டது. அதன் பயனாக நீ மனித பிறவி எடுத்து வாழ்ந்து கொண்டு இருக்கிறாய். இந்த மனித பிறவிலும் யாம் பெண்ணாசை கொண்டால் எம்மை வந்து தடுத்தாட்கொள்ள வேண்டும் என்பதே நீ பெற்ற வரம். அதன் படியே எல்லாம் நடக்கிறது.“ என்றார் இறைவன். சூரியனை பார்த்த மகிழ்ச்சியில் தாமரை மலர்வது போல் சோமேஸ்வரரின் குரலை கேட்டு மகிழ்ந்தார் சுந்தரர். “இறைவா… எம்மை தடுத்தாட்கொண்ட சிவபெருமானே… மறுபடியும் இப்பிறவியில் பெண் ஆசையில் விழ நினைத்த எம்மை தடுத்தென்னை காத்த தங்களை பித்தன் என்றேனே.. நானே பித்தன். அடியேனை காத்த பரம் பொருளே… நான் என்றும் உன்னை மறவாமல் இருக்க அருள் புரிய வேண்டும். என்னை உம்முடன் அழைத்து செல்ல வேண்டும். இதுவே எம் விருப்பம்.“ என்றார் நம்பியாரூரர். “உன்னை அழைத்து செல்ல நான் வரவில்லை. உன் புகழ் பல்லாயிர தலைமுறைக்கும் தெரிய வேண்டும் தமிழ் புலமையில் நீ சிறந்தவன். உனக்கு இங்கே கடமைகள் இருக்கிறது. எமது அடியார்களின் சிறப்புகளை உன் மூலமாக தெரியப்படுத்த போகிறேன். தாய் தமிழில் உன் எம்மை பற்றி பாடல் இயற்று.“ “எம் அய்யனே… நான் காண்பது கனவா நினைவா? நடப்பதெல்லாம் உண்மைதானா.? நான் எவ்வாறு பாட தொடங்குவேன்.? சிவபெருமானே நீ எம்மை வழி நடத்து“ “சுந்தரா… எம்மை பித்தன் என்று அழைத்தாயே… அச்சொல் எம்மை கவர்ந்தது. அதனையே முதல் வரியாக அமைத்து பாடு“

“பித்தா பிறைசூடிப் பெருமானே அருளாளா… எத்தால் மறவாதே நினைக்கின்றேன் மனதுன்னை… வைத்தாய் பெண்ணை தென்பால் வெண்ணேய் நல்லூர் அருட்டுதுறையுள் அத்தா உன்னை ஆளாய் இனி அல்லேன் எனலாமே…. என்று பாட தொடங்கினார் சுந்தரர்.

சுந்தரருடன் திருமணம கனவில் இருந்து, அது கனவாகவே போனாலும் ஆரூராரை கணவனாகவே நினைத்து வேறு யாரையும் திருமணம் செய்யாமல் வாழ்ந்து மறைந்தார் சடங்கவிராயர் மகள். இனிப்பு எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் எறும்பு போவது போல், சிவன் எங்கெல்லாம் இருக்கிறாரோ அதுவெல்லாம் என் இடமே என்று கூறி கொண்டே திருவெண்ணெய்நல்லூரை விடடு திருநாவலூரை அடைந்தார் நம்பியாரூரர். இப்படியே ஒவ்வொரு ஊராக சென்று சிவனை நினைத்து பல பாடல்களை பாடி கொண்டே சென்றார். ஒரு நாள் சுந்தரர் சிதம்பரத்திற்கு செல்ல வேண்டும் என்று நினைத்து தன் பாதயாத்திரையை தொடர்ந்தார் வீரட்டானம் என்ற திருத்தலத்தின் பக்கம் வந்தார். கிழக்கில் இருந்த சூரியன் மேற்கை நெருங்கி கொண்டு இருந்தது. இருட்டியதால் இனி செல்வதை விட இங்கேயே தங்கிவிட்டு விடிந்ததும் செல்லலாம் என்று நினைத்து அங்கே உள்ள மடத்தில் தங்கினார் சுந்தரர்.

சுந்தரர், படுத்து உறங்கி கொண்டு இருக்கும்போது அவர் தலைமுடியை ஒரு கிழவர் தன் பாதத்தால் தடவி கொடுத்து கொண்டு இருந்தார். யாரோ ஒருவர் தலையை தடவி கொடுக்கிறாரே என்று நினைத்து எழுந்து பார்த்தார். பார்த்தவுடன் கடும் கோபம் கொண்டார். “வயதில் பெரியவராக இருக்கிறீர்கள். இபபடி உங்கள் கால் பாதத்தால் என் தலைமுடியை தேய்க்கலாமா.“ என்றார் சுந்தரர். “என் கால் பாதத்தின் கீழே நீ படுத்திருந்தால் என் கால்படத்தான் செய்யும்.“ என்று நக்கலாக பதில் கூறினார் கிழவர். சுந்தரர், அதற்கு மேல் பேசாமல் வேறு பக்கமாக உறங்க சென்றார். சில நிமிடம் கழித்து மறுபடியும் அந்த கிழவர் ஆரூராரின் தலைமுடியை கால்களால் தடவி கொடுத்து கொண்டு இருந்தார். கடும் கோபம் கொண்ட சுந்தரர், “ஏய் கிழவா… நீ வேண்டும் என்றே என்னை சீண்டி பார்க்கிறாயா? யார் நீ…?“ என்று ஆவேசமாகவும் அதிகாரமாகவும் பேசினார் சுந்தரர். “என்னுடைய கால் பாதம் பட்டதற்கே இப்படி கோபமாக பேசுகிறாயே… என் தலைமேல் உட்கார்ந்து இருக்கிறாலே கங்கை தேவி. அவளை எப்படி வசைப்பாடுவது, கோபப்படுவது?“ என்றார் கிழவர். கிழவர் பேசி முடித்ததும் அடுத்த நிமிடமே அந்த இடத்தை விட்டு மறைந்தார். “ஈசனின் பாதத்தை பார்க்க விஷ்ணு பகவான் பாதால லோகத்திற்கு கூட சென்றும் பார்க்க முடியாமல் போனது. ஆனால் நான் என்ன பாக்கியம் செய்தேனோ…? சர்வேஸ்வரரின் பாதம் என் சிரஸின் மேல் இருந்தது.“ என கூறி மகிழ்ச்சியடைந்தார் சுந்தரர். “தம்மானை அறியாத சாதியார் உளரே“ என்று துவங்கும் ஒரு திருப்பதிகத்தை பாடினார். உயிர் இருந்தால்தான் உடல் ஆசையும். ஆனால் அந்த உயிரையே அசைய வைத்தது இறைவனின் கால்பட்டதால்… என்று நினைத்து கொண்டே தூங்காமல் விழித்து கொண்டு இருந்தார். காலை பொழுது விடிந்தது. திருவதிகைத் தலத்தை தென்திசை கங்கை என அழைப்பர். அந்த தீர்த்தத்தில் நீராடினார் நம்பியாரூரர். பிறகு திருமாணிக்குழி என்ற சிவத்தலத்திற்கு சென்றார்.

திருமாணிக்குழி ஊரின் சிறப்பு என்னவென்றால், மாவலிச் சக்கரவர்த்தியிடம் விஷ்ணுபகவான் வாமன அவதாரமெடுத்து மூன்று அடி மண் தானம் கேட்டார். இந்த சம்பவத்திற்கு பிறகு விஷ்ணுவே இந்த திருமாணிக்குழி ஆலயத்திற்கு சென்று ஈசனை வணங்கினார். இப்படி சிறப்பு வாய்ந்த ஊருக்கு சென்று சுந்தரர் சுந்தேஸ்வரரை பற்றி பாடல் மூலமாக வர்ணித்தார். இப்படியே பாத யாத்திரையாக ஒவ்வோரு ஊராக சென்றார். சென்ற ஊரில் எல்லாம் இருக்கும் சிவதலங்களில் பதிகங்களை பாடினார். ஒருநாள் திருவாரூரில் வாழும் அந்நாட்டின் அரசரின் கனவில் சிவன் தோன்றி. “எம்மை பார்க்க சுந்தரர் வருகிறார். அவரை தக்க மரியாதையுடன் அழைத்து வாருங்கள்.“ என்று கட்டளையிட்டார். தான் கண்ட கனவை மற்றவர்களிடம் கூறி, உடனே எல்லா கலை நிகழ்ச்சியும், மேளதாளத்துடனும் சுந்தரரை வரவேற்றார் அரசர். நம்பியாரூரர் தனக்கு கிடைத்த மரியாதையை நினைத்து மகிழ்ந்தார். என்னை கௌரவிக்க சொன்ன ஈசனுக்கு நன்றி என்பதை பாடல் மூலமாக பாடினார். நம்பியாரூரரின் பாடலை கேட்டு மகிழ்ந்து திருநீலகண்டன் நேரில் காட்சி கொடுத்தார். “உன்னை திருமண கோலத்தில் அழைத்து வந்ததால், நீ என்றும் மாப்பிள்ளை அலங்காரத்திலேயே இருக்க வேண்டும்.“ என்று அன்பு கட்டளையிட்டார். அத்துடன், “நீ எம் தோழனாக இருப்பதால் அரசருக்கு இணையான அழகுடன் காட்சி தருவாய்.“ என்று ஆசி வழங்கி மறைந்தார். சந்தனமும், ஜவ்வாதும் மனக்க விபூதி, ருத்திராச்சத்தையும் அணிந்து பட்டாடை உடுத்தி, அரசரை விட அதிக அழகுடன் ஜொலித்தார் சுந்தரர். முன்பு திருகைலாய மலையில் பார்வதியின் தோழி கமலி என்ற பெண்ணின் மேல் ஆசைபட்டதால் மண்ணுலகில் பிறந்தார் சுந்தரர். அதுபோல் கமலியும் பூலோகத்தில் பிறந்தார்.

Read More at: bhakthiplanet.com/2011/03/%e2%80%9c%e0%ae%a8%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a9%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b3%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%a9/ © BHAKTHIPLANET.COM

“பாட்டன் கையெழுத்து – மாறிய தலையெழுத்து.“,- அறுபத்து மூவர் வரலாறு – பகுதி 2

அறுபத்து மூவர் வரலாறு – பகுதி 2 நிரஞ்சனா

முந்தைய பகுதிக்கு கிளிக் செய்யவும் உலகெலாம் இருப்பவர்களுக்கு தந்தையாக காட்சி கொடு்ப்பது ஈசன். அவரின் இடம் இமயமலை. அந்த மலையோ விபூதி பூசியது போல் வெண்மையாக இருக்கும். பிரம்மன் அன்ன வாகனத்தில் வந்து இறைவனை தரிசித்துவிட்டு வெளியே வந்து பார்த்தால், அந்த வெண்மையான கையிலாய மலையில் தன் வாகனமான அன்னபறவை எங்கு இருக்கிறது என்று தேடி அழைத்து செல்வதே வாடிக்கையாக கொண்டு இருந்தார் பிரம்மன். ஈசனின் மனம் போல் வெண்மையாக இருக்கும் இமயமலை. சிவபெருமானின் பரம பக்தனாகவும் பணியாலராகவும் இருந்தவர் ஆலாலசுந்தரம். தாயும்மானவருக்கு திறுநீறு பூசி பூக்களால் அலங்கரிப்பார் ஆலால சுந்தரம். ஒருநாள் சிவனுக்காக பூக்களை பறித்து கொண்டு இருக்கையில், அங்கே பார்வதிதேவியின் இரு தோழிகளும், தேவிக்காக பூக்களை பறித்து கொண்டு இருந்தார்கள். அந்த இரண்டு பெண்களையும் ஆலால்சுந்தரர் பார்த்து, “அடடா… என்ன ஆழகு…!, என்ன நளினம்…!“ என்று வர்ணித்தார். இதை கேட்ட அக்கன்னி பெண்கள் வெட்கப்பட்டு அந்த இடத்தை விட்டு ஒடிவிட்டார்கள். சுந்தரரும் சில பூக்களை மட்டும் பறித்து கொண்டு சிவபெருமானுக்கு மலர்களால் அர்ச்சனை செய்ய சென்றார். சுந்தரர் தன் அருகில் வந்தவுடன். அவரின் மனதில் ஒடி கொண்டு இருக்கும் எண்ணத்தை புரிந்த கொண்ட சிவபெருமான், “ சுந்தரா… நீ இப்போது சராசரி மனிதர்களின் உணர்வை பெற்று விட்டாய். இனி நீ இங்கு இருக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை. நீ உன் மனத்திற்கு பிடித்தது போல் பூலோகத்தில் வாழ்ந்து பின் எம்மிடம் வருவாயாக..!“ என்றார் அகிலாண்டேஸ்வரர். “அய்யனே…என்னை மன்னிக்க வேண்டும். நான் பெரிய பாபம் செய்து விட்டேன். அதனால் தங்கள் கோபத்திற்கு ஆளாகி நின்று இச்சாபத்தை பெற்றேன். பெற்ற சாபத்தை திரும்ப பெற முடியாது என்பதை நான் அறிவேன். பெண்களின் மேல் கொண்ட துஷ்ட மோகத்தால்தான், தங்களை விட்டு பிரிய நேர்ந்ததே….“ என்று கவலை கொண்டார் சுந்தரர். “சுந்தரா… கவலை வேண்டாம் தக்க சமயத்தில் உன்னை ஆட்கொள்வோம். சென்று வா…” என்று அருளாசி தந்தார் சிவபெருமான்.

திருநாவலூரில் சைவ அந்தணர் குலத்தில் சடையனார் என்பவருக்கு இசைஞானியார் என்ற நற்குணம் படைத்த மனைவி அமைந்திருந்தாள். இவர்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு “நம்பியாரூரன்“ என்று திரு பெயர் சூட்டினர். நம்பியாரூரனின் முகம் தெய்வீக கலையாக இருந்ததால் பெற்றோர்கள் உள்பட சுற்றத்தாரும் பாராட்டி சீராட்டி வளர்த்தார்கள். ஒருநாள், குழந்தையை நன்கு அலங்கரித்து இசைஞானியார் தன் குழந்தையின் கையில் தேர் கொடுத்து விளையாட அனுப்பி வைத்தாள். விளையாட சென்ற தம் திருமகன் அடு்த்த நிமிடமே தத்து பிள்ளையாக வேறோரு இடம் போவான் என்று கனவிலும் நினைத்து இருக்க மாட்டாள் இசைஞானியார்.. விதி விளையாட்டின் ரூபத்திலேயே வந்தது. நம்பியாரூரர் தெருவில் விளையாடி கொண்டிருக்கையில் அந்த வழியாக வந்து கொண்டு இருந்த அரசர் நரசிங்க முனையரையர், சற்று நின்று குழந்தையின் மழலை சிரிப்பில் மயங்கி நம்பியாரூரன் பெற்றோர்களிடம், “நீங்கள் பெற்றது பிள்ளையல்ல… அப்பழுக்கற்ற வைரம். அந்த ஜொலிப்பான முகம் எந்த நாடடின் பிள்ளைக்கும் இருக்காது. இவன் இந்திரனோ… இல்லை தேவலோக மன்மதனோ… இப்பிள்ளை தெருவில் விளையாடும் பிள்ளையல்ல… அரண்மனையில் விளையாட வேண்டிய பிள்ளை. இந்த நாட்டின் சிம்மாசனத்தை அலங்கரிக்க வேண்டிய பிள்ளை. உங்கள் குழந்தையை எனக்கு தத்து கொடுக்க வேண்டும்.“ என்று கேட்டார் அரசர். தாம் பெற்ற குழந்தை வரும் காலத்தில் நாடாள்வான் என்ற மகிழ்ச்சியில் மனநிறைவுடன் அரசருக்கு தத்து கொடுக்க சம்மதித்தார்கள் நம்பியாரூரன் பெற்றோர்கள். நம்பியாரூரை தன் பிள்ளை போல் பாசத்துடன் வளர்த்து வந்தார்கள் அரசரும் – அரசியும். தத்து எடுத்தாலும் நம்பியாரூராரை அந்தண குலமுறைப்படியே வளர்தது வந்தார்கள். நம்பியாரூரனுக்கு திருமண வயது வந்ததால் தங்கள் அந்தஸ்துக்கும் வசதிக்கும் இணையான மருமகளை தேடினார்கள். சடங்கலிச்சிவாசாரியார் என்ற மறையவருக்கு அழகான மகள் இருக்கிறாள் என்று கேள்விப்பட்டு, அந்த பெண்ணையே தன் மகனுக்கு திருமணம் செய்ய சம்மதித்தார் அரசர்.


திருமணத்திற்கான ஏற்பாடுகள் விமர்சையாக நடந்தது. இன்னும் சில மணி நேரத்தில் திருமணம். நம்பியாரூரரும் மற்றவர்களும் மகிழ்ச்சியில் இருந்தார்கள். மண மேடையில் மணமகன் நம்பியாரூரார் நெருக்கத்தில் மணமகள். முகூர்த்த நேரம் நெருங்கியது. அந்தணர்களின் திருமண மந்திரம் கம்பீரமாக ஒலித்தது. திருமாங்கல்யத்தை கையில் எடுத்தார் நம்பியாரூரர். கெட்டிமேள சப்தம் விண்ணை தொட்டது. மணபெண்ணின் கழுத்தில் திருமாங்கள்யம் நெருங்கும் நேரத்தில் கெட்டி மேள சப்தத்தையும் மீறி, “நிறுத்துங்கள்…“ என்று அந்த சமயத்தில் கேட்கக் கூடாத வார்த்தை ஒலித்தது. குரல் வந்த திசை நோக்கி அனைவரின் விழிகளும் திரும்பியது. அங்கே ஒரு வயதான பெரியவர். அவர் கையில் ஒரு ஓலை சுவடி. “நிறுத்துங்கள் திருமணத்தை. எனக்கு நியாயத்தை சொல்லி பிறகு நடத்துங்கள் உங்கள் நாடகத்தை.“ என்றார் பெரியவர். “நாடகமா…? கிழவரே… என்ன உளறுகிறீர். நடப்பது இந்நாட்டின் அரசர் இல்ல திருமணம்.“ என்றார் ஒருவர். “ஓ…. அரசர் இல்ல திருமணம் என்றால் அநியாயம் செய்யலாமோ?“ என்றார் பெரியவர். அதை கேட்டு அரசர், மேடை இறங்கி பெரியவரின் முன்பாக வந்து நின்றார். “பெரியவரே… என்ன அநியாயம் கண்டீர்கள்..?“ என்றார் அரசர். “என் அடிமையை நீங்கள் சொந்தம் கொண்டாடுகிறீர்களே…. அதுதான் அநியாயம்.“ அரசர், “உங்கள் அடிமையா…. யாரது…?“ “அதோ அவன்தான்!“ – பெரியவர், மணமேடையில் அமர்ந்திருந்த மணமகன் நம்பியாரூரரை கைக் காட்டினார். அதிர்ந்தே போனார்கள் அனைவரும். நம்பியாரூரர் திடுகிட்டு எழுந்து பெரியவரின் அருகில் கோபமாக வந்தார். “பித்தனே… எங்கே வந்து என்ன பிதற்றுகிறாய்..?. யார் யாருக்கு அடிமை..?“ “நீ…. நீதானடா எனக்கடிமை!“ “அரசர் வீட்டு பிள்ளை உமக்கு அடிமையா..?“ என்றார் ஒருவர். “அரசர் வீட்டு பிள்ளையா….? இவன் அரசருக்கு தத்து பிள்ளை. அதற்கு முன்னரே இவன் அடிமை பிள்ளை.“ “சரி… எதுவாக இருந்தாலும் திருமணம் நடக்கட்டும். பிறகு பேசலாம்“ என்றார் அரசர். “ எனக்கு தேவை என் அடிமை மட்டும்தான். இவனை மட்டுமே நான் அழைத்துச் செல்வேன்.“ “மறுபடி மறுபடியும் என்னை அடிமை அடிமை என்கிறீரே… அதற்கு என்ன ஆதாரம்” என்றார் நம்பியாரூரர். “ஆதாரம் இல்லாமல் வழக்கு தொடர்வேனா..? இதோ எமது ஆதாரம்.“ என்று பெரியவர் தன் கையில் இருந்த ஓலை ஒன்றை நீட்டினார். “என்ன ஓலை இது“ – நம்பியாரூரர்.

“நீ எமக்கு அடிமையெனும் ஆதாரம்” – பெரியவர். “எவன் எழுதி தந்தது..?“ “எழுதி தந்தவன் உன் பாட்டன். அதனால் மரியாதையாக பேசு“ “என் பாட்டனா..? பித்தனே மரியாதையாக போய்விடு.“ “போகலாம். வா என்னுடன்“ “சரி… ஓலையை காட்டு“ “தாராளமாக. இந்தா பிடி. நன்றாக படி“ நம்பியாரூரர், அந்த ஓலையை வாங்கி படித்த உடனே கிழித்து போட்டார். “இது மோசடி ஓலை.“ என்றார் நம்பியாரூரர். “நீ இப்படிதான் செய்வாய் என எமக்கு தெரியும். நீ கிழித்தது நகல். அசல் ஓலை பத்திரமாக இருக்கிறது.“ “இதில் இருப்பது என் பாட்டனாரின் கையெழுத்து அல்ல“ என்றார் ஆரூரர். பலமாக சிரித்தார் பெரியவர். “உன் பாட்டனையே நீ பார்த்திருக்க மாட்டாய். அவர் கையெழுத்தா உனக்கு தெரிய போகிறது?” என்றார் பெரியவர். “பெரியவரே… இந்த கையேழுத்து ஆரூரரின் பாட்டன் கையெழுத்து என்பதற்கு என்ன ஆதாரம்.“ கேட்டார் அரசர். “அதை நான் வழக்கு மன்றத்தில் நிரூபிப்பேன்.“ “இப்போதே வழக்கு மன்றத்தை கூட்டுங்கள். இந்த பித்தனின் ஆதாரத்தையும் பார்ப்போம்“ என்றார் ஆரூரர். “உன் மீது வழக்கை உன் ஊரிலேயே நடத்தினால் தீர்ப்பு உனக்கு சாதகமாகதான் வரும். என் ஊரில்தான் வழக்கு நடக்க வேண்டும்.” “ உன் ஊர் எது..?“ “ திருவெண்ணெய் நல்லூர்..!. புனிதமான வேதங்களை ஓதும் வேதியர்கள் வசிக்கும் ஊர். அறநெறியாளர்கள் முன்னிலையில் நியாயம் கேட்டு வழக்காடி, நீ என் அடிமை என்று நிரூபிப்பேன்.“ என்றபடி பெரியவர் திரும்பி செல்ல, காந்தம் இரும்பை இழுத்துச் செல்வதை போன்று பெரியவரின் பின்னே சென்ற ஆரூரரும் மற்றோரும் திருவெண்ணெய் நல்லூர் அடைந்தனர் “சபையோரே… நான் இந்த ஆரூராரை பற்றி முறையிட வந்துள்ளேன். இவன் என் அடிமை. நான் காட்டிய அடிமை ஒலையை கிழித்து விட்டான். ஆனாலும் அவன் கிழித்தது நகல்தான். என்னிடம் அசல் மூல ஒலை இருக்கிறது. ஆகவே என் வழக்கை விசாரித்து நியாயம் வழங்கி இந்த அடிமையை என்னிடம் அனுப்பி வையுங்கள்.“ என்றார் பெரியவர்.

“மனிதனுக்கு மனிதன் அடிமையா…? என்ன அநியாயம். இதை ஒப்புக் கொள்ள முடியாது. அதுவும் ஆரூரர் பாட்டன் கையெழுத்திட்டது என்பதை எப்படி ஏற்பது.?“ என்றனர் நியாய சபையினர். “ஆனாலும் நீங்கள் வைத்திருக்கும் ஒலை உண்மையான ஓலைதானா என்பதை ஆராய்ந்த பின்னரே தீர்ப்பு தர இயலும். அசல் மூல ஓலையை காட்டுங்கள்.“ என்றனர் நீதி சபையினர். அதற்கு பெரியவர், “சபையோரையும் கூடி இருக்கும் மக்களையும் நம்பிதான் மூல ஒலையை தருகிறேன். இதை ஆரூரன் கிழித்து போட்டுவிட்டால் நீங்கள்தான் பொறுப்பு.“ என்று சொல்லி, பெரியவர் தன் கையில் இருந்த ஒலையை சபையோரிடம் தந்தார். ஆரூரர் பாட்டனாரின் உண்மையான கையெழுத்தை ஆராய ஒரு விசாரனை அதிகாரியை நம்பியாரூரரின் சொந்த ஊருக்கு அனுப்பியது நீதி சபை. நம்பியாரூரரின் பாட்டன் கையெழுத்து அடங்கிய ஆதாரங்கள், திருவெண்ணெய் நல்லூர் நீதிமன்ற சபைக்கு கொண்டு வரப்பட்டு, பெரியவரின் ஓலையில் உள்ள கையெழுத்து உண்மையானதா? என்று ஆராய்ந்தார்கள். எல்லாம் சரியாகவே இருந்தது. நம்பியாரூரர் அதிர்ச்சி அடைந்தார். பெரியவர் மகிழ்ந்தார். அதை தொடர்ந்து அதிசயங்கள் நடந்தது.


“சிவனை வணங்கவே சிவன் அருள் வேண்டும்“ – அறுபத்து மூவர் வரலாறு

“சிவனை வணங்கவே சிவன் அருள் வேண்டும்” அறுபத்து மூவர் வரலாறு முதல் பகுதி நிரஞ்சனா சிவபெருமானின் பக்தர்களை சிவதொண்டர்கள் என்று அழைப்பது சிறப்பு பெயராகும். இதில் அறுபத்தி மூன்று சிவஅடியார்கள் சிறப்பை மட்டும் ஏன் சொல்ல வேண்டும்? என்று பார்க்கும்போது இவர்களை போன்று ஒரு தூய சிவபக்தி மற்றவர்களிடம் இருக்க முடியுமா? என்ற விஷயம் ஆராய்ச்சிகுரியதாகவே இருக்கும். இந்த அறுபத்து மூவரை தவிர மற்ற சிவஅடியார்களின் சிவதொண்டில் குறை இருக்குமா? என்ற கேள்வி நமக்குதான் தோன்றுமே தவிர சிவஅடியார்கள் யாவருமே சிவபெருமானே என்பதுதான் உண்மையான தத்துவம். நாம் சிவன் கோவிலுக்கு செல்கிறோம், அங்கு அறுபத்தி மூன்று நாயன்மார்களின் திருஉருவச்சிலையை தரிசித்து இருப்பீர்கள். சிவபெருமான் மீது நாம் காட்டுகிற அதே பக்தியை இந்த அறுபத்து மூன்று நாயன்மார்களின் மீதும் பக்தி செலுத்தி வணங்குவது சிவபெருமானுக்கு பெருமகிழ்ச்சியை தருகிறது. நாயன்மார்களின் வரலாற்றை நான் உங்களுக்கு சொல்வதற்கு முன்னதாக இவர்களின் அறிய வரலாற்றை நமக்கு முதலில் சொன்ன ஒருவரை பற்றி நாம் தெரிந்துக்கொள்ள வேண்டியது அவசியம். இந்த அற்புத வரலாறு தோன்றுவதற்கு முக்கிய காரணம் ஒரு மன்னர். அப்படி என்றால் அந்த மன்னர் அடிப்படையில் ஒரு சிவபக்தர்தான். ஆனாலும் ஆடல் – பாடல் – கேளிக்கை என்று பொழுதுபோக்கிவந்தவர் அந்த மன்னர். அரசரின் இந்த செயல்பாடு அவருக்கும் நல்லதல்ல நாட்டுக்கும் நல்லதல்ல என்று எண்ணிய அவருடைய அமைச்சர், ஆன்மிகத்தின் உயர்ந்த தன்மையை – அதன் அவசியத்தை மன்னருக்கு உணர்த்த இறைவன் சிவபெருமானால்தான் இயலும் என்று நம்பினார். அமைச்சரும் மிக சிறந்த சிவபக்தர். மன்னரையும் ஓர் உண்மையான சிவபக்தராக்க ஒரு பெரிய முயற்சியை எடுத்துக்கொண்டார்.

சிவபெருமான் சிறப்புகளை காட்டிலும் அவர்தம் அடியார்கள் எத்தகைய சிறப்பு வாய்ந்தவர்கள் என்பதை தன் அரசரின் மூலமாக இந்த உலகத்திற்கு உணர்த்த விரும்பினார். உண்மையில் அவர் விரும்பினார் என்பதை விட சிவபெருமானே தன் அடியார்கள் உயர்ந்த குணங்களை உலகத்திற்கு இந்த அமைச்சரின் வழியாக சொன்னார் என்பதே சரியாகும். காரணம் – “அவன் அருளாலே அவன்தாள் வணங்கி…“ என்பதுதானே மாணிக்கவாசகர் சொன்ன சிவதத்துவம். எந்த தெய்வத்தை வணங்குவதற்கும் யார் அனுமதியும் தேவையில்லை…ஆனால் இறைவன் எம்பெருமான் சிவனை வணங்குவதற்கும் நாம் ஒரு சிவபக்தராக இருப்பதற்கும் சிவபெருமானின் அருள் நிச்சயம் வேண்டும். அதாவது – “சிவனை வணங்கவே சிவன் அருள் வேண்டும்.” சேக்கிழார். புலியூர்க் கோட்டத்தில் குன்றத்தூர் வேளாளர் குலத்தில் சேக்கிழார் பிறந்தார். “அருள் மொழி இராமதேவர்“ என்பது இயற்பெயர். சேக்கிழார் என்பது குலபெயராகும். அதனால் மக்கள் இவரை சேக்கிழார் என்றே அழைப்பர். நல்ல திறமை இறைநம்பிக்கை புத்திசாலிதனம் இப்படி நிறையவே நல்ல குண அம்சங்களுடன் திகழ்ந்தார். இவரது பரம்பரையினர் அரசவையில் வேலை செய்பவர்களாக இருந்தார்கள். சேக்கிழார் தன் சிவபக்தியிலும் தமிழ் இலக்கிய சிறப்பிலும் சிறந்து விளங்கினார். இவரது புகழை மக்கள் பேசுவதை கேட்டு மன்னர் “அநபாய குலோத்துங்க சோழன்“ சேக்கிழாரை அழைத்து பேசினார்.


சேக்கிழாரின் பேச்சை கேட்க கேட்க குலோத்துங்க அரசர் மகிழ்ச்சியடைந்தார். சேக்கிழாரின் உயர்ந்த உள்ளம், பேச்சி திறன், தமிழ் இலக்கிய புலமை இவையாவும் கண்டு அரசர் வியந்து போனார். கலைவாணியே இவர் நாவில் அமர்ந்திருப்பதை உணர்ந்து கொண்டார் குலோத்துங்க சோழன். சேக்கிழாரை தம் அமைச்சராக நியமித்தார் மன்னர். இறைநம்பிக்கையும் விட்டு கொடுக்கும் குணத்தாலும் அரசருக்கு எதிரிகளே இல்லை. எதிரிகளையும் நண்பனாக்கும் குணம் இருப்பதால் யுத்தம் என்ற பேச்சே இல்லாமல் அமைதியாக இருந்தது நாடு. இதனால் அரசர், இசை கேட்பது,ஆடல், பாடல், கதை கேட்பது என்று பொழுதை தள்ளி வந்தார்.. நாட்டு மக்களும் உண்ண உணவு – உடுத்த உடை அள்ள அள்ள குறையாத பொன் – பொருட்கள் என்று சௌகர்யமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்ந்து வந்தார்கள். இது நிரந்தரமல்ல என்று மக்களும் எண்ணவில்லை. அரசர் எவ்வழியோ மக்களும் அவ்வழிதானே செல்வார்கள். ஆனால் அரசர் வீணாக பொழுதுபோக்குகிறாரே என வருந்தினார் அமைச்சர் சேக்கிழார். ஒருநாள் தன் கவலையை சொல்லியும்விட்டார். “மன்னா…நீங்கள் இப்படி பயன் இல்லாத நிகழ்ச்சியில் ஆர்வம் காட்டுவது சரியில்லை. இதுபோல் தேவையில்லாத கலை நிகழ்ச்சியில் பொழுது போக்குவதால் எந்த பயனும் இல்லை. வரலாறும் உங்களை ஊதாரி என்று குறை சொல்லுமே தவிர, தங்கள் புகழ் சொல்லாது. பொழுதுபோக்கு தேவைதான். அது ஓய்வு நேரத்தில் அனுபவிப்பது. ஆனால் நீங்களோ பொழுதுபோக்கையே ஓர் அரசு பணியாக செய்வது நல்லதல்ல. வரலாறு சிரிக்கும். இதனால் எந்த நன்மையும் இல்லையே.

நீங்கள் காதல் கதைகளை மட்டும் ரசித்து கேட்பதால் என்ன பயன்? இரண்டே பயன்தான். ஒன்று – அந்தபுரம் நிறையும். இன்னொன்று – உங்களுக்கு வாரிசுகள் பெருகும். நகைச்சுவை கதைகளை கேட்பதால் என்ன பயன்? சிரித்து சிரித்து வயிறு வலிக்கும். ரொம்பவும் சிரித்தால் பைத்தியகாரன் என்பார்கள். அவன்தானே அதிகம் சிரிக்கிறான். அடுத்து – பயனற்ற கற்பனை கதைகளை கேட்பதால் என்ன பலன்? மனதில் தீய எண்ணங்கள் எழும். எதையும் தவறாக கற்பனை செய்வோம். இதனாலும் உங்களுக்கு எந்த பயனும் இலலையே.. அரசே… தாங்க்ள ஒரு சிவபக்தர். அடியார்களில் சிறந்தோர் சிவன் அடியார்கள். அவர்களில் அறுபத்தி மூன்று நாயன்மார்கள் மிக சிறந்தோர் என்பது இறைவனே ஏற்றுக்கொண்ட உண்மை. “அப்படியா…? யார் அவர்கள்…? அவர்களை பற்றி அறிய ஆவலாக உள்ளேன். சுருக்கமாக அவர்களை பற்றி சொல்லுங்கள்“ என்றார் மன்னர். அமைச்சர் சேக்கிழாரும் அறுபத்தி மூன்று நாயன்மார்களின் வரலாற்றை இரத்தின சுருக்கமாக சொன்னார். அதை கேட்டு பூரித்து போன மன்னர், மேலும் நாயன்மார்களை பற்றி விரிவாக அறிய விரும்பினார்.

“சேக்கிழாரே நாயன்மார்களின் வரலாற்று சுருக்கமே இவ்வளவு அருமையாக உள்ளதே. மேலும் இதனை பெரும் காவியமாக இயற்றி தாருங்கள். உங்களால் அடியேனும் பெருமை அடைவேன்.“ “இது நான் செய்த பாக்கியம் அரசே. இப்போதே அத்திருப்பணியை தொடங்குவேன். ஆனால்….?” சேக்கிழார் ஏதோ சொல்ல தயங்கினார். “அமைச்சரே… என்ன தயக்கம்? எதையும் தயங்காமல் சொல்லுங்கள். அதை உடனே நீங்கள் திருப்திபடும் அளவுக்கு செய்து தருகிறேன்“. என்றார் அரசர். “அறுபத்து மூன்று நாயன்மார்கள் வாழ்க்கை சம்பவங்களை திரட்டி காவியமாக்குவது எளிய காரியமல்ல. அதற்கு சிவபெருமானின் பேரருளும் – தகுந்த பொருளருளும் வேண்டும்.“ “அவ்வளவுதானே… எம்பெருமான் சிவனின் அருள் பெற்றவர்களின் வாழ்க்கையை பற்றி தெரிந்து கொள்ள பொருள் தடையாக இருக்கக்கூடாது. உங்களுக்கு தேவையானவற்றை நான் செய்கிறேன். அது எம்கடமையும் ஆகும் தமிழக்கு தேவையானவற்றை நீங்கள் செய்யுங்கள்.. இதில் கணக்கு பார்ப்பது தவறு. நாம் வாழும் நாட்களை கணக்கா பார்க்கிறோம்.? இப்போதே உங்களுக்கு தேவையான பொன் – பொருட்கள் அத்துடன் உங்களுக்கு உதவியாக பணி செய்ய பணியாளர்களை நியமிக்கிறேன். இத்திருப்பணியை இன்றே தொடங்குங்கள்.“

சேக்கிழார், நாயன்மார்கள் வாழ்ந்த ஊர்களுக்கு சென்று அங்கு அவர்களின் வாழ்க்கையில் நடந்த அற்புத நிகழ்வுகளை திரட்டினார். அந்த சம்பவங்களை அழகாக காவிய நடையில் வரிசைப்படுத்தி எழுத சிறந்த இடம், தென்னாடுடைய சிவபெருமான் வசிக்கும் சிதம்பரமே ஆகும்.“ என்று முடிவு செய்து சிதம்பர கோவிலுக்கு சென்றார் சேக்கிழார். “தில்லையப்பனே… எத்தொல்லை இன்றி இக்காவியத்தை சிறப்புடன் எழுதி நிறைவு செய்ய அருள் புரிக“ என்று வணங்கி எழுத அமர்ந்தார். ஆனால் எப்படி ஆரம்பிப்பது? காவியத்தின் முதல்வரி எப்படி இருக்க வேண்டும்? என்று தெரியாமல் கவலைக்கொண்டார். விநாயகப் பெருமான், மகாபாரதத்தில் வியாசருக்கு தன் தந்தத்தை பாதியாக உடைத்து காவியம் எழுத உதவியது போல, இப்போதும் ஆனைமுகம் வருவாரோ? இல்லை வேல் ஏந்தி வேலவன் வருவானோ? இறைவா… என்செய்வேன்? எனக் யோசித்தார் சேக்கிழார். அப்போது அங்கே ஒர் அதிசயம் – அற்புதம் நிகழ்ந்தது. சிவபெருமான் வந்துவிட்டார். வந்தது தனி உருவமாக அல்ல, தமிழ் குரலாக வந்தார். “உலகெலாம்…“ என காவியத்தின் முதல்வரியை தந்தார். உலகெலாம் என்ற குரல் அசரீரியாக ஒலித்தது. அதை கேட்டு அங்கு கூடியிருந்த மக்கள் மகிழ்ச்சியடைந்தார்கள். எப்படி ஆரம்பிப்பது என்ற கவலை மறைந்து மகிழ்ச்சியில் ஆழ்ந்தார் சேக்கிழார். “சேக்கிழாரே… நீ எழுதும் இக்காவியம் இனிதே தொடங்கட்டும். அறுபத்தி மூன்று நாயன்மார்களின் வரலாறு, உலகம் இருக்கும் வரை நிலைத்து இருக்கட்டும்.“ என்று இறைவனின் வாழ்த்தொலி கேட்டது. மன்னர் மாபெரும் மகிழ்ச்சியில் திளைத்தார். இறைவனின் அன்பை நினைத்து, தாம் இத்தனை காலம் வாழ்நாளை வீண் ஆக்கிவிட்டோமே என்று வருந்தினார். சேக்கிழார், நம் அமைச்சர் அல்ல, அமைச்சர் எனும் வடிவில் வந்த ஆண்டவர் அவரே என மகிழ்நதார். அதை தொடர்ந்து தம் எழுத்துப்பணியை தொடங்கினார் சேக்கிழார்.

ஆயிரம் கால் மண்டபத்தில் அமர்ந்து எழுதி முடிக்க பல மாதம் ஆயிற்று. இறைவனின் ஆசியால் மன்னர் நினைத்தது போல் காவியத்தை எழுதி முடித்தார் சேக்கிழார். இதை உடனே மன்னருக்கு தகவல் கூறி அனுப்பினார். மகிழ்ச்சி கடலில் மிதப்பது போல் இருந்தது குலோத்துங்க ராஜனுக்கு. குழந்தை பிறந்தது என செய்தி கேட்ட உடன் விரைந்தோடி வரும் தகப்பனை போல, அறுபத்தி மூவர் காவியத்தை சேக்கிழார் பெருமான் எழுதி முடித்துவிட்டார் என செய்தி கேட்ட உடன் ஆனந்ததுடன் விரைந்து வந்தார் அரசர். தன் குழந்தை ஏதாவது ஒரு வரைபடம் வரைந்தால், பெற்ற தாய் அதை எடு்த்து கொண்டு அக்கம்பக்கத்தாருக்கும் தனக்கு தெரிந்தவர்களிடமும் தம்முடைய குழந்தை வரைந்த வரைபடத்தை காட்டி ஒரு தாய் மகி்ழ்ச்சியடைவது போல, “ஈசனே முதல் வார்த்தையை எடு்த்து தந்த காவியமிது, சேக்கிழார் எப்படிப்பட்ட தெய்வீகமாக மனிதராக இருக்கிறார் எனப் பாருங்கள்.“ என்று தன் அருகில் இருந்த அமைச்சர்கிளிடம் சொல்லி மகிழ்ந்தார் மன்னர். தன் பரிவாரத்தோடு தில்லை சிதம்பர கோவிலில் தன் மகிழ்ச்சியை சேக்கிழாரோடு பகிர்ந்து கொண்டார். “சேக்கிழார் எழுதிய இத்திருக்காவியமான அறுபத்து மூவர் வரலாற்றை கேட்க அனைவரும் வர வேண்டும். இது அநபாய குலோத்துங்க சோழ மன்னரின் ஆணை.“ என்று அரசு கட்டளை பிறப்பித்தது. அரசரின் உத்தரவை மதிக்காமல் இருந்தால் ராஜதண்டனைக்கு ஆளாவோம் என்ற பயத்தில்தான் முதலில் மக்கள் பல்ர் வநதார்கள். ஆனால் போக போக அரசாங்க காவலர்களாலேயே கட்டுப்படு்த்த முடியாத அளவுக்கு மக்கள் கூட்டம் சிதம்பரத்தையே திணறடித்தது.. இந்த காட்சியை கண்ட சேக்கிழாரை விட மன்னரே அதிக மகிழ்ச்சியடைந்தார். சேக்கிழார் பெருமான் அந்த அளவுக்கு அறுபத்தி மூன்று நாயன்மார்களின் வரலாற்று சம்பவத்தை பாமர மக்களுக்கும் புரியும்விதமாக அழகு தமிழில் அற்புதத்தெளிவாக விளக்கனார்.. சித்திரை மாதத்தில் தொடங்கி மறு வருடம் சித்திரையில் வரலாற்றை சொல்லி முடித்தார். ஒவ்வோரு நாளும் கூட்டம் அதிகமாகி கொண்டே போனது. வேறு ஊரில் இருந்தெல்லாம் மக்கள் சிதம்பரத்தில் வந்து குவிந்தார்கள்.