Saturday 19 September 2015

சிறுத்தொண்டரை தேடி வந்த காசி அகோரி அறுபத்து மூவர் வரலாறு பகுதி – 12

சிறுத்தொண்டரும் வெண்காட்டு நங்கையாரான இவரது மனைவியும் சிவத்தொண்டு புரிவதில் மற்றற்ற மகிழ்ச்சியடைந்தார்கள். ஒரு சிவன்னடியாராவது உணவு உட்கொண்ட பிறகுதான் தாம் உணவே உட்கொள்ள வேண்டும் என்ற கொள்கையில் உறுதியாக நின்றார்கள் இந்த தம்பதியினர். கணபதீஸ்வரர் என்ற சிவ திருதலத்திற்கு சென்று அங்கு வரும் சிவன் அடியார்களை தம் வீட்டிற்கு அழைத்துவந்து உணவு பரிமாறுவார்கள். இப்படி தினமும் செய்து வந்தார் சிறுத்தாண்டர். இவருடைய மகன் சீராளதேவர். அவனும் தாய்-தந்தை வழியில் அச்சிறு வயதிலேயே சிவபக்தியுடன் திகழ்ந்தான். தாம் பெற்ற செல்வத்தினுள் சிறந்த செல்வமான சீராளதேவனை தமக்கு வாரிசாக தந்த இறைவனுக்கு தம்மால் இயன்ற சிறப்புகளையும் செய்து வந்தார் சிறுத்தொண்டர். இப்படி மகிழ்ச்சியாக குடும்பம் நகர்ந்து கொண்டு இருந்தது. ஒருநாள் திருஞானசம்பந்தர் திருச்செங்காட்டங்குடிக்கு வந்திருப்பதாக கேள்விப்பட்ட சிறுத்தொண்டர், திருஞானசம்பந்தரை தன் வீட்டிற்கு விருந்தினராக அழைத்து வர விரும்பினார். சிறுத்தொண்டரின் இந்த விருப்பமும், திருஞானசம்பந்தரின் வருகையும்தான் சிறுத்தொண்டர் வாழ்வில் எதிர்பாரத ஓர் நிகழ்வு நடைபெற காரணமாக இருக்க போகிறது என்பதை யாரும் அறியவில்லை. ஞான பிள்ளையான திருஞானசம்பந்தர், சிறுத்தொண்டரின் அன்பு கட்டளைக்கு பணிந்து, உணவு உட்கொள்ள சிறுத்தொண்டர் வீட்டிற்கு வருகை தந்தார். வெண்காட்டுநங்கையார், திருஞானசம்பந்தருக்கு உணவு பரிமாறினாள். விருந்து சிறப்பாக நிறைவு பெற்றது. மகிழ்ந்து போனார் திருஞானசம்பந்தர். சிறுத்தொண்டரின் பெருமைகளை ஏற்கனவே அறிந்த திருஞானசம்பந்தர், அவரின் சிவதொண்டையும் தனக்கு வழங்கிய மரியாதையையும் நினைத்து மகிழ்ந்து சிறுதொண்டருக்காக ஒரு பதிகம் பாடி அங்கிருந்து விடைப்பெற்றார்.

பொதுவாக திருஞானசம்பந்தர், சிவாலயங்களில் இறைவன் முன் பதிகம் பாடுவது வழக்கம். ஆனால் இன்றோ ஒரு சிவதொண்டரான சிறுத்தொண்டர் வீட்டிற்கு நேரடியாக வந்து உணவு உட்கொண்டு, சிறுத்தொண்டரின் வீட்டினுள் ஒரு பதிகம் பாடி அருளியதை கண்டு பலர் அற்புத நிகழ்ச்சியாக நினைத்தாலும் சிலர் சிறுத்தொண்டர் அவ்வளவு பெரிய சிவதொண்டரா என்று பொறாமை கொண்டனர். அவர்களுக்கு சிறுத்தொண்டரின் பெருமையை யார் சொன்னாலும் ஏற்க மாட்டார்கள் என்பதால் இறைவனான சிவபெருமானே சிறுத்தொண்டரின் பெருமையை உலகம் அறிய செய்ய தீர்மானித்தார். இறைவனின் தீர்மானம்-திருவிளையாடல் என்பதெல்லாம் சிவன் அடியார்களுக்கு சோதனையானதாகத்தான் இருக்கும். வைரத்தை பட்டை தீட்டுவதும், தங்கத்தை நெருப்பில் இடுவதும் அதனை அழிப்பதற்காக அல்ல. அவற்றின் மதிப்பை கூட்டுவதற்காகதான். அதுபோல சிவன்னடியார்களுக்கு இறைவன் தருகிற சோதனைகளும் அவ்வாறானதே. பக்குவப்பட்ட மனம், சக்தியாக மாறி ஏற்றத்தை தருகிறது. பக்குவம் அடையாத மனமோ சகதியாக மாறி குட்டையில் விழுந்த தவளையை போல் வாழ்க்கை திசைமாறி, தன் வாயாலேயே இழப்பை அடைகிறார்கள். 63 நாயன்மார்களின் வாழ்க்கை வரலாறு என்பது வெறும் வழிபாடு-பக்தி என்று இருப்பதை விட இறைவனை தம் குடும்பத்தில் ஒருவராக நினைத்து உண்மையான அன்பு கொண்ட பக்தியாக இருப்பதே நிஜவழிபாடாகும் என்பதை நமக்கெல்லாம் சொல்லும் வரலாறு. அன்பே சிவம் என்பது மட்டுமல்ல, இறைவனை நம்புகிறவர்களுக்கும் அதே அன்பு இருக்க வேண்டும் என்று சொல்வதே 63 நாயன்மார்களின் வரலாறு. அதிலே சிறுத்தொண்டரின் வாழ்க்கை வரலாறு அன்பு கலந்த பக்தியின் உச்சக்கட்ட எடுத்துக்காட்டு. ஒருநாள் வழக்கம் போல ஒரு சிவன்னடியாரை உணவுக்கு அழைத்துவர சிறுத்தொண்டர் வெளியே புறப்பட்டு சென்றார். அப்போது சிறுத்தொண்டரின் வீடு தேடி வடதேசத்தில் இருந்து ஒரு அகோரி வந்து வாசலில் நின்றார்.


அவர் கையில் சூலம், மற்றோரு கையில் கபாலத்துடன் பார்க்கவே பிறர் அதிரும் உருவத்தில் உயர்ந்த உடல் பருமனுடன் உடல் யானை தோலால் செய்த உடை அணிந்து இருந்தார். சிறுத்தொண்டரின் வீட்டு வாசலில் நின்றுகொண்டு குரல் கொடுத்தார். “யார் வீட்டுக்குள்.? சிறுத்தொண்டர் இருக்கிறாரா?” என்று குரல் கொடுத்தார். இதைகேட்டு வெளியே வந்தாள் சிறுத்தொண்டர் வீட்டின் பணிப்பெண்ணான சந்தன நங்கையர். “ஐயா வெளியே சென்று இருக்கிறார். வரும் நேரம்தான். நீங்கள் சற்று காத்திருந்தால் வந்து விடுவார். உள்ளே வந்து உட்காருங்கள்” என்றாள். “உலகத்தை காக்கும் அந்த பரமேஸ்வரனையே நான் காக்க வைப்பேன். அப்படி இருக்கும் போது சாதாரண மானிட பிறவியான சிறுத்தொண்டருக்கா நான் காத்திருப்பது.? கேவலம். நான் வருகிறேன்” என்றார் அகோரி. அந்த வடதேசத்து அகோரியின் குரலை உள்ளிருந்து கேட்ட சிறுத்தொண்டரின் மனைவி நங்கையார் ஒடிவந்து, “சுவாமி,தயவு செய்து தவறாக நினைக்க வேண்டாம். அவர் சிவன்னடியார்களுக்கு உணவு பரிமாறிய பிறகுதான் சாப்பிடுவார். அதனால்தான் ஒரு சிவதொண்டரையாவது அழைத்துவர கோயிலுக்கு சென்று இருக்கிறார். நீங்கள் தவறாக நினைக்க வேண்டாம். உள்ளே வந்து அமருங்கள். அவர் இப்போது வந்து விடுவார்.” என்றாள் சிறுத்தொண்டரின் மனைவி. “ஆண்கள் இல்லாத வீட்டினுள் யாம் நுழைவதில்லை.

உன் கணவன் வந்த பிறகு வருகிறேன். அதுவரையில் கணபதீஸ்வர ஆலயத்தில் இருப்பேன். சிறுத்தொண்டன் வந்து என்னை அழைக்கட்டும்” என்று கூறி சென்றார் அகோரி. சிலமணி நேரம் கழித்து மதிய உணவு சாப்பிட ஒரு சிவன் அடியார்களும் இல்லாத கவலையில் மிக சோர்வாக தன் வீட்டிற்கு வந்தார் சிறுத்தொண்டர். “பல மணிநேரம் தேடியும் எந்த சிவன்னடியார்களையும் காணமுடியவில்லை. இன்று நான் எதுவும் சாப்பிடுவதாக இல்லை” என்றார். “நம் இல்லத்திற்கு உங்களை தேடி ஒரு வடதேச சிவதொண்டர் வந்தார். அவர் காசியில் இருந்த வந்த அகோரி போல தெரிகிறது. கணபதீஸ்வர ஆலயத்தில் இப்போது இருக்கிறார். நீங்கள் சென்று அழைத்தால் வருவதாக சொல்லி இருக்கிறார்.” என்றாள் சிறுத்தொண்டரின் மனைவி. மனைவியான வெண்காட்டுநங்கையார் சொன்னதை கேட்டு மகிழ்ச்சியடைந்த சிறுத்தொண்டர் வரும் விபரீதத்தை அறியாமல் மகிழ்ச்சியோடு அவசர அவசரமாக கணபதீஸ்வரர் கோயிலுக்கு ஓடி வந்தார். சிறுத்தொண்டர் சந்திக்க போகும் துன்பத்தை படித்தால் நம் மனம் துடித்து போகும். அந்த சம்பவத்தை என்னவென்று நாம் அறிந்துக் கொள்ள இறைவனே நம் மனதிற்கு தைரியத்தையும் தரவேண்டும். அந்த சம்பவம் என்ன என்பதை அடுத்த பகுதியில் சொல்கிறேன்.


No comments:

Post a Comment