Saturday, 19 July 2014

8.உமேச மூர்த்தி

முன்பொருமுறை நான்முகன் படைத்தல் தொழிலுக்கு நான்கு புதல்வர்களை தன்னுடைய தவ சக்தியால் உண்டாக்கினார். அந்த நால்வரும் படைத்தல் தொழிலை மேற்க்கொள்ளாமல் தவச்சாலையை நோக்கிச் சென்றுவிட்டனர். பின்னர் நான்முகன் விஷ்ணுவை கானச்சென்றார். அவர்தம் குறைகளைச் சொன்னார். இக் குறைகளைப் போக்குபவர் சிவபெருமான் ஒருவரே, எனவே அவரைச் சென்று பார்ப்பதே உசிதமென நான்முகன், விஷ்ணு, நான்கு புதல்வர்கள் சகிதம் வெள்ளிமலையை அடைந்தனர்.

அவர்களை நெற்றிக்கண்ணால் சிவபெருமான் நோக்க, அவர்களனைவரும் எரிந்து சாம்பலானார்கள். அப்பொழுது தனிமையில் இருந்த சிவபெருமான் தன் தோளைப்பார்க்க அவரது சக்தியே உமாதேவியாக வடிவம் கொண்டு வெளிவந்தது. உடன் உமாதேவியை தன் இடபுறமாக இருக்க செய்தார். பின்னர் எரிந்து சாம்பலானவர்களை முன் போலவே படைத்தார். அவர்கள் அனைவரும் இவர்கள் இருவரையும் வணங்கி நின்றனர். இருவரது அகமும் மகிழ்ந்ததால் அவர்கள் அனைவரும் கேட்ட வரத்தினைக் கொடுத்தார். உலகமே செழித்தது. உலகிலுள்ள அனைத்து உயிர்களையும் படைத்து, காத்து, துயர்துடைத்து அனைத்தையும் வாழவைக்கும் சக்தியை உமையவளாக இடது பாகத்தில் வீற்றிருந்தக் கோலத்தைக் கண்டவர்கள் ஆனந்தப்பட்டனர். ஆகவே சிவபெருமானது பெயர்களில் உமேச மூர்த்தியும் சேர்ந்துக் கொண்டது.
பொதுவாக சிவபெருமான் உமாதேவியோடு கூடியிருக்கும் திருக்கோலமே உமேசமூர்த்தி யானது என்றும் சொல்லலாம். இத்தகைய சிறப்பு பெற்ற உமேசமூர்த்தியை தரிசிக்க நாம் செல்ல வேண்டியத் தலம் திருஇடைமருதூர் ஆகும். கும்பகோணம் அருகே அமைந்துள்ள இத்தலத்தில் கோயில் கொண்டுள்ள உமேசமூர்த்தியை காவிரி நீரால் அபிசேகம் செய்தால் குடும்ப வாழ்வு இன்பமயமானதாக அமைய அருள்புரிவார்.


No comments:

Post a Comment