Saturday, 19 July 2014

18. கங்காதர மூர்த்தி

திருக்கைலையிலுள்ள ஓரு தோட்டத்தில் சிவபெருமான் நடைபயின்றுக் கொண்டிருந்தார். பார்வதி தேவி ஓசைப்படாமல் சென்று அவரது இரு கண்களையும் விளையாட்டாய் பற்றினார். உடன் உலக உயிர்கள் அனைத்திற்கும் அளவிலாத துன்பம் ஏற்பட்டது. அதனால் உலகம் முழுவதும் பேரிருள் சூழ்ந்தது. இதனையறிந்த சிவபெருமான் தனது நெற்றிக்கண்ணைத் திறந்து அனைவரையும் காத்தார். ஒளி வந்ததால் அனைத்து உயிர்களும் துன்பம் நீங்கி இன்பமடைந்தனர். அனைவரும் சிவபெருமானைப் போற்றினர். இதனைக் கேள்விப் பட்ட பார்வதி தேவி அவசரமாக தன் கைகளை நொடிப்பொழுதில் எடுத்தார். இதனால் இவரது பத்து கைவிரலில் இருந்த வியர்வைத் துளிகள் பத்தும் கங்கையாக மாறி மூவுலம் முழுவதும் பரவி பெருத்த சேதத்தையும், அழிவையும் உண்டாக்கியது. இதனைக் கண்ட முவுலகத்தினரும் சிவபெருமானிடம் முறையிட்டனர்.

சிவபெருமானும் அவ்வெள்ளத்தை அடக்கி அதனை தனது சிரசில் ஓர் மயிர் முனையில் தரித்தார். இதனைக்கண்ட அனைவரும் சிவபெருமானைப் போற்றித் துதித்தனர். நான்முகன், இந்திரன், திருமால் ஆகிய மூவரும் சிவபெருமானிடம் சென்று நாதா பார்வதி தேவியின் கைவிரல் வியர்வையால் உண்டான கங்கை பெரும் புனிதமானது, அதை உங்கள் முடியில் தரித்ததால் அது மேலும் புனிதமடைகிறது. அத்தகைய புனிதப் பொருளை எங்களுக்கும் கொஞ்சம் கொடுத்தருள வேண்டும் என்றனர். அதன்படியே இந்திரன் தனது அமராவதி நகருக்கும், நான்முகன் தனது மனோவதி நகருக்கும், திருமால் தனது வைகுண்டத்திற்கும் கங்கையைக் கொண்டு சேர்த்தனர்.

கங்கையின் வெள்ளத்தையும், வேகத்தையும் குறைத்து தனது சடைமுடியில் தாங்கியிருப்பதால் சிவபெருமானுக்கு கங்காதர மூர்த்தி என்ற பெயர் ஏற்பட்டது. கங்காதர மூர்த்தியை தரிசிக்க இமயத்திற்கு தான் செல்ல வேண்டும். இமயமலையே கங்காதர மூர்த்தியின் இருப்பிடமாகும். அங்கு சென்று கங்காதர மூர்த்தியை மானசீகமாய் வணங்கி அங்கு கிடைக்கும் கங்கை நீரை வீட்டிற்கு எடுத்து வந்து தெளிக்க இடம் புனிதமாகும். கங்காதர மூர்த்தியை மல்லிப்பூ அர்ச்சனையும், பாலில் செய்த இனிப்பு பண்ட நைவேத்தியமும் சோமவாரத்தில் சந்தியா காலத்தில் செய்தோமானால் செல்வசெழிப்பும் இனியோரு பிறவி இல்லா நிலையும் ஏற்படும். இந்த கங்கை நீரை வீட்டில் கலசத்தில் வைத்து வழிபட லஷ்மி கடாட்சம் கிடைக்கும்.


Read more: http://www.penmai.com/forums/temples-gods-goddess/51202-64-forms-lord-shiva-64-a-2.html#ixzz37t6CWnAL

No comments:

Post a Comment