Saturday, 19 September 2015

“பாட்டன் கையெழுத்து – மாறிய தலையெழுத்து.“,- அறுபத்து மூவர் வரலாறு – பகுதி 2

அறுபத்து மூவர் வரலாறு – பகுதி 2 நிரஞ்சனா

முந்தைய பகுதிக்கு கிளிக் செய்யவும் உலகெலாம் இருப்பவர்களுக்கு தந்தையாக காட்சி கொடு்ப்பது ஈசன். அவரின் இடம் இமயமலை. அந்த மலையோ விபூதி பூசியது போல் வெண்மையாக இருக்கும். பிரம்மன் அன்ன வாகனத்தில் வந்து இறைவனை தரிசித்துவிட்டு வெளியே வந்து பார்த்தால், அந்த வெண்மையான கையிலாய மலையில் தன் வாகனமான அன்னபறவை எங்கு இருக்கிறது என்று தேடி அழைத்து செல்வதே வாடிக்கையாக கொண்டு இருந்தார் பிரம்மன். ஈசனின் மனம் போல் வெண்மையாக இருக்கும் இமயமலை. சிவபெருமானின் பரம பக்தனாகவும் பணியாலராகவும் இருந்தவர் ஆலாலசுந்தரம். தாயும்மானவருக்கு திறுநீறு பூசி பூக்களால் அலங்கரிப்பார் ஆலால சுந்தரம். ஒருநாள் சிவனுக்காக பூக்களை பறித்து கொண்டு இருக்கையில், அங்கே பார்வதிதேவியின் இரு தோழிகளும், தேவிக்காக பூக்களை பறித்து கொண்டு இருந்தார்கள். அந்த இரண்டு பெண்களையும் ஆலால்சுந்தரர் பார்த்து, “அடடா… என்ன ஆழகு…!, என்ன நளினம்…!“ என்று வர்ணித்தார். இதை கேட்ட அக்கன்னி பெண்கள் வெட்கப்பட்டு அந்த இடத்தை விட்டு ஒடிவிட்டார்கள். சுந்தரரும் சில பூக்களை மட்டும் பறித்து கொண்டு சிவபெருமானுக்கு மலர்களால் அர்ச்சனை செய்ய சென்றார். சுந்தரர் தன் அருகில் வந்தவுடன். அவரின் மனதில் ஒடி கொண்டு இருக்கும் எண்ணத்தை புரிந்த கொண்ட சிவபெருமான், “ சுந்தரா… நீ இப்போது சராசரி மனிதர்களின் உணர்வை பெற்று விட்டாய். இனி நீ இங்கு இருக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை. நீ உன் மனத்திற்கு பிடித்தது போல் பூலோகத்தில் வாழ்ந்து பின் எம்மிடம் வருவாயாக..!“ என்றார் அகிலாண்டேஸ்வரர். “அய்யனே…என்னை மன்னிக்க வேண்டும். நான் பெரிய பாபம் செய்து விட்டேன். அதனால் தங்கள் கோபத்திற்கு ஆளாகி நின்று இச்சாபத்தை பெற்றேன். பெற்ற சாபத்தை திரும்ப பெற முடியாது என்பதை நான் அறிவேன். பெண்களின் மேல் கொண்ட துஷ்ட மோகத்தால்தான், தங்களை விட்டு பிரிய நேர்ந்ததே….“ என்று கவலை கொண்டார் சுந்தரர். “சுந்தரா… கவலை வேண்டாம் தக்க சமயத்தில் உன்னை ஆட்கொள்வோம். சென்று வா…” என்று அருளாசி தந்தார் சிவபெருமான்.

திருநாவலூரில் சைவ அந்தணர் குலத்தில் சடையனார் என்பவருக்கு இசைஞானியார் என்ற நற்குணம் படைத்த மனைவி அமைந்திருந்தாள். இவர்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு “நம்பியாரூரன்“ என்று திரு பெயர் சூட்டினர். நம்பியாரூரனின் முகம் தெய்வீக கலையாக இருந்ததால் பெற்றோர்கள் உள்பட சுற்றத்தாரும் பாராட்டி சீராட்டி வளர்த்தார்கள். ஒருநாள், குழந்தையை நன்கு அலங்கரித்து இசைஞானியார் தன் குழந்தையின் கையில் தேர் கொடுத்து விளையாட அனுப்பி வைத்தாள். விளையாட சென்ற தம் திருமகன் அடு்த்த நிமிடமே தத்து பிள்ளையாக வேறோரு இடம் போவான் என்று கனவிலும் நினைத்து இருக்க மாட்டாள் இசைஞானியார்.. விதி விளையாட்டின் ரூபத்திலேயே வந்தது. நம்பியாரூரர் தெருவில் விளையாடி கொண்டிருக்கையில் அந்த வழியாக வந்து கொண்டு இருந்த அரசர் நரசிங்க முனையரையர், சற்று நின்று குழந்தையின் மழலை சிரிப்பில் மயங்கி நம்பியாரூரன் பெற்றோர்களிடம், “நீங்கள் பெற்றது பிள்ளையல்ல… அப்பழுக்கற்ற வைரம். அந்த ஜொலிப்பான முகம் எந்த நாடடின் பிள்ளைக்கும் இருக்காது. இவன் இந்திரனோ… இல்லை தேவலோக மன்மதனோ… இப்பிள்ளை தெருவில் விளையாடும் பிள்ளையல்ல… அரண்மனையில் விளையாட வேண்டிய பிள்ளை. இந்த நாட்டின் சிம்மாசனத்தை அலங்கரிக்க வேண்டிய பிள்ளை. உங்கள் குழந்தையை எனக்கு தத்து கொடுக்க வேண்டும்.“ என்று கேட்டார் அரசர். தாம் பெற்ற குழந்தை வரும் காலத்தில் நாடாள்வான் என்ற மகிழ்ச்சியில் மனநிறைவுடன் அரசருக்கு தத்து கொடுக்க சம்மதித்தார்கள் நம்பியாரூரன் பெற்றோர்கள். நம்பியாரூரை தன் பிள்ளை போல் பாசத்துடன் வளர்த்து வந்தார்கள் அரசரும் – அரசியும். தத்து எடுத்தாலும் நம்பியாரூராரை அந்தண குலமுறைப்படியே வளர்தது வந்தார்கள். நம்பியாரூரனுக்கு திருமண வயது வந்ததால் தங்கள் அந்தஸ்துக்கும் வசதிக்கும் இணையான மருமகளை தேடினார்கள். சடங்கலிச்சிவாசாரியார் என்ற மறையவருக்கு அழகான மகள் இருக்கிறாள் என்று கேள்விப்பட்டு, அந்த பெண்ணையே தன் மகனுக்கு திருமணம் செய்ய சம்மதித்தார் அரசர்.


திருமணத்திற்கான ஏற்பாடுகள் விமர்சையாக நடந்தது. இன்னும் சில மணி நேரத்தில் திருமணம். நம்பியாரூரரும் மற்றவர்களும் மகிழ்ச்சியில் இருந்தார்கள். மண மேடையில் மணமகன் நம்பியாரூரார் நெருக்கத்தில் மணமகள். முகூர்த்த நேரம் நெருங்கியது. அந்தணர்களின் திருமண மந்திரம் கம்பீரமாக ஒலித்தது. திருமாங்கல்யத்தை கையில் எடுத்தார் நம்பியாரூரர். கெட்டிமேள சப்தம் விண்ணை தொட்டது. மணபெண்ணின் கழுத்தில் திருமாங்கள்யம் நெருங்கும் நேரத்தில் கெட்டி மேள சப்தத்தையும் மீறி, “நிறுத்துங்கள்…“ என்று அந்த சமயத்தில் கேட்கக் கூடாத வார்த்தை ஒலித்தது. குரல் வந்த திசை நோக்கி அனைவரின் விழிகளும் திரும்பியது. அங்கே ஒரு வயதான பெரியவர். அவர் கையில் ஒரு ஓலை சுவடி. “நிறுத்துங்கள் திருமணத்தை. எனக்கு நியாயத்தை சொல்லி பிறகு நடத்துங்கள் உங்கள் நாடகத்தை.“ என்றார் பெரியவர். “நாடகமா…? கிழவரே… என்ன உளறுகிறீர். நடப்பது இந்நாட்டின் அரசர் இல்ல திருமணம்.“ என்றார் ஒருவர். “ஓ…. அரசர் இல்ல திருமணம் என்றால் அநியாயம் செய்யலாமோ?“ என்றார் பெரியவர். அதை கேட்டு அரசர், மேடை இறங்கி பெரியவரின் முன்பாக வந்து நின்றார். “பெரியவரே… என்ன அநியாயம் கண்டீர்கள்..?“ என்றார் அரசர். “என் அடிமையை நீங்கள் சொந்தம் கொண்டாடுகிறீர்களே…. அதுதான் அநியாயம்.“ அரசர், “உங்கள் அடிமையா…. யாரது…?“ “அதோ அவன்தான்!“ – பெரியவர், மணமேடையில் அமர்ந்திருந்த மணமகன் நம்பியாரூரரை கைக் காட்டினார். அதிர்ந்தே போனார்கள் அனைவரும். நம்பியாரூரர் திடுகிட்டு எழுந்து பெரியவரின் அருகில் கோபமாக வந்தார். “பித்தனே… எங்கே வந்து என்ன பிதற்றுகிறாய்..?. யார் யாருக்கு அடிமை..?“ “நீ…. நீதானடா எனக்கடிமை!“ “அரசர் வீட்டு பிள்ளை உமக்கு அடிமையா..?“ என்றார் ஒருவர். “அரசர் வீட்டு பிள்ளையா….? இவன் அரசருக்கு தத்து பிள்ளை. அதற்கு முன்னரே இவன் அடிமை பிள்ளை.“ “சரி… எதுவாக இருந்தாலும் திருமணம் நடக்கட்டும். பிறகு பேசலாம்“ என்றார் அரசர். “ எனக்கு தேவை என் அடிமை மட்டும்தான். இவனை மட்டுமே நான் அழைத்துச் செல்வேன்.“ “மறுபடி மறுபடியும் என்னை அடிமை அடிமை என்கிறீரே… அதற்கு என்ன ஆதாரம்” என்றார் நம்பியாரூரர். “ஆதாரம் இல்லாமல் வழக்கு தொடர்வேனா..? இதோ எமது ஆதாரம்.“ என்று பெரியவர் தன் கையில் இருந்த ஓலை ஒன்றை நீட்டினார். “என்ன ஓலை இது“ – நம்பியாரூரர்.

“நீ எமக்கு அடிமையெனும் ஆதாரம்” – பெரியவர். “எவன் எழுதி தந்தது..?“ “எழுதி தந்தவன் உன் பாட்டன். அதனால் மரியாதையாக பேசு“ “என் பாட்டனா..? பித்தனே மரியாதையாக போய்விடு.“ “போகலாம். வா என்னுடன்“ “சரி… ஓலையை காட்டு“ “தாராளமாக. இந்தா பிடி. நன்றாக படி“ நம்பியாரூரர், அந்த ஓலையை வாங்கி படித்த உடனே கிழித்து போட்டார். “இது மோசடி ஓலை.“ என்றார் நம்பியாரூரர். “நீ இப்படிதான் செய்வாய் என எமக்கு தெரியும். நீ கிழித்தது நகல். அசல் ஓலை பத்திரமாக இருக்கிறது.“ “இதில் இருப்பது என் பாட்டனாரின் கையெழுத்து அல்ல“ என்றார் ஆரூரர். பலமாக சிரித்தார் பெரியவர். “உன் பாட்டனையே நீ பார்த்திருக்க மாட்டாய். அவர் கையெழுத்தா உனக்கு தெரிய போகிறது?” என்றார் பெரியவர். “பெரியவரே… இந்த கையேழுத்து ஆரூரரின் பாட்டன் கையெழுத்து என்பதற்கு என்ன ஆதாரம்.“ கேட்டார் அரசர். “அதை நான் வழக்கு மன்றத்தில் நிரூபிப்பேன்.“ “இப்போதே வழக்கு மன்றத்தை கூட்டுங்கள். இந்த பித்தனின் ஆதாரத்தையும் பார்ப்போம்“ என்றார் ஆரூரர். “உன் மீது வழக்கை உன் ஊரிலேயே நடத்தினால் தீர்ப்பு உனக்கு சாதகமாகதான் வரும். என் ஊரில்தான் வழக்கு நடக்க வேண்டும்.” “ உன் ஊர் எது..?“ “ திருவெண்ணெய் நல்லூர்..!. புனிதமான வேதங்களை ஓதும் வேதியர்கள் வசிக்கும் ஊர். அறநெறியாளர்கள் முன்னிலையில் நியாயம் கேட்டு வழக்காடி, நீ என் அடிமை என்று நிரூபிப்பேன்.“ என்றபடி பெரியவர் திரும்பி செல்ல, காந்தம் இரும்பை இழுத்துச் செல்வதை போன்று பெரியவரின் பின்னே சென்ற ஆரூரரும் மற்றோரும் திருவெண்ணெய் நல்லூர் அடைந்தனர் “சபையோரே… நான் இந்த ஆரூராரை பற்றி முறையிட வந்துள்ளேன். இவன் என் அடிமை. நான் காட்டிய அடிமை ஒலையை கிழித்து விட்டான். ஆனாலும் அவன் கிழித்தது நகல்தான். என்னிடம் அசல் மூல ஒலை இருக்கிறது. ஆகவே என் வழக்கை விசாரித்து நியாயம் வழங்கி இந்த அடிமையை என்னிடம் அனுப்பி வையுங்கள்.“ என்றார் பெரியவர்.

“மனிதனுக்கு மனிதன் அடிமையா…? என்ன அநியாயம். இதை ஒப்புக் கொள்ள முடியாது. அதுவும் ஆரூரர் பாட்டன் கையெழுத்திட்டது என்பதை எப்படி ஏற்பது.?“ என்றனர் நியாய சபையினர். “ஆனாலும் நீங்கள் வைத்திருக்கும் ஒலை உண்மையான ஓலைதானா என்பதை ஆராய்ந்த பின்னரே தீர்ப்பு தர இயலும். அசல் மூல ஓலையை காட்டுங்கள்.“ என்றனர் நீதி சபையினர். அதற்கு பெரியவர், “சபையோரையும் கூடி இருக்கும் மக்களையும் நம்பிதான் மூல ஒலையை தருகிறேன். இதை ஆரூரன் கிழித்து போட்டுவிட்டால் நீங்கள்தான் பொறுப்பு.“ என்று சொல்லி, பெரியவர் தன் கையில் இருந்த ஒலையை சபையோரிடம் தந்தார். ஆரூரர் பாட்டனாரின் உண்மையான கையெழுத்தை ஆராய ஒரு விசாரனை அதிகாரியை நம்பியாரூரரின் சொந்த ஊருக்கு அனுப்பியது நீதி சபை. நம்பியாரூரரின் பாட்டன் கையெழுத்து அடங்கிய ஆதாரங்கள், திருவெண்ணெய் நல்லூர் நீதிமன்ற சபைக்கு கொண்டு வரப்பட்டு, பெரியவரின் ஓலையில் உள்ள கையெழுத்து உண்மையானதா? என்று ஆராய்ந்தார்கள். எல்லாம் சரியாகவே இருந்தது. நம்பியாரூரர் அதிர்ச்சி அடைந்தார். பெரியவர் மகிழ்ந்தார். அதை தொடர்ந்து அதிசயங்கள் நடந்தது.


No comments:

Post a Comment