Sunday, 25 May 2014

இருதயாலீஸ்வரர் திருக்கோயில்

அருள்மிகு இருதயாலீஸ்வரர் திருக்கோயில், வீரகேரளம்புதூர்


மூலவர் :இருதலாயஈசுவார் (மன ஆலய ஈஸ்வரர்)
அம்மன்/தாயார் :மீனாட்சி
தல விருட்சம் :வில்வம்
தீர்த்தம் : சிற்றாறு
பழமை : 1063 வருடங்களுக்கு முன்
புராண பெயர் :வீரகேரளம்புதூர்
ஊர் :வீரகேரளம்புதூர்
மாவட்டம் :திருநெல்வேலி
மாநிலம் :தமிழ்நாடு

பெயர் வரலாறு:

நாயன்மார்களில் ஒருவரான பூசலார் திருநின்றவூரில் தலத்தில் பிறந்தவர். இவர் தினமும் அவ்வூரிலுள்ள சிவலிங்கம் ஒன்றை தரிசித்து வந்தார்.
மேற்கூரை இல்லாத அந்த லிங்கம் வெயிலிலும், மழையிலும் நனைந்தது. இதைப்பார்த்த பூசலாருக்கு சிவனுக்கு கோயில் கட்ட ஆசை எழுந்தது.
இவரோ பரம ஏழை. எனவே சிவனை தன் மனதில் இருத்தி, தன்னிடம் ஏராளமான பணம் இருப்பது போல் கற்பனை செய்து கொண்டார். மனதுக்குள்ளேயே கோயில் கட்ட ஆரம்பித்தார். அந்தக் கோயிலில் இல்லாத பொருளே இல்லை. செய்யாத வசதியே இல்லை.

மனம் காற்றை விட வேகமானது என்பர். மனம் நினைத்தால் ஒரே நாளில் கோயிலைக் கட்டி விடலாம். ஆனால், நாயனார் அவசரப்படவில்லை. உண்மையிலேயே ஒரு கோயில் கட்ட எத்தனை ஆண்டுகள் ஆகுமோ, அத்தனை ஆண்டுகள் இந்த கோயிலை கட்டினார்.
இந்த நேரத்தில் காஞ்சிபுரத்தில் ஒரு மன்னன் சிவனுக்கு உண்மையான கோயிலை கட்டி கொண்டிருந்தான். அவன் கட்டி முடித்த நேரமும், பூசலார் தன் மனக்கோயிலை கட்டி முடித்த நேரமும் ஒன்றாக அமைந்தது. இருவரும் ஒரே நாளில் கும்பாபிஷேகம் நடத்த நாள் குறித்தனர்.
மன்னன் கட்டிய கோயில் கும்பாபிஷேகத்திற்காக காஞ்சி மாநகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது.


அன்றிரவு மன்னனின் கனவில் தோன்றிய சிவபெருமான், ""நீ எனக்கு கோயில் கட்டியிருப்பது குறித்து மகிழ்ச்சி தான். ஆனால், இதே நாளில் திருநின்றவூரில் பூசலார் என்ற அடியார் கும்பாபிஷேகம் செய்ய நாள் குறித்து விட்டார். நான் அந்த கோயிலுக்கு செல்ல வேண்டியுள்ளது. எனவே நீ வேறொரு தேதியில் கும்பாபிஷேகத்தை வைத்து கொள்,''என்று கூறி மறைந்தார்.திடுக்கிட்டு விழித்தான் பல்லவ மன்னன். கும்பாபிஷேகத்தை நிறுத்திவிட்டு இறைவன் குறிப்பிட்ட திருநின்றவூருக்கு புறப்பட்டான். அங்கு சென்றதும் பூசலார் என்பவர் இவ்வூரில் கட்டியிருக்கும் கோயில் எங்கே என விசாரித்தான். யாருக்கும் அது பற்றி தெரியவில்லை.


பின் பூசலாரின் இருப்பிடத்தை கண்டுபிடித்து அவரை வணங்கி, ""நீங்கள் கட்டியுள்ள கோயில் எங்கே உள்ளது? நேற்றிரவு சிவன் எனது கனவில் கூறினார். அதை தரிசிப்பதற்காக வந்துள்ளேன்,''என்றான்.மன்னன் சொன்னதை கேட்டு பூசலாருக்கு மிகுந்த ஆச்சரியம் ஏற்பட்டது.
""அரசே! சிவபெருமான் உங்கள் கனவில் கூறியதை கேட்டு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். கோயில் கட்டுமளவு என்னிடம் வசதி இல்லை. எனவே எனது உள்ளத்திற்குள் ஒரு சிவாலயம் கட்டி, இன்று கும்பாபிஷேகம் நடத்துவதாக கற்பனை செய்து கொண்டேன். இதைத்தான் சிவன் உங்களிடம் கூறியுள்ளார்,''என்றார்.

இதை கேட்டதும் மன்னன் அதிர்ச்சி அடைந்தான். அன்பினால் மனதில் கட்டும் கோயிலுக்கும், பல லட்சம் செலவு செய்து கட்டும் கோயிலுக்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்து கொண்டான்.
குறிப்பிட்ட நாளில் பூசலார் எழுப்பிய மனக்கோயிலில் சிவபெருமான் எழுந்தருளினார். அவரது இதயத்தில் நடந்த கும்பாபிஷேகத்தை பக்தர்கள் அனைவரும் கண்டுகளித்தனர். அன்றே ஈசனின் திருவடியையும் அடைந்தார் அவர். சிவபெருமான் அவரை நாயன்மார்களில் ஒருவராக்கினார்.
பூசலாரின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் மன்னன் இத்தலத்தில் நிஜக்கோயில் கட்டி சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து அதற்கு இருதயாலீஸ்வரர் என்று திருநாமம் சூட்டினான்.


திருவிழா:

மகாசிவராத்திரி,பிரதோஷ வழிபாடு.

பொது தகவல்:

சுவாமி கிழக்கு நோக்கியும், அம்மன் தெற்கு நோக்கியும் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கிறார்கள். "கஜபிருஷ்டம்' என்னும் அமைப்பில் தூங்கானை மாட வடிவில் சுவாமியின் விமானம் அமைந்துள்ளது.
சுற்றுப்பிரகாரத்தில் விநாயகர், நந்திதேவர், நாகர், நடராஜர் சன்னதிகள் அமைந்துள்ளன.

திறக்கும் நேரம்:

காலை 7.30 மணி முதல் 9.30 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 7.00 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:

அருள்மிகு இருதயாலீஸ்வரர் திருக்கோயில், வீரகேரளம்புதூர்,- 627 861 திருநெல்வேலி மாவட்டம்.






No comments:

Post a Comment